Jun 8, 2011

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 04

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!


தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மேற்கத்திய அரசுகள் தூண்டுதல்

ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவைகள் கிலாஃபா அரசை வீழ்த்த வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. எனினும் இந்த முயற்சியில் திட்டமிட்ட யுத்தங்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் தொடர்ச்சியான போர்கள் ஆகியவற்றின் மூலம் கிலாஃபா அரசின் முதுகில் குத்தும் முயற்சியை அவைகள் மேற்கொண்டபோதிலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு கிலாஃபா அரசின் தற்காப்பு போர்த்திறன் காரணமாக இருக்கவில்லை. மாறாக சர்வதேச அரசியல் சூழலே பிரதான காμணமாக இருந்தது. மேலும் கிலாஃபா அரசை வீழ்த்துவதன் மூலம் கிடைக்கும் கொள்ளைப் பொருளை தங்களுக்குள் பங்கீடு செய்து கொள்வதில் மேற்கத்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவிய கருத்து வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருந்தது. செர்பியா, ஹங்கேரி, பல்கேரியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் பிரிவினையை தூண்டுவதில் ஐரோப்பிய அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றன. ஏனெனில் "சுதந்திரம்' மற்றும் "விடுதலை' போன்ற கோஷங்களில் அவைகள் பிரிவினைகளையும் "தேசியவாதம்' என்ற பெயரில் இனவாதத்தையும் தூண்டிவிட்டன.

இவ்வாறாகவே இஸ்லாத்தின் நிழலில் முஸ்லிம்களை ஆட்சி செய்து வந்த கலீஃபாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட நிலப்பரப்புகளிலும், இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மேற்கத்திய நாடுகள் விதைத்து வந்தன. குறிப்பாக அரபு மக்கள் மத்தியிலும் துருக்கி மக்கள் மத்தியிலும் அவைகள் தங்கள் வஞ்சக திட்டங்ளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தின. இஸ்தான்பூல் நகரத்திலும் இஸ்லாமிய பிரதேசத்தின் இதர பகுதிகளிலும் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் தூதரகங்கள் இந்த தூண்டுதல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. பாக்தாத், டமாஸ்கஸ்,பெய்ரூட், கெய்ரோ மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில் மேற்கத்திய அரசுகள் மேற்கொண்ட இந்த சதித்திட்டங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த பணியை நிறைவேற்றுவதற்கு இரண்டு பிரதான மையங்கள் நிறுவப்பட்டன. கிலாஃபா பிரதேசத்தின் பிரதான பகுதியில் பணியாற்றிட இஸ்தான்பூல் மையமும், மாகாணங்களில் பணியாற்றிட குறிப்பாக அரபு மொழிபேசும் முஸ்லிம்கள் வாழும் மாகாணங்களில் பணியாற்றிட பெய்ரூட் மையமும் நிறுவப்பட்டன.

கிலாஃபா அரசுக்கு எதிராக பணியாற்றுவதில் பெய்ரூட் மையத்தின் பங்களிப்பு

இஸ்லாத்தையும் இஸ்லாமிய அரசையும் வீழ்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட குஃப்ர் அமைப்புதான் பெய்ரூட் மையமாகும். இஸ்லாமிய பிரதேசத்தில் ஆழமான விளைவுகளையும் தீர்க்கமான முடிவுகளையும் ஏற்படுத்துவதற்காக நீண்டகால திட்டத்துடன் இந்த மையம் உருவாக்கப்பட்டிருந்தது. அதே வேளையில் துரிதமான விளைவுகளையும் அழுத்தமான முடிவுகளையும் ஏற்படுத்துவதற்காக குறுகிய கால திட்டத்துடன் இஸ்தான்பூல் மையம்
உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தில் குஃப்ர் சிந்தனைகளை விதைக்கும் கொடிய நஞ்சாகவும், இஸ்லாமிய உறவுகளின் அடிப்படையில்
வாழ்ந்துவந்த அந்த மக்களிடத்தில் குஃபர் சட்டங்களில் அடிப்படையில் ஏற்படும் வழிகேடான உறவுகளை ஏற்படுத்தும் குஃப்ரின் அமைப்பாகவும் பெய்ரூட் மையம் செயல்பட்டது. உண்மையில் இந்த மையம் மேற்கொண்ட பணியின் விளைவாக முதல் உலகப்போரில் காஃபிர்களோடு நடந்த யுத்தங்களில் இஸ்லாமிய அரசுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
எகிப்து ஆளுநர் முஹம்மது அலியின் மகன் இப்ராஹிம் பாஷா ஷாம் பகுதியிலிருந்து வெளியேறிய உடனேயே மேற்கத்திய காஃபிர்கள் பெய்ரூட் மையத்தில் தங்களின் இஸ்லாத்திற்கு எதிரான சதி செயல்களை துவக்கிவிட்டன. அமெரிக்கன் மிஷன் (American Vision) என்ற பெயரில் அறிவியல் மன்றம் (Scientific Association) ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடு கி.பி. 1842ல் மேற்கத்தியர்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இந்த கூட்டமைப்பு அதன் திட்டத்தின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. கி.பி. 1847ல் "கலை மற்றும் அறிவியல் மன்றம்' (Art and science association) என்ற பெயரில் மற்றொரு கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. பிரிட்டனின் கைக்கூலி என்று பெயர்பெற்ற இரண்டு கிறிஸ்தவர்கள் அந்த இரண்டு மன்றங்களையும் ஒன்றிணைந்து நடத்திச் சென்றார்கள். அவர்களின் பெயர் புட்ரோஸ் அல் புஸ்த்தானி மற்றும் நஸீஃப் அல் யாஜிஸி என்பதாகும். பிரிட்டனை சார்ந்த கலோனல் சர்ச்சில் எலிஸ்மித் மற்றும் கானிலோஸ் வான்டிக் ஆகியோர் இதன் பின்னணியிலிருந்து செயல்பட்டார்கள். திட்டவட்டமான நோக்கங்கள் எதுவுமின்றி இந்த மன்றங்கள் துவக்கப்பட்டன என்றபோதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல்வேறு அறிவியல் விஷயங்களை போதிப்பதற்காகவே இந்த மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அவை செயல்பட்டு வந்தன. பள்ளிகளில் குழந்தைகளிடம் உந்துதல் ஏற்படுத்துவது போன்றே பெரியவர்களிடம் இந்த மன்றங்கள் ஒருவகையான மேற்கத்திய கலாச்சார உந்துதலை ஏற்படுத்தின. மேற்கத்திய கலச்சாரம் மற்றும் மேற்கத்திய சிந்தனைகள் ஆகியவற்றை மக்களிடம் உருவாக்கினார்கள். இந்த மன்றங்களில் பணியாளர்கள் தீவிரமான செயல்பாடுகளை மேற்கொண்ட போதும் கணிசமான முயற்சிகளையும் உழைப்பையும் செலவழித்தபோதும் இரண்டு வருட காலத்தில் ஷாம் பகுதியில் தீவிரமாக செயல்படும் ஐம்பது உறுப்பினர்களை மட்டுமே உருவாக்க முடிந்தது. அவர்கள் அனைவரும் பெய்ரூட்டை சார்ந்த
கிறிஸ்தவர்கள் ஆவார்கள். ஆனால் இந்த மன்றங்களில் முஸ்லிம்கள் எவரும் இணைந்து பணியாற்ற முன்வரவில்லை!

ஆகவே கி.பி. 1850ல் கீழ்த்திசை மன்றம் (Eastern Association) என்ற பெயரில் மற்றொரு மன்றத்தை உருவாக்கினார்கள். பிராஞ்சு இயேசு சபை (French Jesuit) என்ற கிருஸ்தவ அமைப்பின் பங்குத் தந்தையான ஹென்றி டெப்ரினீர் இந்த மன்றத்தை நிறுவியிருந்தார். இந்த மன்றத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். கி.பி. 1857ல் மற்றொரு மன்றம் உருவாக்கப்பட்டது. இது ஒரு புதிய பாணியை பின்பற்றி செயலாற்றியது. இந்த மன்றத்தின் உறுப்பினர்களாக அரபு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்! அரபு அல்லாதவர்கள் எவரும் இதில் அனுமதிக்கப்படவில்லை! மேலும் இதன் நிறுவனர்கள் அனைவரும் அரபு கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள். பின்னர் சில அரபு முஸ்லிம்களையும், துருஸ் (Druze) மதத்தைப் பின்பற்றுபவர்களில் சிலரையும் இந்த மன்றத்தில் இணைவதற்கு ஒப்புகொள்ள வைத்தார்கள். ஏறத்தாழ 150 நபர்கள் இதில் இணைந்து செயல்பட முன் வந்தார்கள். துருஸ் மதத்திலிருந்து முஹம்மது அர்ஸலான் என்பவரும் இதர முஸ்லிம்களிலிருந்து ஹூஸைன் பைஹம் என்பவரும் கிறிஸ்தவர்களிலிருந்து இப்ராஹிம் அல் யாஸிஜி, புட்ரோஸ் அல் புஸ்த்தானி மற்றும் அவரது மகள் ஆகியோர் நிர்வாக சபையின் பிரதானபொறுப்புகளை வகித்து வந்தார்கள். இப்ராஹிம் அல் யாஸிஜியும் புட்ரோஸ் அல்புஸ்தானியின் மகனும் மேற்கத்திய கலாச்சாரத்தை முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கும் திட்டத்துடன் செயல்பட்டார்கள். இந்த மன்றம் அடைந்த வெற்றியின் காரணமாக ஊக்கம் பெற்ற காஃபிர்கள் தேசியவாதம் என்ற பெயரில் இனவெறியையும், விடுதலை, சுதந்திரம் என்ற பெயரில் பிரிவினைவாதத்தையும் முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கி நேரடி செயல்பாட்டு திட்டங்களை வகுத்தார்கள். அறிவியல் விஷயங்களை போதனை செய்யும் சாக்கில் தந்திரமாக குஃப்ரை பிரச்சாரம் செய்வதைவிட நேரடியாகவும் வெளிப்படையாகவும் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வது சிறந்தது என்று காஃபிர்கள் கருதினார்கள். கி.பி. 1875ல் பெய்ரூட் பிரோட்டஸ்டன் கல்லூரியின் மாணவர்கள் ஐவர் இணைந்து இரகசிய மன்றம் (Secret Association) ஒன்றை நிறுவினார்கள். கிறிஸ்தவர்களாக இருந்த இவர்கள் சிறு எண்ணிக்கையில் மக்களை ஒன்று திரட்டினார்கள். அரசியல் சிந்தனையின் அடிப்படையில் இயங்குவதற்காக இந்த மன்றம் உருவாக்கப்பட்டது. ஓர் அரசியல் இயக்கமாக அது உருவாக்கப்பட்டது என்றபோதும் அரபு தேசியவாத சிந்தனைகளின் அடிப்படையில் இயங்கியது. அரபு தேசியவாதத்தின் அடிப்படையில் இஸ்லாமிய பூமியில் நிறுவப்பட்ட முதல் அரசியல் இயக்கமாக இது கருதப்பட்டது. அரபு மக்களின் நலன்களை பேணுதல், அரபு மக்களின் பெருமை மற்றும் அரபு தேசியவாதம் ஆகிய கோஷங்களை இந்த மன்றம் முன்வைத்தது. உஸ்மானிய கிலாஃபா அரசுக்கு எதிராக மக்களிடம் வெறுப்பை தூண்டிவிட்டதோடு அதை துருக்கியர்களின் அரசு என்றும் இந்த மன்றம் பிரச்சாராம் செய்துவந்தது.

மார்க்கத்திலிருந்து அரசியலை பிரித்து வைக்கும் மதச்சார்பின்மை கொள்கையை நிலை நாட்டிடவும் அரபு மக்களின் ஒற்றுமை என்ற பெயரில் முஸ்லிம்களிடம் இனவாதத்தை தூண்டிவிடவும் இஸ்லாமிய அகீதாவின் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை அரபு தேசியவாதத்தின் மீது முழுமையாக திருப்பி விடுவதற்காகவும் இந்த இயக்கம் செயலாற்றியது. இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், இரகசியமான முறையில் மக்களிடம் பிரசுரங்களை விநியோகித்து வந்தார்கள். உஸ்மானிய கிலாஃபா அரசை துருக்கியர்களின் அரசு என்றும், அரபு மக்களிடமிருந்து துருக்கியர்கள் கிலாஃபத்தை பலவந்தமாக எடுத்துக்கொண்டார்கள் என்றும், ஷரியாவின் புனிதமான சட்டங்களின் வரம்புமீறியதன் மூலம் தீனை தவறாக பிரயோகித்தார்கள் என்றும் அந்த பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை கூறியவர்களும் இந்த இயக்கத்தை வழிநடத்தியவர்களும் தங்கள் உள்ளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய வெறுப்பை சுமந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மன்றங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின் விளைவாக இஸ்லாமிய பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் தேசியவாத சிந்தனை பரவத்தொடங்கியது. மேலும் தேசியவாதம் என்ற போர்வையில் இனவெறி தூண்டுதல்களும் பிரிவினைவாத பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் விவகாரங்களை கண்டறிவதற்காக உளவாளிகள் பலரை மேற்கத்திய அரசுகள் தேர்வு செய்து களமிறக்கியிருந்தன. மேலும் முஸ்லிம்களின் சிந்தனைகளை சேதப்படுத்துவதற்காகவும், அவர்களின் இஸ்லாமிய உணர்வுகளை அழிப்பதற்காகவும்தான் பெய்ரூட் மையம் உருவாக்கப்பட்டிருந்தது. எனவே இந்த இரகசிய இயக்கம் அறிவுரீதியான நாசத்தை முஸ்லிம்களிடம் உருவாக்குதலில் கணிசமான வெற்றி அடைந்திருந்தபோதிலும் அரசியல்
விளைவுகளை ஏற்படுத்துவதில் வெற்றிபெறவில்லை.

தொடரும்...

Sources From warmcall.blogspot.com

No comments:

Post a Comment