Nov 26, 2011

ஹிஜ்ரத் வருடம் 1433 -நீங்களும் நாங்களும் சாதித்தது என்ன?


ஹிஜ்ரி 1432 ஆம் ஆண்டு நம்மிடையே விடை பெற்று புதிய வருடமாக 1433 பிறந்து விட்டது.அந்த ஞாபகமே நம்மில் பலருக்கு இல்லை. ஹிஜ்ரி வருடம் என்றால் என்ன என்று தெரியாத முஸ்லிம்கள் பலர் இருக்கின்றார்கள். ஹிஜ்ரி புது வருடக் கொண்டாட்டங்கள் என்ற ஒன்று இல்லை எனினும், அந்த வருடம் பிறக்க இருப்பதையாவது நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றோம் என்றால், அத்தகைய நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சரி! தெரிந்து வைத்திருப்பவர்கள் தான் என்ன சாதித்து விட்டார்கள் என்றால், அந்த ஹிஜ்ரி வருடங்கள் ஓடி ஓடி இளைத்து, நூலாகி நிற்கின்றதே! எதற்காக இந்த ஹிஜ்ரி வருடம் உருவானது, யார் உருவாக்கியது, அதன் பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இந்த சமுதாயம் என்றைக்கு சிந்தித்துப் பார்க்கப் போகின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் கனமான சுமை வந்து அழுத்துகின்றது.

ஆனால் ஹிஜ்ரி பிறந்து 1432 ஆண்டுகள் முடிந்து விட்டதே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏன் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அதன் முக்கியத்துவம் என்ன? அந்த முக்கியத்துவம் இன்றைக்கு உணரப்பட்டிருக்கின்றதா?

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்பிய அந்த சமூக அமைப்பு இன்றைக்கு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றதா? இல்லையெனில், அந்த சமூக அமைப்பை கட்டியமைப்பது யார் பொறுப்பு? அலட்டிக் கொள்ள வேண்டியதொரு பிரச்னை நம் முன் நிற்கின்றதே என்பது பற்றி இந்த சமூகம் எப்பொழுது தனக்குள் விவாதித்துக் கொள்ளப் போகின்றது..! அந்த விவாதம் தலையெடுக்கும் காலம் தான் இந்த சமூகத்தின் விடிவுக்கான காலமாக இருக்கும். ஆம்! எப்பொழுது இந்த முஸ்லிம் சமூகம் சமுதாய ரீதியாக ஒன்றுபட்டு, ஒரு இஸ்லாமிய ஆட்சிக்கான மறுமலர்ச்சியைக் காணுகின்றதோ அன்றைய தினம் தான் இந்த உலகத்திற்கும் கூடிய விடிவு நாளாகும்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்து மதீனாவிற்குச் சென்றதைத் தான், ஹிஜ்ரத் என்று வரலாறு கூறுகின்றது.

அப்படி நோக்கினால், அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லை..! இல்லை..! அது முதல் கஃபா என்ற ஆலயத்தைச் சுமந்து கொண்டிருக்கின்ற பூமி! எனவே அதனை வெறுத்திருக்க நியாயமில்லை.

அந்த மக்கள் தந்த துன்பத்தைக் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். தன்னை குருதி சொட்டச் சொட்ட அடித்து விரட்டிய தாயிஃப் வாசிகளைக் கூட அண்ணலார் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லையே! எனும் போது, மக்கா வாசிகளையும் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். அப்படியானால் எதை வெறுத்தார்கள்?

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தினைச் செயல்படுத்தும் ஒரு சூழல் மக்காவில் உருவாகவில்லை. அந்த உருவாக்கத்துக்குத் தொடர்ந்தும் குறைஷித் தலைவர்கள் தடையாகவே இருந்து வந்தார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களின் சாத்வீகமான அணுகுமுறைகள் அத்தனையும் அந்தத் தலைவர்களிடம் தோற்றுப் போயின. அவர்களோடு போரிடுவதற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கியிருக்கவுமில்லை. எனவே அந்த மக்காவை விட்டு, தாஇபுக்குப் போனார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவில் உருவாக்க முடியாமல் போன சூழலை தாயிஃப் மக்கள் உருவாக்கித் தரலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. ஆனால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அண்ணலார் (ஸல்) அவர்கள் எதிர்பார்த்த சூழல் இது தான். அல்லாஹ்வுடைய தீனை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், நிழல் போல் தன்னைத் தொடரும் ஒரு (குழுவல்ல) சமூகம் தேவை. அவர்கள் தனக்கு முற்று முழுதாகக் கட்டுப்பட வேண்டும். தனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்லாத்துக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். தீனுல் இஸ்லாத்தின் தேவைகளை அவர்கள் தமது மனைவி பிள்ளைகளின் தேவைகளைப் போல, அல்லது அவற்றை விட மேலாகக் கருத வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் மக்காவில் உருவாகவில்லை. தாஇபிலும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த சூழல் மதீனாவில் மெல்ல மெல்ல உதயமாகியது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு பயணமாகியது என்பது அவர்கள் எதிர்பார்;த்த அந்த சூழல் உருவாகிய பின்பு தான். மதீனாவில் இந்த சூழல் உருவாக ஏறத்தாழ மூன்று வருடங்கள் எடுத்தன.

அங்கு இந்த சூழல் உருவாகி விட்ட ஒரே காரணத்தால் நபிகளார் மதீனாவுக்குப் போய்விடவுமில்லை. ஏற்கனவே கூறப்பட்ட நபிகளாரின் எதிர்பார்ப்புகளை தவறாது நிறைவேற்றுவோம் என்று மதீனாவாசிகள் அண்ணலாருக்கு உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த பின்னர் தான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குப் போகச் சம்மதித்தார்கள். அந்த உறுதிப்பிரமாணம் தான் வரலாற்றில் (பைஅதுல் அகபா) அகபா உடன்படிக்கை எனப்படுகிறது. நபிகளாரின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று முதன் முதலில் பைஅத் செய்த சமூகம் மதீனா சமூகமே! அதனால் அன்சார்கள் என்ற அழியாப் பெயரை அவர்கள் வரலாற்றில் தம்வசமாக்கிக் கொண்டார்கள்.

இங்கு ஒரு கேள்வி எழுவதற்கு இடமிருக்கிறது. மக்காவாசிகள் அதாவது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற உத்தமர்கள் நபிகளாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயாராக இருக்கவில்லையா?

உண்மையில் மதீனாவாசிகளை விட இவர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர். அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறினால் அதனையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், இஸ்லாத்தின் முதிர்ச்சி அவர்களை விட இவர்களுக்கே இருந்திருக்கிறது.

என்றாலும், மக்கா முஸ்லிம்கள் ரஸுலுல்லாஹ் எதிர்பார்த்த ஒரு சமூகமாக இருக்கவில்லை. அவர்கள் ஆங்காங்கே சிதறி வாழும் தனிமனிதர்களைக் கொண்ட ஒரு குழுவாகவே இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூக அமைப்பில் இத்தகைய குழுக்களுக்கு அதிகாரமில்லை. சமூகம் சமூகமாக வாழ்ந்த கோத்திரங்களுக்கே அதிகாரம் இருந்தது. எனவே அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்பதை, ரஸுலுல்லாஹ் அதிகாரம் இல்லாதவர்களிடம் கேட்கவில்லை. மக்காவில் அதிகாரம் இருந்த குறைஷிக் கோத்திரம் இறுதி வரை ரஸுலுல்லாஹ்வுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இங்கு தாஇகள் ரஸுலுல்லாஹ்விடமிருந்து ஒரு முன்மாதிரியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. சிதறிய தனிமனிதர்களை ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைப்பதனால் இஸ்லாத்தின் முற்றுமுழுதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட முடியாது. சமூகத்தை உருவாக்குவதனால் மட்டுமே கூடுதலான இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். எனவே குழு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு தாஇகள் செயல்படலாகாது. சமூக உருவாக்கமே தாஇகளின் செயல்பாட்டுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்த வகையில் தாஇகள் சமூகத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கலாகாது. அது இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை சிதைக்கும் ஒரு முயற்சியாகும். ஊரை இரண்டாக்காதீர்கள் என்று நாம் கூறும் போது அதனைப் பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் இது. ஊரோடு ஒத்தோடுவதற்கான அழைப்பு என்று தவறாக அதற்கு விளக்கம் கற்பிக்க முனைகிறார்கள். இந்த தவறான விளக்கம் ரஸுலுல்லாஹ்வின் ஒரு சுன்னாவைப் பரிகாசமாக்கி விடுகிறது.

ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் எதிர்பார்ப்புகளை முற்று முழுதாக நிறைவேற்றும் ஒரு சமூக சூழலை அன்னாருக்கு பெற்றுக் கொடுத்தது. மதீனா நபிகளாருக்கு ஏற்படுத்திக் கொடுத்த அந்த சமூக சூழலை மக்காவில் முயன்றும் பெற முடியாமல் போனதே மக்காவை நபிகளார் துறக்கக் காரணம். இந்த வகையில் மக்காவை அவர்கள் வெறுக்கவில்லை. மக்காவின் மனிதர்களையும் அவர்கள் வெறுக்கவில்லை. ஆனால் மக்காவின் சூழலை வெறுத்தார்கள் என்று கூறலாம். அதுவே ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் இங்கு மற்றுமொரு சுன்னாவை எமக்குக் கற்றுத் தருகிறது. இஸ்லாத்தை செயல்படுத்த முடியாத ஒரு சூழல் என்பதன் பொருள், சமூகம் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத சூழல் என்பதாகும். நபிகளாரின் வாழ்வில் மக்கா இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

இத்தகையதொரு நிலை இன்றைய தாஇகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விடைதேடி அவர்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. நபிகளாரின் சுன்னா வழிகாட்டுகிறது. அதனைப் பின்பற்றலாம்.

உதாரணத்திற்கு ஒரு கிராமம் இஸ்லாத்தின் எழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாஇகள் என்ன செய்ய வேண்டும்? மக்காவில் நபிகளார் என்ன செய்தார்களோ அதனைச் செய்யலாம்.

நபிகளார் மக்காவில் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதித்தார்கள். எதிர்ப்பு வந்தது. அழகிய பொறுமையைக் கைக் கொண்டார்கள். (அழகிய பொறுமைக்கும் ஆற்றாத பொறுமைக்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது). தளர்ந்து விடவில்லை. தலைவர்கள் சந்தித்தார்கள். பாமரர்களை சந்தித்தார்கள். தம்மை ஏற்று விசுவாசம் கொண்டவர்களுக்கு பயிற்சிகைள வழங்கினார்கள். துன்பம் செய்வோருக்கு நல்லன செய்தார்கள். அவர்களைத் தூற்றவில்லை. துன்பம் செய்யவுமில்லை. சாபமிடவில்லை. சாடவுமில்லை. அடித்து உடைத்து நொறுக்கவுமில்லை. சிலைகள் மூடியிருந்த கஃபாவை அவர்கள் பகிஷ்கரிக்கவுமில்லை. ஈமான் கொண்டவர்களை அவர்களது வீடுகளிலிருந்து பிரித்து விடவுமில்லை. அல் மவ்த்து பில்குர்பா எனக் குர்ஆன் கூறும் உறவினர்களின் அன்பை அவர்கள் வெட்டிவிடவுமில்லை. தன்னை ஏற்று விசுவாசம் கொள்ளாத தனது சிறிய தந்தை அபூதாலிபின் பாதுகாப்பை அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஷிஅபு அபீதாலிப் எனும் பள்ளாத்தாக்கில் மூன்று வருடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட போது அதனை எதிர்த்தும் போரடவில்லை. ஓரிரவிலும், ஒரு பகலிலும் மாற்றத்தைக் கொண்டு வர அவர்கள் எத்தணிக்கவுமில்லை.

அண்ணலாரின் இந்தப் போக்கின் ஒவ்வொரு ஏட்டிலும் ஒரு தாஇக்குப் படிப்பினை இருக்கிறது. அதுவும் அண்ணலார் காபிர்களுக்கு மத்தியில் இந்தப் போக்கைக் கடைபிடித்தார்கள். இன்றைய தாஇகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப் போக்கை கடைபிடிக்க முடியாதா?

அண்ணலாரின் இந்தப் போக்கு மக்கா இரத்தக் கறை படியாமல் பாதுகாத்தது. மக்காவில் ஒன்றுக் கொன்று எதிராக இரண்டு குழுக்கள் மோதும் நிலை இதனால் தவிர்க்கப்பட்டது. இஸ்லாத்தை எதிர்த்து நின்றவர்களின் உள்ளங்களில் தீராத ஒரு பகைமை வளர்ந்து விடாமல் நபிகளாரின் இந்தப் போக்கு அணை போட்டது. ஒருநாள் அவர்களோடு ஒன்றிணையலாம் என்ற நம்பிக்கை இந்தப் போக்கை உரம் ஊட்டியது.

நபிகளாரின் இந்த சுன்னாவை இன்றைய தாஇகள் ஏன் விளங்கிக் கொள்ளாதிருக்கிறார்கள்? என்பது புரியவில்லை. விளங்கிக் கொள்ளாதிருந்தாலும் பாரவாயில்லை. ஊரோடு ஒத்தோடுதல் என்று இதற்குத் தவறான விளக்கம் தராதிருந்தால்!

நபி (ஸல்) அவர்கள் இந்தப் போக்கை பதின்மூன்று வருடங்களாக மக்காவில் பரீட்சித்தார்கள். மாற்றம் ஏற்படவில்லை. அதற்காக அவர்கள் தனது போக்கை மாற்றவுமில்லை. செய்த மாற்றம் என்னவென்றால் மாற்றம் ஏற்பட்டிருந்த ஒரு இடத்தை (மதீனாவை) நோக்கித் தன்னை மாற்றிக் கொண்டார்கள். அது தான் ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் மற்றுமொரு குழுவின் தலையிடியை நபிகளாருக்குத் தந்தது. அவர்கள் தாம் யூதர்கள். மக்காவில் குறைஷிகளோடு நபிகளார் எந்த அணுகுமுறையைக் கையாண்டார்களோ அதே அணுகுமுறையை யூதர்களுடனும் கையாண்டார்கள். சற்று வித்தியாசமாக! அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தி உடன்படிக்கை எழுதி, நாங்களும் நீங்களும் சமாதானமாக வாழ்வோம் என்றார்கள். ஆனால் யூதர்கள் எப்போதாவது சமாதானத்தை விரும்பினார்களா? அவர்கள் நயவஞ்சகமாக சமாதானத்தை முறித்துக் கொண்டார்கள். எனவே மீண்டும் அவர்களோடு சற்று வித்தியாசமாக நடக்க வேண்டிய ஏற்பட்டது. நடவடிக்கை எடுத்தார்கள்.

மக்காவில் உடன்படிக்கையில்லை. எனவே நடவடிக்கையுமில்லை. இங்கே உடன்படிக்கை இருந்ததனால் நடவடிக்கையும் இருந்தது. இந்த அணுகுமுறை உலகத்தில் அன்றிலிருந்து இன்று வரை அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அணுகுமுறை மதீனாவில் ஒரு பிளவை ஏற்படுத்தவில்லை.

மக்காவில் சாத்வீகத்தால் செய்த அதே வேலையை அண்ணலார் மதீனாவில் சட்டத்தால் செய்தார்கள். இந்த அணுகுமுறை இஸ்லாத்தை நிர்மாணிக்கும் முயற்சியின் அத்திவாரமாகும். மட்டுமல்ல, ரஸுலுல்லாஹ் ஈட்டிய வெற்றிகளின் இரகசியமும் இதுவாகத்தானிருக்கிறது.

தாஇகளே! அழைப்பாளர்களே! நபிகளாரின் சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறோமே, மக்காவையும் மதீனாவையும் முன்மாதிரியாக வைத்து நபிகளாரின் சுன்னாவை கிராமங்கள் தோறும் பின்பற்ற எங்களால் முடியாதா?

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு


உலக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.

ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வுமின்றி சாதாரணமாகக் கடந்து செல்வதற்குக் காரணம் இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தைச் சரியாக உணராததும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பேணுவதன் கட்டாயத்தை அறியாததுமாகும்.

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:
இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள.

இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.
முஹர்ரம் மாதப் படிப்பினைகள்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.

யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆனால் இன்று நடப்பது என்ன?

பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.
பெரும்பாலான முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைப் படுத்தும் அல்லது நினைவு படுத்தும் முகமாகப் பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டிதான்.
பெரும்பாலான முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறைதான்.
ஷியா முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவு கூரும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள்தாம்.
இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.

இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாதத் துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

Nov 21, 2011

நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல இஸ்லாமிய ஷரியாவை தான்!!!

எகிப்தில் மாற்று ஆட்சிமுறைக்கான ஒரு மாற்றத்தை மக்கள் கேட்டனர் ஆனால் நடந்தது என்ன? ஒரு அநீதமான் ஆட்சி போய் மற்றொரு அநீதமான ஆட்சி வந்துவிட்டதை கண்டு முஸ்லிம் உம்மத் மீண்டும் கொந்தளிப்ப.நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல இஸ்லாமிய ஷரியாவை தான்....

எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.ஆட்சி அதிகாரம் ராணுவத்தின் கையில் வந்தது. இதற்கிடையில் இந்தமாத இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.ஆனால் சட்ட மறுசீரமைப்பு மற்றும் ராணுவ ஆட்சி போன்றவற்றிர்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

இது கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. கெய்ரோ, அலெக்சாண்டிரியா ஆகிய நகரங்களில் சுமார் 1லட்சத் துக்கும் மேல் கூடிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கி தொடர்ந்து போராடினர். இதற்கு ராணுவ ஆட்சியாளர் கள் அனுமதிக்க வில்லை. கூடாரத்தை அகற்றி விட்டு தக்ரீர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் எஸ்சாம் ஷராப் உத்தரவிட்டார். ஆனால், இதை போராட்டக்காரர்கள் கேட்கவில்லை.

இதையடுத்து நேற்று இரவு தக்ரீர் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடா ரங்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்குமீண்டும் கலவரம் வெடித்தது. அதில் சுமார் 700 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இப்போராட்டம் கெய்ரோவை தொடர்ந்து தற்போது அலெக்சாண்டி ரியா, சூயஷ் நகரங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது.

Nov 9, 2011

எப்போது எழுவது? இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு முடிவே கிடையாதா?

அபூ அய்யூப் முஹம்மது

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்துக்கு புதிய விடயமல்ல.ஏனெனில் சத்தியத்துக்கும்அசத்தியத்துக்கும் இடையிலான போராட்டங்கள் மறுமை நாள் வரையும் இருக்கும் என்பது இறைவன் வகுத்துள்ள வழி முறையாகும். இந்த எதிர்ப்புகளுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்பதையும், இந்த வழிகாட்டலின் படி பதில் கொடுத்த முன்னோர்களின் வரலாறு என்ன என்பதையும் மீட்டிப் பார்ப்பது இன்றைய முஸ்லிம்கள் மீதுள்ள கடமையாகும்.

இஸ்லாத்தின் எதிரிகள் குறிப்பாக மேற்குலகம் இஸ்லாமிய சட்ட திட்டங்களையும் எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது (ஸல்)அவர்களையும் திட்டமிட்ட ரீதியில் காலத்துக்குக் காலம் அவமதித்து வருவது உலகறிந்த உண்மையாகும். இதன் தொடரில் (கடந்த வார இறுதியிலும் நேற்றும் 03-11-2011)பிரான்ஸில் எமது நேசத்துக்குரிய தூதர் முஹம்மது (ஸல்)அவர்களை நையாண்டி செய்து’ஷார்லி எப்தோ’( Charlie Hebdo) சஞ்சிகை செய்திகளை வெளியிட்டிருந்ததைக் கண்டோம்.

கடந்த பல வருடங்களாக மேற்குலகிலே நமக்குப் பழகிப்போன இஸ்லாத்துக்கெதிரான தொடர்ச்சியான தாக்குதல்களின் இன்னொரு வெளிப்பாடே இது. ஹிஜாபுக்கு எதிரான தாக்குதல்கள், நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை மிக மோசமாக சித்தரித்த கேலிச்சித்திரங்கள், அல் குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகும். இவை தான் மேற்குலக அரசியல் வாதிகளால் சகிப்புத்தன்மை,மிதவாதம் என சிலாகித்துப் பேசப்படும் விழுமியங்களின் நிஜமான முகங்களாகும்.

இது போன்ற தாக்குதல்கள் வரும் போது, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இதன்மூலம் என்ன நாடப்படுகிறது? இஸ்லாமிய ரீதியில் மிகச்சரியான பதிலை எப்படிக் கொடுப்பது? ஆகிய அம்சங்களை அறிந்து செயற்படுவது மிக அவசியமாகும்.

மேற்குலகின் மிக முக்கிய எதிர்ப்பார்ப்புகளில் ஒன்றாக ‘கருத்துச் சுதந்திரம் என்ற பெயரால் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி, மேற்குலகின் பெருமானங்களையும் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வைத்தல்’ என்ற விடயம் காணப்படுகின்றது.அதாவது அவமதித்தல் என்பதை நாம் விரும்பாதபோதிலும், கருத்துச்சுதந்திரம் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அவமதிப்பதும் நிந்திப்பதும் அடுத்தவரின் உரிமையாகும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கு அப்பால் சென்று, நாம் மிகவும் புனிதமாக மதிக்கின்ற அம்சங்கள் தான் நிந்திக்கப்பட்டாலும் அதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதனை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது என்பதற்கான நியாயங்களைப் பார்ப்போம்.

முதலாவது: இன்று மதச்சார்பற்றவர்களாலும், மற்றோராலும் இஸ்லாம் நிந்திக்கப்படுவது போன்று யாருடைய புனித நம்பிக்கைகளையும் விளையாட்டுத்தனமாகவேனும் அவமதிப்பதற்கு ஒரு போதும் இஸ்லாம் அனுமதித்ததில்லை.

இரண்டாவது: தீமையைத்தடுத்தல் தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்களைத் தொட்டும் வந்துள்ள மிகப் பிரபல்யமான ஹதீஸிலே தீமையானது கையாலோ நாவாலோ மாற்றப் படாத போது குறித்த தீமையை உள்ளத்தால் வெறுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். இதன்படி தீமையை உள்ளத்தால் வெறுத்தல் என்ற ஈமானின் மிகப் பலவீனமான கட்டத்தையும் தாண்டி இஸ்லாத்தை நிந்திப்பதற்கு அனுமதிக்கின்ற வரம்பில்லாத கருத்துச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வது அடிப்படை ஈமானையே பாதிக்கின்ற விடயமாகும். இதனை ஏற்பது ஹராமாகும்.

மூன்றாவது: பேச்சுச் சுதந்திரம் என்ற மேற்குலக மாயை சமூகத்திலுள்ள அனேக அநீதிகளுக்கு காரணமாக அமைந்து விட்டதைக் காண முடிகிறது. ஐரோப்பாவிலே நபி ஈஸா (அலை)அவர்கள் கேலி செய்யப்படுவது ஒரு சாதாரண விடயமாகும். இத்தகைய அவதூறுகளை மேற்குலகம் குறிப்பாக கிறிஸ்தவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆயினும் மனித வரலாற்றில் மிகச்சிறந்த மாமனிதர்களான இவர்களையே கேலி செய்யும் அதே சமூகம் தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் போன்றோர் அவமதிக்கப்படும் போது கவலைப்படுகிறது. இப்படி ஒரு முரண்பாடான நிலைப்பாடு இவர்களிடம் காணப்படுகிறது.

இச்சமூகத்தைப் பொறுத்தவரையில் மட்டுப்படுத்தப்படாத பேச்சுச் சுதந்திரம் என்பது பிறரை அவமரியாதை செய்வதற்கான சுதந்திரமேயாகும். இவ்வாறான ஒரு சமூகத்தில் அமைதியோ சாந்தியோ நிலவ முடியாது. ஐரோப்பிய வரலாற்றை மீட்டிப் பார்க்கின்ற போது அவர்களால் சிறுபான்மை தொடர்பாக சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள முடியவில்லை என்பது புலனாகின்றது. மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற உரிமையானது மற்றவர்களை அவமதித்து அவர்களை ஒடுக்கும் உரிமையாக புது வடிவம் எடுத்திருப்பதை ஐரோப்பாவின் புதிய வரலாற்றிலே காணலாம்.

காலத்துக்குக் காலம் முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதற்கென்று பல கீழ்த்தரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஆத்திரமூட்டலுக்கு எதிராக ஏதாவது வன்முறைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

அப்படியாயின் இது தொடர்பாக முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1.இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் நலனைப் பாதுகாக்கின்ற கிலாபா அரசொன்று இல்லாத நிலமையில் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் நற்பெயரையும் காப்பது சாத்தியமில்லை என்பதை முஸ்லிம்கள் முதலில் உணர்ந்தாக வேண்டும்.

கிலாபா ஆட்சி இருந்த போது அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் கேலி செய்வதற்கு சகலரும் மிகவும் தயக்கம் காட்டியே வந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணலாம். பின்வரும் வரலாற்று நிகழ்வு இதற்கு சிறந்த சான்றாகும்.

’1889ல் முஹமட்’ எனும் பெயரில் இஸ்லாத்துக் கெதிரான மேடை நாடகமொன்றை பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த கவிஞரும் நாடக ஆசிரியருமான ‘ஹென்றி த போர்னியர்’ என்பவர் எழுதினார்.1890 ஆம் ஆண்டில் உஸ்மானிய கிலாபத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரான்ஸின் பிரதம மந்திரி ‘சார்ல்ஸ் த பிரகினண்ட்’ இந்த நாடகத்தைத் தடை செய்தார்.

மேற்படி நாடகத்தின் ஒத்திகை அரங்கேறிக் கொண்டிருக்கும் போது துருக்கிய பத்திரிகை யொன்று பிரான்ஸ் பத்திரிகையொன்றை மேற் கோள் காட்டி ‘ஹென்றி த போர்னியர்’ரின் அடுத்த வெளியீடாக ’1989ல் முஹமட்’ எனும் நாடகம் வரப் போகின்றது என்ற செய்தியை மீள் பிரசுரம் செய்திருந்தது.

இந்த நாடகத்தின் மூலம் போர்னியர் தனது அறியாமையையும் காரணமில்லாமல் முஸ்லிம்கள் மீது வைத்துள்ள காழ்ப்புணர்ச்சியையும் பாரபட்சத்தையும் வெளிக்காட்டியிருந்தார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் பிரான்ஸில் துருக்கியின் தூதுவராக இருந்த இஸ்ஸத் பாஷா விடம் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் மீதான தாக்குதலோ முஸ்லிம்களின் மதிப்புக்குரிய நம்பிக்கைகளோ இதில் உள்ளடக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தது.

பாரசீகத்தில் இறந்தவர்கள் மீது இரங்கல் என்ற அடிப்படையில் நபி முஹம்மது(ஸல்) அவர்களும் ஷீஆக்களின் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களும் நாடகங்களில் சித்தரிக்கப் படுகிறார்களே என்ற வாதத்தை ‘போர்னியர்’ சுட்டிக்காட்டினார்.இதே வேளை அல்ஜீரியாவிலும் டியுனீஸயாவிலும் அவரது நாடகம் தடை செய்யப்படுவதை ஏற்றுக் கொண்டார். இருந்தாலும் இந்த வாதங்கள் யாவும் துருக்கிய நிர்வாகிகளைத் திருப்திப் படுத்துவதில் தோல்வி கண்டன.

இதனைத் தொடர்ந்து 1890 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பிரதம மந்திரி ‘சார்ல்ஸ் த பிரகினண்ட்’ இந்த நாடகம் வெளிவருவதை பிரான்ஸிலும் தடை செய்தார்.இந்தத் தடை கலீபா சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது..

இந்த மேடை நாடகத்தில் ஒரு பெண்ணுக்காகவும் கிரிஸ்த்தவ மதத்தின் மீது கொண்ட கால்ப்புணர்ச்சி காரணமாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டிருந்தது. இது நிச்சியமாக முஸ்லிம்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற விடயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த இஸ்லாமிய எதிர்ப்பு மேடை நாடகத்தை முதலில் எதிர்க்கும் போது துருக்கிய தூதுவரோ கலீபாவோ நாடகத்தைப் பார்த்ததட்கு எந்த ஆதாரமும் இல்லை.குறைந்த பட்சம் படித்து அறிந்திருப்பார்கள்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் ‘பிரான்ஸ் அரசின் சரணடைதல்’ துருக்கிய கிலாபத்தின் அழுத்தத்தின் காரணமாகவே நடை பெற்றது என்பதாகும்.

இந்த அழுத்தத்தின் காரணமாக சரணடைதல் என்ற விடயம் நம்பக் கூடியதாக இருக்கின்றது என்பதை ,மார்டினோ’ என்பவர் அக்கால அரசியல் நிலைமையோடு ஒப்பிட்டுக் கருத்துக் கூறியுள்ளார். அதாவது 1889ம் ஆண்டு ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியம் இஸ்தனபூல் மற்றும் கிட்டிய கிழக்கில் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ் செய்கின்ற எந்தச் செயலும் துருக்கி ஜெர்மனியோடு கரம் கோர்க்க வழி செய்து விடக்கூடாது என்பதில் பிரான்சுக்கு பேரச்சம் இருந்தது. மேலும் பிரான்சுக்கும் வட ஆபிரிக்காவின் அதிகமான முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பும் இந்த சரணடைவுக்கு அழுத்தம் கொடுத்த காரணியாக இருந்தது என்பதற்கு மிகுந்த இடம் பாடு உள்ளது.

இந்த வரலாற்றுச் சம்பவத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

முதலாவது: இஸ்லாத்துக்கெதிரான எந்தச் செயலையும் தட்டிக் கேட்டல் இஸ்லாமிய ஆட்சியில் இருப்போரின் பணியாகும்.

இரண்டாவது: எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்ற அளவுக்கு பலம் பொறுந்தியதாக இஸ்லாமிய ஆட்சி இருப்பது அவசியம்.

மூன்றாவது: உஸ்மானிய சாம்ராஜ்யம் அதன் இறுதிக் கட்டத்தில் பல வகையிலம் பலவீனமான நிலையில் இருந்தது என்றிருந்தாலும் கிலாபத்தும் கலீபாவும் செய்ய வேண்டிய விடயங்கள் ஆட்சியாளர்களுக்கு நன்கு பரிட்சயமாக இருந்தன.

நான்காவது: இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காக்கின்ற பணி கலீபா மூலம் முன்னெடுக்கப்படுவது இஸ்லாமிய அடிப்படை என்பதும் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் நிறை வேற்றப்பட்ட கடமை என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இன்று அலைகள் போன்று தொடராகவும் இரகசியமாகவும் பரகசியமாகவும் தொடுக்கப்படுகின்ற சிந்தனா ரீதியான, இராணுவ ரீதியான தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் கிலாபா ஆட்சியின் மூலம் பதில் அளிப்பதே நிரத்தரத் தீர்வாகும். முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் காக்கக் கூடிய கலீபாவை முஸ்லிம்கள் ஏற்படுத்தாமல் மேற்கொள்கின்ற எந்தப் பணியும் நிரந்தரத் தீர்வாக இருக்காது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து செயற்பட இன்றே முன் வரவேண்டும்.

மேற்குலக தலைவர்களைப பொறுத்தவரையில் சுரண்டலையும் ஆக்கிரமிப்பையும் ஊக்குவிக்கின்ற ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றை தமது விழுமியங்கள் எனக் கூறிக்கோண்டு எல்லா நிலையிலும் அவற்றைக் காப்பதற்காக பாடுபடுகின்றார்கள். எமது அருமை நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் கண்ணியத்தையும் இஸ்லாத்தின் பெருமையையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய எமது ஆட்சியாளர்களோ முஸ்லிம் தலைவர்களோ தங்களது நலனுக்காக மட்டும் குரல் கொடுத்து விட்டு மௌனமாகி விடுகின்றனர். நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் கண்ணியத்தையும் இஸ்லாத்தின் பெருமையையும் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்க வேண்டிய எமது ஆட்சியாளர்கள் எங்கே?என்ற கேள்விக்கு விடை காண முடியாமல் முஸ்லிம்களாகிய நாம் பல ஆண்டுகளைக் கடந்து விட்டோம்.

ஆகவே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கின்ற ஒரு கிலாபாவை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் முழு ஆர்வத்துடன் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டும். இது போன்ற இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புதிய தாக்குதல்கள் வரும் போதெல்லாம் கிலாபாவை நிலைநாட்டுவதற்கான எமது முயற்சிகளைப் பல மடங்காகப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

2. இறைத்தூதர்களையே மதிக்காத ஒரு சமூகத்திலே எந்த ஒரு சாதாரன மனிதனுக்கும் மரியாதை கிட்டும் என எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே மேற்குலகிலே குற்றச் செயல்கள் மலிந்த, பாதுகாப்பும் அமைதியும் இல்லாத ஒரு சூழல் உருவாகியுள்ளது என்ற யதார்த்த நிலையை விவாதங்கள, கலந்துரையாடல்கள, கட்டுரைகள, வெகுஜன தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். தேவையேற்பட்டால் வீதிகளில் இறங்கி எதிர்ப்பு ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

3. இச்சந்தர்ப்பத்தில் முஹம்மது (ஸல்)அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது பற்றி அதிகமானோர் கேள்விகளை எழுப்புவார்கள்;. முஸ்லிம்களாகிய நாம் இதனை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி படைப்புகளிலே மிகச் சிறந்தவரும் மிக அழகிய உதாரண புருஷருமான முஹம்மது (ஸல்)அவர்கள் பற்றிய அறிவை உலக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக் கெதிரான கேலிச் சித்திரத்தை மேற்குலக அரசியல் வாதிகளும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் ஆதரித்தது போன்று இந்தப் புதிய அவமதிப்பையும் மேறகுலகு ஆதரிக்கலாம். எவ்வாறான நிலை ஏற்பட்ட போதிலும் முஸ்லிம்கள் அனைவரும் இந்த அவமதிப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு நபிகள் நாயகம் ஸல் அவர்களையும் இஸ்லாத்தையும் ஆழமாகவும் தூய்மையாகவும் நேசிக்கிறோம்; என்பதற்கு அல்லாஹ்வின் முன் சான்று பகர இச்சந்தர்ப்பத்தை ஆர்வத்துடன் பயன்படுத்த முன்வர வேண்டும்.

அல்லாஹ் (சுபு)கூறுகிறான்:

61:14 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ ۖ فَآمَنَت طَّائِفَةٌ مِّن بَنِي إِسْرَائِيلَ وَكَفَرَت طَّائِفَةٌ ۖ فَأَيَّدْنَا الَّذِينَ آمَنُوا عَلَىٰ عَدُوِّهِمْ فَأَصْبَحُوا ظَاهِرِينَ

61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி ‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?’ எனக் கேட்க சீடர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்’ என்று கூறியதுபோல் நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் – எனினும் இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் – அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.


சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக!

sources from ourummah.org

Nov 4, 2011

கிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?

அகீதாவை நோக்கி அழைப்போம். சரியாகச் சொன்னீர்கள். அகீதா தான் முதல் கட்டப்பணி இது தான் நபி வழியும் கூட.நாம் எடுக்க வேண்டிய முதல் முயற்சியும் இது தான்.

இஸ்லாம் பூரணத்துவமாகிவிட்டது. ஆனால் இஸ்லாத்தின் பூரணத்துவம் ஏட்டில் தான் இன்று இருக்கின்றது.ஏட்டில் இருக்கின்ற சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான வழி முறைகளையும் காட்டித் தந்த மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான்.

ஆண்கள் ஐவேளைத் தொழுகையை வீட்டிலும் தொழலாம்.ஏன் பள்ளிவாசல் கட்டி அங்கு இமாமைத் தொடர்ந்து தொழுகின்றோம்? இது தான் நபி வழியில் அமைந்த தொழுகையை நடை முறைப்படுத்திய ஒழுங்கு.இந்த அழகிய நபி வழியை வாழ்வின் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு வருவது அவசியமாகும். இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

நாம் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, இறந்ததன் பின் அந்த குழந்தைகளுக்கு எமது சொத்துக்கள் எப்படிப்போய்ச் சேர வேண்டும் என்பதை கடமையாக்கிய மார்க்கம் இஸ்லாம். ஆனால் அந்தக் கடமையைச் செய்வதற்கான ஒழுங்கை கட்டி எழுப்புவது தான் இந்த வாரிசுச் சட்டத்தை நடை முறைப் படுத்துவதற்கான நபி வழி. இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

நாம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகிறோம்.எமது சகல கொடுக்கல் வாங்கலும் ஹலாலான முறையில் இருக்க வேண்டும்.வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டம் ஒழிக்கப்பட்டு வட்டியில்லா பொருளாதாரக் கொள்கை நம் வீட்டில் மாத்திரமல்ல.நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஸக்காத் என்ற கடமையை நபிவழியில் நிறை வேற்றவும், நமது நாடுகளில் பரவிக் கிடக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான நீர்,நெருப்பு (சகல விதமான கனிப் பொருட்கள்) ,பயிர் நிலம்; ஆகியவற்றை அடுத்தவர்களுக்குத் தாரை வார்த்து குறிப்பிட்ட சிலர் வயிறு வளர்ப்பதை இல்லாமல ஒழித்து, அவற்றை சரியாக பாதுகாத்து, அதலிருந்து பயன் பெறுவதற்கான வசதிகளைச் செய்வது என இஸ்லாம் பணிக்கும் பொருளாதாரத் திட்டத்தை நடை முறைப் படுத்துவதும் நபி வழியாகும். இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

எமது உயிர் மானம் உடைமை ஆகியவற்றைக் காப்பது கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக போராட்டம் செய்வதை எமது மார்க்கம் எமக்கு விதித்துள்ளது.இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் ஏக தலைவர் எமக்கென்று என்றும் இருந்தே வந்தார். எம்மைப் பாதுகாப்பதோடு, இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் பணியையும் அவர் செய்தார். இது தான் நபி வழியிலான அரசியல் ஒழுங்கு. இதற்கான சிந்தனையாவது இல்லாமல் அகீதாவை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பது தான் பிழையாகும்.

எப்படி பள்ளிவாசலைக் கட்டி இமாமை நியமித்து அவரைப் பின்பற்றித் தொழுகின்றோமோ அது போல் தான் இதுவும்.அகீதாவுக்கு அழைப்பது தான் முக்கியம், பள்ளிவாசலையும் இமாமையும் அவரைப பின்பற்றுவதையும் பற்றிப் பேசுவதில் என்ன பலன்? என்று நான் கூற மாட்டேன்.நீங்களும் கூறமாட்டீர்கள் என்றே நம்புகின்றேன்.

எமது ஊரில் பலருக்கும் எழுத வாசிக்கத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் டாக்டராக சிலர் வரவேண்டும் என்று முயற்சிக்காமல் இருப்பதா? இப்படி இருப்பது உலக நடை முறையைத் தெறியாததாலும் இஸ்லாம் என்ற அழகிய மார்க்கத்தின் இயல்பைப் புரியாததாலும் மாத்திரமே நிகழ முடியும்.உங்கள் குடும்பத்திலேயே எத்தனை படிப்பாளிகள் உருவாகி விட்டார்கள் என்பது உங்களுக்குத் தான் நன்கு தெரியும். டாக்டராக்க வேண்டும் என்ற சிந்தனையும், அதற்கான முயற்சிகளும், தியாகங்களும் இன்றி யார் டாக்டர் ஆனார் என்று சொல்ல முடியுமா?

குர்ஆன் ஹதீஸின் படி அமைந்த இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டம் ஏட்டிலேயே இருக்கட்டும் என்று எந்த முஸ்லிமும் ஆசை வைக்க மாட்டான். இந்த வாழ்க்கைத் திட்டத்தை எப்படி நபிகளார் நடை முறைப்படுத்தினார்கள் என்பதை அறிவதற்கு முயற்சி செய்வான். நல் வழி நடந்த நம் முன்னோர் செய்ததும் சொன்னதும் எம்மில் இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் கூறக் கூடிய கருத்துக்களைவிட சிறந்தது என்பதைக் கண்டு கொள்வான். இந்தக் கருத்து நபிகளாரின் கருத்தாகும். இதைக் கூட ஏற்காத நம்மவர்கள் நாம் சொல்வதையா கேட்கப் போகிறார்கள்..

கிலாபத் பற்றி ஏன் இப்போது பேசுகிறோம் என்றால் இமாமைப் பின் தொடர்ந்து தொழுவது நபி வழி என்பதை எப்படி விளங்கிக் கொண்டோமோ அவ்வாறே கலீபாவின் பின்னால் இருந்து இஸ்லாத்தை அதன் மொத்த உருவில் நடை முறைப்படுத்த அவருக்குத் துணையாக இருப்பதும் இஸ்லாத்தின் ஜோதியை அழைப்புப் பணி அறப் போர் என்ற அடிப்படையில் உலகெங்கும் அவர் எடுத்துச் செல்லும் போது, வெற்றியை அல்லது வீர மரணத்தை அடைவதும் நபி வழி என்பதை நம்புகின்றோம். அதனால் தான் கிலாபாவைபப் பற்றி இன்றே சிந்திக்கிறோம், பேசுகிறோம், அதன் பால் அழைக்கிறோம்.

கிலாபத் சிந்தனையை ஏற்க மறுப்பது இஸ்லாம் பூரணத்துவமாக நடை முறைப்படுத்தப் படுவதற்கான ஒழுங்கை மறுப்பதாகும். இஸ்லாம் முஸ்லிம்ம்களாலேயே தவறாகப் புரியப்பட்டு விட்டதற்கு இது சிறந்த சான்றாகும்.

சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக!

ஆக்கம்:அபூ அய்யூப் முஹம்மது