காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 |
இன்னுமொரு சம்பவம்..!
இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்தி வைத்திருந்த சகோதரத்துவமும், இன்னும் தியாகமும் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டது. வரலாற்றிலும் இந்த சம்பவம் நிலைத்து விட்டது. இன்றைக்கும் என்றைக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்து விட்டது.
போர் நடந்து கொண்டிருக்கின்றது. மூன்று முஸ்லிம் வீரர்கள் கடுமையான காயம் பட்டு, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தாகம் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கின்றது. இதனைப் பார்த்த ஒருவர், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக அருகில் சென்றால், அவர் தனக்கு அருகில் தாகத்தோடு போராடிக் கொண்டிருப்பவருக்கு முதலில் தண்ணீர் கொடுக்கும்படி கூறுகிறார். அவரிடம் தண்ணீர் கொடுக்கச் சென்றால், தன்னை அடுத்து தாகத்தால் வாடிக் கொண்டிருக்கக் கூடியவருக்கு முதலில் தண்ணீர் கொடுத்து வரும்படிக் கூறுகிறார். இவ்வாறாக, தனக்குத் தேவையிருந்தும் தன்னுடைய சகோதரனின் தேவைக்கு முக்கியவத்தும் அளித்தார்கள். மீண்டும் மூன்றாமவருக்கு அருகில் சென்று தண்ணீர் கொடுக்கச் சென்ற பொழுது, அவர் முதல் நபருக்குத் தண்ணீர் கொடுத்து வருமாறு கேட்டுக் கொள்ள, இவ்வாறாக தண்ணீரை யாருக்கும் கொடுக்க இயலாமல் சுற்றிச் சுற்றி வந்த பொழுது, இறுதியில் தண்ணீர் குடிக்காமலேயே மூவரும் மரணமடைந்து விட்ட காட்சி அங்கே நடந்தது. இன்றளவும் அந்தக் காட்சி வரலாறாக ஏடுகளில் பதிவாகி, வரக் கூடிய சந்ததியினருக்கு நற்பாடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம்..!
இந்த யர்முக் போரில் இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ரோமப் படைக்கு தலைமை தாங்கி வந்திருந்த தளபதிகளுள் ஒருவரான ஜர்ஜாஹ் என்பவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சந்தித்து,
காலித் பின் வலீத் அவர்களே..! நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி, உண்மையான பதிலை நீங்கள் கூற வேண்டும்.
காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.., கேளுங்கள்..! நிச்சயமாகப் பதிலளிக்கின்றேன்.
உங்களது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து பிரத்யேகமாக வாளொன்றைப் பெற்று உங்களிடம் கொடுத்துள்ளார்களோ..! ஏனெனில், உங்களைச் சந்திக்கும் எதிரிகள் எல்லோரும் தோற்று ஓடுகின்றார்களே..! அதனால் தான் கேட்கின்றேன் என்றார், ஜர்ஜாஹ்.
இல்லை..! இல்லை..! வானத்திலிருந்து பிரத்யேகமாக எந்த வாளும் வரவில்லை.. இது காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பதிலாக இருந்தது.
பின் ஏன் உங்களை ஸைபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்றழைக்கின்றார்கள்?
அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்ட இறைத்தூதரை அனுப்பி வைத்தான். சிலர் அவர் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள், அவர் மீது அன்பு கொண்டார்கள். இதயங்களில் ஏற்றுக் கொண்ட அந்த கொள்கையை உயிரை விடவும் நேசித்தார்கள். தூதருக்குக் கட்டுப்பட்டார்கள். பலர் அவரை எதிர்த்தார்கள், அவர் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்து உதாசினம் செய்தார்கள்.
முன்பொரு காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றியவர்களையும் குறிப்பாக இஸ்லாத்தின் கொடிய விரோதியாக இருந்தவன் தான் நான். அல்லாஹ் எனது இதயத்தில் இஸ்லாத்தின் வெளிச்சத்தை ஏற்றி வைத்தான், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சத்தியத்தை ஏற்றுக் கொணடேன், இஸ்லாமிய அணியில் நானும் ஒருவனானேன். ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை பார்த்துக் கூறினார்கள் :
காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நீங்கள் அல்லாஹ்வின் வாள்..! உங்களது வாள் வலிமையானது எதிரிகளின் வல்லமையை அழித்தொழிக்கும்.
எனவே தான், அன்றிலிருந்து எனது பெயருக்கு முன் ஸைபுல்லாஹ் என்ற பட்டம் இணைந்து கொண்டது. நாங்கள் ஓரிறைக் கொள்கையை மக்கள் முன் வைக்கின்றோம். இறைவன் ஒருவனே..! வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சான்று பகருமாறு மக்களை அழைக்கின்றோம் என்று கூறினார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.
இந்தக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டால் நீங்கள் பெற்றிருக்கக் கூடிய இதே நற்பேறுகளை நானும் அடைந்து கொள்ள முடியுமா? இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! குறிப்பாக உங்களைப் போன்றே நானும் ஆக முடியுமா? என்று கேட்டார் என்ற அந்த ரோமப் படைத்தளபதி.
ஏன் முடியாது. நிச்சயமாக முடியும். இன்னும் என்னை விட நீங்கள் உயர் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றார்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.
காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் விளக்கத்தினால் கவரப்பட்ட ஜர்ஜாஹ் என்ற அந்த ரோமப் படைத்தளபதி,
காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றேன். எனக்கு சத்திய சான்றைக் கற்றுத் தாருங்கள். வணங்கத்தக்க இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றேன், அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் ஆலோசனைப்படி, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்த ஜர்ஜாஹ் அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திருக்கரங்களினால் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ரக்அத் தொழுகைகளையும் தொழுது, நேர்வழி காட்டிய இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்திக் கொண்டார்.
தான் படை நடத்தி வந்த ரோமப்படைக்கு முடிவுரை எழுதி விட்டு, இஸ்லாமிய அணியில் இணைந்து முகவுரை எழுதத் தயாராகி விட்டார் அந்தத் தளபதி. ரோமப்படைக்குத் தளபதியாக வந்தவர், இப்பொழுது இஸ்லாமிய அணியில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சாதாரணப் படைவீரராகப் பணியாற்ற ஆரம்பித்த அவர், இஸ்லாத்தின் மேன்மைக்காகவும் இன்னும் தானும் உயிர்த்தியாகியாக மாறி அந்த சுவனத் தென்றலைச் சுவாசிக்கப் புறப்பட்டு விட்டார்.
என்னே.. அவரது தியாகம்...! அவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதற்கும் அவர் உயிர் தியாகியாக மாற்றம் பெறுவதற்கும் இடைப்பட்ட காலப் பகுதியாக இந்த இரண்டு ரக்அத் தொழுகைக்கான நேரம் மட்டுமே தடையாக இருந்தது. சற்று முன் இறைநிராகரிப்பாளர்களின் அணியில் இருந்தவர், அடுத்த நிமிடம் இறைநம்பிக்கையாளராக மாற்றம் பெற்று, சில நிமிடங்களிலேயே உயிர்த்தியாகிகளின் பட்டியலில் சேர்ந்து விட்ட அவர், மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி தான்.
பகுதி - 10 / பகுதி - 12
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment