(அமெரிக்கா எகிப்திற்கு இராணுவ உதவிகளை அளித்து வருவதை நிறுத்தப் போவதில்லை என ,அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் 'கெயிட்லின் ஹைடன் ' அண்மையில் தெரிவித்துள்ளார் .இந்த தகவலை வைத்து ,எகிப்தின் கடந்தகால ,நிகழ்கால அரசியலை ஒரு புரிதலுக்கு கொண்டுவரும் நோக்கில் பதியப்பட்டதே கீழ்வரும் பதிவாகும் .)
சமூக மற்றம் என்பது ஒரு சித்தாந்த மாற்றமாகும் .ஒரு சமூகம் தனது வாழ்வு ,நாகரீகம் ,கலாச்சாரம் என்பவற்றில் ஒரு தலைகீழ் மாற்றத்தை வேண்டி நிற்பதே உண்மையான சமூக மாற்றமாக கருதப்பட முடியும் .
வாழ்வியல் ,நாகரீகம் ,கலாச்சாரம் என்பன நிச்சயமாக ஒரு சித்தாந்த வழி நின்றும் ,அதன் முறைமைகளில் இருந்தும் தோன்றக்கூடியதே .அந்தவகையில் உண்மையான சமூகமாற்றம் என்பது தெளிவாகவே ஒரு சித்தாந்த மாற்றத்தில் இருந்து மட்டுமே தோற்றம் பெற முடியும் .
அது அல்லாமல் ஒரு சமூகம் தான் அனுபவிக்கும் ஒரு சித்தாந்த முறைமைகளில் இருந்து ,அதன் வாழ்வியல் பார்வைகளில் இருந்து, அதன் நாகரீக ,கலாச்சார கோணங்களில் இருந்து தனது தேவைப்பாடுகளையும் , மாற்றீடுகளையும் வேண்டி நிற்பது சமூக மாற்றமாகாது .மேலும் இந்த பாதை வெறும் சராசரி உரிமைப் போராட்டமாகவே கருதப்பட வேண்டும் .
இந்தப் புரிதலோடும் ,இஸ்லாம் தனக்கென பிரத்தியோகமான முறைமைகளையும் ,வாழ்வியலையும் ,நாகரீகத்தையும் , கலாச்சாரத்தையும் கொண்ட உறுதியான சித்தாந்தம் என்ற வகையிலும் ,இன்றைய முஸ்லீம் உம்மத்தின் நிகழ்கால போராட்டப் பாதை உன்னிப்பாக அவதானிக்கப் படவேண்டும் .
(அப்படிப் புரிந்து கொண்டால் வெறும் சராசரி உரிமைப் போராட்டத்தை ,ஒரு தூய இலட்சியவாத போராட்டமாக கருதும் மனோபாவத்தில் இருந்து ,முஸ்லீம் உம்மத்தால் விடுபட முடியும் .அத்தோடு இஸ்லாம் எனும் தூய சித்தாந்தத்தை நிறுவும் ஸுன்னாவின் அடிப்படையிலான பாதையை தேடித் தெரியும் உண்மையான இலட்சியப் பாதையை நோக்கி அவனை நகர்த்தவும் கூடும் .)
பொதுவாகவே உரிமை தொடர்பான போராட்டப்பாதை திறக்கப்படுவது மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் , சுய அடையாளம் என்பன மறுக்கப்படும் நிலையில் ,அல்லது புறக்கணிக்கப் படும் நிலையிலேயே ஏற்படும் .அத்தோடு குறித்த சூழ்நிலையின் ஆளும் சித்தாந்தம் இது தொடர்பில் சமரச வழிமுறை ஒன்றை ,அல்லது மாற்றீட்டுக்கான சில காரணிகளை வழங்கி நிற்கும் நிலையில் அந்தப் போராட்டப் பாதை இடைநிறுத்தப் படும் .அல்லது குறித்த சூழ்நிலை அதன் இலட்சிய அடைவுப் புள்ளியாக கருதப்பட்டு விடும் .
மக்களின் பொது இயல்பு சித்தாந்தங்களையும் ,அதன் முறைமைகளையும் பற்றி அலட்டிக் கொள்வதில்லை , அதில் தங்கி நிற்பதுமில்லை மாறாக அடிப்படைத் தேவை என்ற குறுகிய வட்டத்தில் இருந்தே சிந்திக்கும் .இங்கு குறைந்த பட்சமாக அதற்கான விநியோகங்கள் இடம்பெறுமிடத்து சித்தாந்த அதிகாரத்தின் வடிவம் பற்றி அதன் தரம் பற்றி அது சிந்திக்காது ,அலட்டிக் கொள்ளாது .
இந்தப் பொது விதியில் இருந்தே முதலாளித்துவ சித்தாந்தம் தனது நடத்தைகளை தீர்மானிக்கிறது .இயல்பினில் மனிதன் ,நான் ,எனக்கு ,எனது என்ற கருத்தியலோடு எல்லைமீறிய விருப்பு வெறுப்போடு , ஆதிக்க உணர்வோடு மட்டுப் படுத்தப் பட்ட குணகம் கொண்டவன் .
இங்கு தனக்கான வழிகாட்டல் மற்றும் உலகம் தொடர்பான பார்வையிலும் நான் ,எனது ,எனக்கு என்ற பண்புகளே முற்றாக ஆதிக்கம் செலுத்தும் . இந்த நிலையையே இஸ்லாம் (ஜாஹிலீயா ) அறியாமை என்கிறது .
இந்தப் போக்கின் கட்டமைக்கப்பட்ட அதிகார வடிவமே முதலாளித்துவ சித்தாந்தமாகும் . எனவே அதன் முறைமைகளிலும் , வாழ்வியலிலும் , நாகரீகத்திலும் ,கலாச்சாரத்திலும் இத்தகு பண்புகள் பிரதிபளிப்பதை தவிர்க்க முடியாது .மனித சமூகம் இதனோடு இணைந்து செல்வதும் இயல்பானதே .
இயல்பான இந்த பண்புக்கூரின் வடிவமே இன ,மத , நிற ,வர்க்க ,குல ,கோத்திர பண்புகளை கொண்டதும் ,இந்த ஒவ்வொரு அலகுகளும் தமக்கென பிரத்தியோகமான தலைமையையும் ,ஆதிக்க எல்லையையும் கொண்டு வாழத் தலைப்படுவதாகும் . உச்ச நுகர்ச்சி ,உச்ச இலாபம் என்ற இந்த சந்தையுணர்வு குழப்பங்களினதும் சர்ச்சைகளினதும் அடிப்படையாக மாறி விடுகின்றது .
இந்த இயல்புத்தன்மையின் மத்தியில் சமரச பேரத்தின் மூலமும் ,உலகியல் இலாபக் கோட்பாட்டின் அடிப்படையிலும் இத்தகு சமூகங்களை ஒன்றுபடுத்தி ,பயன்படுத்தி தனது அதிகார ஆதிக்க நிலையை தக்க வைக்கும் அரசியலையே முதலாளித்துவம் செய்கிறது .உலகியல் இலாபக் கோட்பாட்டை முதல் நிலை படுத்தும் போது பக்கச்சார்பு இங்கு பிரதானமாகி விடுகிறது .
இந்த சுயநல அரசியல் வடிவம் இன ,மத ,மொழி ,சாதி ,கோத்திரம் , நிறம் போன்ற பண்புகளை சார்ந்து நிற்கின்ற அடிப்படையில் பெரும்பான்மை என்ற கோட்பாடு வலுப்பெற 'ஜனநாயகம் ' என்ற பெயரளவுப் பெறுமான கட்டமைப்பு வடிவம் போலியாக அங்கு காட்டப்படும் .அல்லது தனித்தலைமை முடியாட்சி அங்கு இயல்பாகிவிடும் . இதன் உச்சக் கட்டமாய் கூட்டுச் சர்வாதிகாரம் அல்லது தனிநபர் சர்வாதிகாரம் என்ற வடிவத்தை பெற்றுவிடும் .
மேலும் 'செக்கியூலரிசம் 'என்ற இதன் பிரதான முறைமை வேற்றுத் தலையீடுகளை அரசு என்ற அதிகாரக் கருவியின் பக்கம் நெருங்க விடாத பொறிமுறையாக பயன்படும்.ஆனாலும் சுயநலம் மிக்க இந்த சித்தாந்த அடிப்படை எதிர்மறையாக மதம் ,சாதி , நிறம் ,கோத்திரம் போன்ற அம்சங்களையும் சிலபோது அதிகார இயக்கு கருவியாக்கும் .பச்சோந்தித் தனமாக இராணுவ சர்வாதிகாரத்தையும் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் .
இந்த விளக்கத்தின் அடிப்படையில் முஸ்லீம் உம்மத் மிக நிதானமாக தனது நிலை ,பணி பற்றி சிந்திக்க தலைப்பட வேண்டும் .தவிர்க்க முடியாமல் இத்தகு சுயநல அடிப்படையில் முஸ்லீம் உம்மத் சிந்திக்க புறப்பட்டதே அதன் சிந்தனை வீழ்ச்சியின் உச்சம் எனலாம் .
இந்த சிந்தனை வீழ்ச்சியின் காரணமாகவே அதன் தனிப்பெரும் அடையாளமான இஸ்லாமிய சித்தாந்தத்தின் அதிகார ஆதிக்க தரத்தை இழந்துள்ளதுமாகும் .முரண்பாடான ஒரு வாழ்வியலை முற்றாக விழுங்கவும் முடியாத ,முற்றாக துப்பவும் முடியாத நிலையில் இன்று அனுபவிக்கும் சகல அவல நிலைக்கும் அடிப்படை காரணமுமாகும் .
சூழ்நிலையை மாற்ற முடியாது என்ற பார்வையும் ,முதலாளித்துவத்தை மிகைக்க முடியாது என்ற தவறான பார்வையும் ,அதனை திருப்திப் படுத்துவதன் மூலமான சமரச மாற்றீடுகளை முன் வைப்பதன் ஊடாக இஸ்லாமிய அடையாளங்களில் எஞ்சியுள்ளதை பாதுகாப்போம் !என்றும், பின்னர் படிமுறை ரீதியாக இஸ்லாமிய மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற பலவீனமான பார்வையும் நிலைமையை உணர்ந்தவர்களிடம் வந்துள்ளதும் முதலாளித்துவம் கொடுத்த சமரச பண்பே ஆகும் .
முஸ்லிமைப் பொறுத்தவரை 'மின்னலுக்கு பயந்து இரும்புக் கூட்டில் ஒழிதல்' என்ற தவறான தீர்மானமே இதுவாகும் .'குப்ரை ' அங்கீகரித்தல் என்ற மகா தவறில் இருந்து தோன்றும் இத்தகு அரசியலே இஸ்லாமிய 'ஜனநாயக வாதமாகும் ' இது 'குப்பார்களின் ' வழிமுறை மட்டுமல்ல அவனது ஆதிக்க பொறிமுறை என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய எகிப்து ஒரு சிறந்த பாடமாகும்.
http://khandaqkalam.blogspot.ae
No comments:
Post a Comment