Oct 7, 2013

நண்பர்களை தெரிவுசெய்வது தொடர்பான இஸ்லாமிய பார்வை!

ஒரு நணபனுடைய சகவாசம் குறித்து இஸ்லாம் மிகத் தெளிவாக பேசுகிறது. ஏனெனில் ஒருவருடைய வாழ்க்கைமுறையை தீர்மானிக்கின்ற அதில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக நண்பர்கள் அமைவதனை நாம் காணலாம்.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
'ஒருவன் தனது நண்பனுடைய தீனில் (வாழ்க்கைமுறையில்) இருப்பான்; ஆதலால் நீங்கள் உங்கள் நண்பர்களை மிக கவனமாக தெரிவுசெய்து கொள்ளுங்கள்' (திர்மிதி)

அதே போன்று அல்லாஹ் சூறா “அத்தக்வீரில்” உயிர்கள் ஒன்றுசேர்க்கப்படும் நாள்குறித்து பேசுகிறான். அவ்வசனத்திற்கு விளக்கமளிக்கும் உலமாக்கள் மிகக் கவனமாக ஒவ்வொருவரும் தமது நண்பர்களை தெரிவுசெய்ய வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

ஏனெனில் இவ்வுலகில் வாழும் போது ஒருவருடைய ஆத்மா யாருடன் கூடுதலான சகவாசத்தை கொண்டிருக்குமோ அத்தகையவர்களுடை உயிர்களுடன் நாளை மறுமையில் இணைந்துகொள்ளும் என விளக்கமளிக்கிறார்கள். இவ்வுலகில் ஒருவர் தெரிவுசெய்த நண்பரின் செயல்கள் காரணமாக நாளை மறுமையில் கைசேதப்பட்டுவிடக் கூடாது என எச்சரிக்கிறார்கள்.

அவ்வாறாயின் ஒருவருடைய நண்பன் பார்பதற்கு நல்லவனாக பண்பானவனாக இருந்தும் அல்லாஹ்வுடைய ஏவல் விலக்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது மேற்கினது கவர்ச்சியான வாழ்க்கை முறையினுள் கரைந்து வாழும் நிலையில் அவருடன் கொண்டுள்ள சகவாசம் நாளை மறுமையில் கைசேதத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதனை ஒவ்வொருவம் தமது நண்பர்களை தெரிவுசெய்யும் போது கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஒருவர் தமது நண்பனுக்கு புத்திமதி கூறி அவரை திருத்தி இஸ்லாமிய விழுமியங்களை பேணி நடக்க தஃவா செய்ய வேண்டும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'ஒவ்வொருவரும் அவருடைய சகோதரனுக்கு கண்ணாடியைப் போன்றவர்கள். தனது சகோதரனுடைய தவறு ஏதேனும் ஒன்றை கண்டால் அதனை அவனிடம் இல்லாமல் செய்துவிட வேண்டும்.' (திர்மிதி)

ஆகவே, ஈருலக ஈடேற்றத்திலும் செல்வாக்குச் செலுத்தும் நண்பர்களை தெரிவுசெய்யும் விடயத்தில் மிகக் கவனம் செலுத்தி தீனுல் இஸ்லாத்தை முற்படுத்தி தங்களுக்கிடையிலான நட்பிலும் ஈமான் வலுப்பெற, அல்லாஹ்வுடைய திருப்தி கிடைக்கப்பெற காரணமாக இருக்கத் தக்கதாக ஒருவர் தமது நண்பர்களை தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.



Mohideen Ahamed Lebbe

No comments:

Post a Comment