Jul 13, 2014

இஸ்ரேலிய அதிரடிப்படை முதல் தடவையாக எல்லை கடந்து காசா பகுதிக்குள் புகுந்தது!


நேற்றிரவு இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் பற்றி விறுவிறுப்பு.காமில் டெல்-அவிவ் நகரம் மீது தொடங்கியது ஹமாசின் கடகட பிளாங்கெட் மிசைல் தாக்குதல்! கட்டுரையில் எழுதியிருந்தோம் அல்லவா?

அந்த தாக்குதல் நடந்து சிறிது நேரத்தில், தரை மார்க்கமாக காசா பகுதிக்குள் புகுந்தது, இஸ்ரேலின் சிறிய அதிரடிப் படைப்பிரிவு ஒன்று!

கடந்த சில தினங்களாக எஸ்கலேட் பண்ணிவரும் இந்த யுத்தத்தில், இதுவரை இஸ்ரேல் தமது விமானப்படை விமானங்கள் மூலம் குண்டுவீசிக்கொண்டு இருந்தது. ஹமாஸ் இயக்கம் ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. இரு தரப்பும், எல்லை கடந்து எதிர் தரப்பின் பகுதிக்குள் சென்றதில்லை.

நேற்றிரவு முதல் தடவையாக இஸ்ரேலிய ராணுவம் எல்லை கடந்து காசா பகுதிக்குள் சிறு அதிரடிப் படை ஒன்றை அனுப்பியது.

டெல்-அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஓய்ந்து சுமார் அரை மணி நேரத்தில், இருளை போர்வையாக கொண்டு இஸ்ரேலிய அதிரடிப்படை ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்குள் வந்தது.

காசா பகுதிக்குள் இந்த அதிரடிப்படைப் பிரிவினர் எங்கே செல்ல வேண்டும், எந்த இடத்தை தாக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது.

அப்படி இலக்கை குறித்து கொடுத்திருந்தது, இஸ்ரேலிய ராணுவ உளவுத்துறை!

எல்லையை கடந்த இஸ்ரேலிய அதிரடிப்படை அந்த இடத்தை நோக்கி சென்றது.

வடக்கு காசாவில், ஹமாஸ் இயக்கம் அமைத்து வைத்திருந்த ஏவுகணை செலுத்தும் தளம் ஒன்றுதான் இவர்களது இலக்கு. எல்லையில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் இருந்தது அந்த தளம்.

ஆனால், இவர்கள் அந்த தளத்தின்மீது தாக்குதல் நடத்த தொடங்கும் முன்னரே, இவர்கள் ஊடுருவிய விஷயத்தை ஹமாஸ் தெரிந்து கொண்டது. இவர்களை நோக்கி ஹமாஸ் இயக்கத்தினர் துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர்.

இதில் இஸ்ரேலிய அதிரடிப் படையினர் இருவர் காயமடையவே, அவர்களை தூக்கிக் கொண்டு, பின்வாங்கி எல்லைக்கு மறுபுறம் சென்று விட்டது, இஸ்ரேலிய அதிரடிப்படை.

மொத்தத்தில் இஸ்ரேலிய தரைத் தாக்குதல் தொடங்குவதற்கு முன்னரே, முடிவுக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்ததை (ஆச்சரியகரமாக) ஒப்புக்கொண்டுள்ளது இஸ்ரேலிய ராணுவம். தமது சிறப்பு அதிரடிப் படைப்பிரிவில் 4 பேர் காயமடைந்தனர் என்பதை ஒப்புக்கொண்ட இஸ்ரேலிய ராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் மொட்டி அல்மொஸ், “அது சிறிய ஆபரேஷன் முயற்சிதான். ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் எம்மிடம் இருந்து பெரிய அளவிலான தரை தாக்குதலை எதிர்பார்க்கலாம்” என்றும் கூறியுள்ளார்.

அதன் அர்த்தம், விரைவில் அங்கு தொடங்கவுள்ளது தரை யுத்தம்!

No comments:

Post a Comment