“இந்த யுத்தம் தற்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. தொலைவில் இருந்து ஏவுகணை ஏவும் அளவோடு முடியப் போவதும் இல்லை. விரைவில் தரையில் படை நகர்வு ஒன்று நடந்து, நேரடி யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது” என இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய உளவுத்துறை அமைச்சர் யுவால் ஸ்டெயினிட்ஸ், “எம்மிடம் உள்ள உளவுத் தகவல்களின் அடிப்படையில், தற்போதைய மோதலை பெரிய அளவிலான யுத்தம் ஆக்குவதற்கான சகல முன்னேற்பாடுகளையும் ஹமாஸ் செய்கிறது. அதற்கான ஆயுதக் கையிருப்புகளும் அவர்களிடம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம், 40,000 ராணுவ வீரர்களை காசா எல்லைப் பகுதிக்கு அனுப்ப உத்தரவிட்டது குறித்து விறுவிறுப்பு.காமில் செய்தி வெளியிட்டிருந்தோம் அல்லவா? இந்த எண்ணிக்கை, கடந்த 2012-ல் இப்பகுதியில் நடந்த மோதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைவிட, 10,000 அதிகமானது.
கடந்த 24 மணி நேரத்தில், காசா பகுதியில் இருந்து 130 ராக்கெட்டுகள் இஸ்ரேலின் பல பகுதிகளிலும் வந்து விழுந்துள்ளன. அதே நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை, காசாவில் உள்ள 150 இலக்குகளின் மீது, 162 தடவைகள் விமான குண்டுவீச்சுகளை நடத்தியுள்ளது.
இந்த எண்ணிக்கைகள், வெறும் 24 மணி நேரத்துக்குள் நடந்தவை என்பதில் இருந்து அப்பகுதியில் யுத்தம் எந்தளவுக்கு மோசமாக நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
viruvirupu.com
No comments:
Post a Comment