Sep 13, 2015

ஹிராக்ளியஸ்


ஹிராக்ளியஸ்
அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 09

அரேபியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் துணையுடன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீது படையெடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்ற செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்த பொழுது, தற்காப்புக்காக போர் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டார்கள். இப்பொழுது, மிகப் பெரிய வல்லரசை எதிர்த்துப் போர் புரியத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்களின் நிலையோ, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. காரணம், அப்பொழுது மதீனாவில் பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. எனவே, இந்தப் போரை ஜெய்ஸ{ல் யுஷ்ரா என்றழைக்கின்றனர். இன்னும் அந்த நேரத்தில் தான் பேரீத்தம் பழங்கள் பழுத்துக் கொண்டிருந்தன, எனவே மதீனாவாசிகள் தங்களது நகரத்தை விட்டுச் செல்வதற்கும் மனமில்லாதிருந்தார்கள். இந்த இரண்டு சூழ்நிலைகளையும் பயன்படுத்திக் கொண்ட மதீனத்து நயவஞ்சகர்கள், முஸ்லிம்களின் மனதில் விஷ வித்துக்களை விதைக்க ஆரம்பித்தார்கள். எனினும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, தங்களது மன உறுதியை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். தங்களது பொருள்களாலும், தியாகத்தாலும் இஸ்லாத்தின் மேன்மைக்கு சான்று பகர்ந்து கொண்டிருந்தார்கள்.

இன்னும் உமர் (ரலி) அவர்களோ, இந்த முறையாவது அபுபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களாக, தனது வீட்டிற்குச் சென்ற உமர்(ரலி) அவர்கள் தனது வாழ்நாள் சேமிப்பில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இதோ பெற்றுக் கொள்ளுங்கள். இந்தப் போருக்கான எனது பங்கை என்றார்கள்.

உமரே..! உமது வீட்டாருக்கு எதையேனும் மிச்சம் வைத்திருக்கின்றீர்களா? என்றார்கள். ஆம்! தங்களுக்குக் கொடுத்தது போல அவர்களுக்குத் தேவையான அளவு பொருட்களை வைத்து விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களின் முறை வந்தது..!

அபுபக்கர் அவர்களே..! தாங்கள் என்ன கொண்டு வந்தீர்கள்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதோ யாரசூலுல்லாஹ்..! என்று தான் கொண்டு வந்த செல்வத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்த பொழுது,

தங்களது குடும்பத்தாருக்காக எதனை விட்டு வந்திருக்கின்றீர்கள்? என்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

ஆம்..! யா! ரசூலுல்லாஹ்..! அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்..!

அதாவது, இந்த உலக வாழ்க்கைக்கான எதனையும் நான் விட்டு வரவில்லை, மாறாக, மறுமைக்கானவற்றையும், இறைவனுடைய பாதுகாப்பையும், அவனது தூதரது வழிமுறையையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்.

அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :-

இனி, எப்பொழுதும் நான் அபுபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சவே முடியாது என்றார்கள்.

தலைமை அலுவலகத்தின் தலைமைக் காரியதரிசியாகவும், மற்றும் உத்தரவுகள் பிறப்பித்தல், கொடியை தாங்கிக் கொள்ளுதல் போன்ற அனைத்துப் பணிகளும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது. 30 ஆயிரம் படை வீரர்களுடன் இஸ்லாமியப் படை தபூக் என்ற இடத்தை அடைந்தது. ஆனால் ஹிராக்ளியஸின் படை அதன் முகாமை விட்டும் ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கவில்லை. ஜெருஸலத்தின் கவர்னராக இருந்த ஜான் என்பவர் முஸ்லிம்களிடம் வந்து சமாதான ஒப்பந்தம் கோரினார். சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள்.


ஹஜ்ஜுக்குத் தலைமை தாங்குதல்

துல்ஹஜ் 9 அன்று அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒரு குழுவினரை ஹஜ் செய்யும் நிமித்தமாக மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் மூலமாக முதன்முதலாக ஹஜ் சென்ற குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்ற நற்பேற்றை இஸ்லாமிய வரலாற்றில் தக்க வைத்துக் கொண்ட பெருமை அபுபக்கர் (ரலி) அவர்களைச் சாரும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக 20 பலிப்பிராணிகளையும், தனது சார்பாக ஐந்து பலிப்பிராணிகளையும் இன்னும் 300 தோழர்களுடன் மக்காவை நோக்கி ஹஜ் செய்யும் நிமித்தம் அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில் முஸ்லிம்கள் ஹஜ் செய்யச் சென்றனர்.

இந்த வருடத்தில் முஸ்லிம்களுடன், இணைவைப்பாளர்களும் இணைந்து ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். இந்த வருடத்திற்குப் பின்பு, இணைவைப்பாளர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இந்த சமயத்தில் தான் அலி (ரலி) அவர்கள் சூரா அல் பராஅத் தின் வசனங்களை உரத்த குரலில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக முழங்கிக் கொண்டு வந்தார்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)  

No comments:

Post a Comment