Sep 4, 2015

தாதுல் சலாஸில் போர் - அலீஸ் போர் - கைரா போர்

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 09

தாதுல் சலாஸில் போர்


இஸ்லாமியப் படைகள் ஈராக்கில் நடத்திய போர்களில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட முதல் போர் இந்த சலாஸில் போர் தான். இந்தப் போர் வரலாற்றில் ஹஃபீர் போர் என்றும் மாற்றுப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. ஹஃபீர் என்ற இந்த இடம் பெர்சிய வளைகுடாவின் அருகே அமைந்துள்ளது. மேலும் மதீனாவுக்கும் பஸராவுக்கும் இடையே உள்ள வழித்தடத்திலும் இந்நகரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஹர்மெஸ் ஈரான் ஆட்சியாளர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் பெற்றுக் கொண்டிருந்தான். ஹர்மஸ் மிகவும் அகங்காரமும், ஆணவமும் கொண்ட மன்னனும், இன்னும் அவன் தலையில் சூடியிருக்கக் கூடிய மணிமுடியில் தங்க இலைகளால் செய்யப்பட்டதும், இன்னும் வைரம், வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமாக இருந்ததுடன், அதன் மதிப்பு அன்றைய திர்ஹத்தில் ஒரு லட்சம் மதிப்புடையதாகவும் இருந்தது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் யானையைப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ்வின் மிகப் பெரிய படைப்பாகிய அந்த மிருகத்தை அந்தப் பகுதி மக்கள் அதுவரை யாரும் கண்டதில்லை என்பதால், மிகப் பெரிய விலங்கைப் பார்த்தவுடன் அவர்கள் திகிலடைந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் ஈராக் பகுதிக்குள் நுழைந்த போது, எட்டாயிரம் முஸ்லிம்களுடன் ஜாலு என்ற இடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். இருபடைகளுக்கும் தளபதிப் பொறுப்பேற்ற காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், மொத்த படைகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்கள்.

ஒரு படைப்பிரிவுக்கு மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், இன்னுமொரு பிரிவுக்கு அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்களையும்  இன்னும் மூன்றாவது பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இந்த அனைத்துப் பிரிவுகளும் எதிரிகளை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்தன.

ஆனால் ஹர்முஸ் தனது படைகளை இருபிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தளபதிகளாக அரச குடும்பத்தவர்களையே நியமித்தான். அந்த அணிகள் வலது அணி மற்றும் இடது அணி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இன்னும் ஆண்கள் அனைவரும் போரிலிருந்து புறமுதுகிட்டு ஓடாதபடி, அனைவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டனர். எனவே தான் இந்தப் போர் சலாஸில் போர் என்றழைக்கப்படுகின்றது. அரபியில் சலாஸில் என்றால் சங்கிலி என்ற அர்த்தமாகும்.

இப்பொழுது போர் ஆரம்பமாகியது. அந்தக் கால வழக்கப்படி முதலில் தனி மனிதர்கள் மோதிக் கொண்டதன் பின் தான் உக்கிரமான போர் ஆரம்பமாகும். அந்த அடிப்படையில் முதல் இரண்டு வீரர்கள் மோதிக் கொண்டார்கள். இப்பொழுது அங்கு ஒரு சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனைச் சந்திக்கும் முறை வரும் பொழுது, ஹர்முஸ் ன் படைவீரர்கள் விரைந்து செயல்பட்டு, காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கிட வேண்டும் என்பது தான் அந்த சதித் திட்டம். அதன்படி இப்பொழுது ஹர்முஸ் மன்னனும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் மோதும் கட்டம் வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனை நோக்கி நகரத் தொடங்கியதும், ஈராக்கிய வீரர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் எண்ணத்துடன் முன்னேறினர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் ஹர்முஸ் ன் ஆட்கள் முன்னேறுவதைக் கண்ட காகா பின் அம்ர் (ரழி) அவர்கள் விரைந்து செயல்பட்டு, அவர்களைத் தடுத்துத் தாக்கியதுடன், அந்த இடத்திலேயே ஹர்முஸ் ன் படைவீரர்கள் பலரைக் கொன்று குவித்தார். இந்த சூழ்நிலை மாற்றத்தில் சற்று நிதானமிழந்த ஹர்முஸ் ஐ க் காலித் பின் வலீத் (ரழி) தன் வாளால் செயலிழக்கச் செய்தார்கள். நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டே அவனை அனுப்பி வைத்தார்கள்.

போர் கடுமையாக நடந்தது, தலைவனை இழந்த ஹர்முஸ் - ன் வீரர்கள் தலைதெறிக்க பின்வாங்கி ஓடினார்கள். இன்னும் ஆயிரக்காண வீரர்களையும் இழந்தார்கள். எஞ்சியிருந்த படைகளை யூப்ரடிஸ் நதிக்கரை வரையிலும் விரட்டிக் கொண்டு போய் விட்டு வந்தார்கள் முஸ்லிம் வீரர்கள்.




அலீஸ் போர்


அலீஸ், இந்த நகரம் யூப்ரடிஸ் நதிக் கரையின் ஓரத்தில் ஹைரா மற்றம் அப்லாஹ் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்த ஊராகும். அரபுக் குலத்தவர்கள் சிலர் இந்த நதிக்கரையில் குடியமர்ந்து கொண்டு, ஈராக் மன்னனுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் செய்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களிடம் பல முறை தோற்றதின் காரணமாக அவர்களின் மனதில் வெறுப்பு எனும் நெருப்பு கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் சிறிதும் தாமதிக்காமல் தாக்குதலைத் தொடுத்தார்கள். அவர்களில் மிகப் பிரபலமான வீரரெனப் போற்றப்பட்ட மாலிக் பின் கைஸ், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாக்குதலின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் மரணத்தைத் தழுவினான். மாலிக் பின் கைஸ் - ன் மரணத்தைக் கண் முன் கண்ட அவனது படைகள், தலைதெறிக்க புறமுதுகு காட்டி ஓட ஆரம்பித்தார்கள். இன்னும் அவர்கள் சாப்பிடுவதற்காக தயாரித்து வைத்திருந்த ரொட்டியைக் கூட சாப்பிடுவதற்கு நேரம் கொடுக்கவில்லை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த அனைத்தையும் விட்டு விட்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போரில் தான் முதன் முதலாக முஸ்லிம்கள், கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டியைப் பார்த்தார்கள். இந்தப் போரில் எதிரிகளின் தரப்பில் 70 ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டனர்.

 
கைரா போர்


கைரா என்பது அப்போதைய ஈராக்கின் தலைநகராக விளங்கியது. இந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த அரபுக் குலங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. எனவே, திட்டம் வகுப்பதில் தீரரான காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கைராவைக் கைப்பற்ற முடிவு செய்தார்கள். மேலும் இந்த நகரம் யூப்ரடிஸ் கதிக் கரையின் அருகே இருந்த காரணத்தினால், பயணத்திற்கு கடல் மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். முஸ்லிம் போர் வீரர்கள் கைராவை நோக்கி வருவதை அறிந்த கைராவின் கவர்னர் தனது மகனது தலைமையின் கீழ் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகப் படையை அனுப்பி வைத்தார். இன்னும் கைராவை நெருங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்றும் கைராவின் கவர்கர் விரும்பினார். ஆனால், நேருக்கு நேர் நடந்த மோதலில் கைராவின் கவர்னரது மகனின் தலையைத் துண்டித்து விட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். இந்தப் போரின் போது கைராவின் கவர்னருக்கு மிகவும் கைசேதமான நேரமாக இருந்தது, அதாவது அவரது மகன் போரில் கொல்லப்பட்டான், அவரது கூட்டு நாடாக இருந்த ஈரானின் மன்னரும் அப்போது இறந்திருந்தார். பயத்தினால் சூழப்பட்ட அவன் தானும், தனது மக்களுமாக கோட்டையைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்து கொண்டான். கைராவில் அமைந்துள்ள இந்தக் கோட்டை மிகவும் உறுதியானதும், பாதுகாப்பானதும் கூட. ஆபத்தான சமயங்களில் தற்காப்புக்கு உபயோகப்படுத்துவதற்காக இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் இந்தக் கோட்டையை ஒரு நாள் இரவு,  ஒரு நாள் பகல் என முற்றுகையிட்டார்கள். சில முஸ்லிம் வீரர்கள் அந்தக் கோட்டைப் பாதுகாப்பையும் சமாளித்து உள்ளே சென்று விட்டார்கள். பின் அந்தக் கைரா மக்கள் முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 


அந்த சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்கள் பின்வருமாறு எழுதப்பட்டன :

வருடம் ஒன்றிற்கு பாதுகாப்பு வரியாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் திர்ஹம்களை வரியாகச் செலுத்துவது 

முஸ்லிம்களுக்காக ஈரானில் இருந்து உளவு பார்ப்பது 

இதற்குப் பிரதிபலனாக அவர்களது வணக்கத்தளத்தையோ அல்லது அவர்களது உடமைகளுக்கோ எந்த சேதத்தையும் முஸ்லிம்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உத்தராவதம். 

தொடர்ந்து போரிட்டு வந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம்களுக்கு ஓய்வு அளிக்கக் கூடிய இடமாக கைராவைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அங்கேயே ஒரு வருடம் தங்கியிருந்தார்கள். இன்னும் மிகப் பரந்;த பிரதேசமாகிய ஈராக்கையும், அதன் சுற்றுப் புறங்களில் உள்ள பகுதிகளை ஒருங்கிணைப்பதற்காக, மிகவும் தேர்ச்சி பெற்ற படைத் தளபதிகளான தரார் பின் அஸ்வர் (ரழி), காகா பின் அம்ர் (ரழி) மற்றும் மதனா பின் ஹாரிதா (ரழி) ஆகியவர்களை அனுப்பி வைத்தார்கள். இதன் காரணமாக இஸ்லாத்தின் கொடி மிகப் பரந்த நிலப்பகுதிகளிலும் ஒளி வீச ஆரம்பித்தது.

அபுபக்கர் (ரழி) அவர்கள் மிகப் பிரபலமான தளபதிகளான அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி), யஸீத் பின் அபூசுஃப்யான் (ரழி), ஆமிர் முஆவியா பின் அபூசுஃப்யான் (ரழி), அம்ர் பின் அல் ஆஸ் (ரழி) ஆகியோர்களின் தலைமையில் ரோமப் பகுதிகளுக்கு ஒரு படையை அனுப்பி வைத்தார். இந்தப் படையின் சிரியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடல்லாமல், சென்ற பகுதிகளிலெல்லாம் இஸ்லாத்தின் வெற்றிக் கொடியை நாட்டி வைத்தது. இப்பொழுது ரோமப் படைகளுடன் மோதுவது என்ற அபுபக்கர் (ரழி) அவர்களுடைய முடிவுடன் இந்த வெற்றிகளைக் கணக்கிடும் பொழுது, இப்பொழுது சந்திக்கவிருக்கின்ற சூழல் மிகவும் பாரதூரமானதாக இருந்தது. எனவே, முஸ்லிம்களின் அனைத்துப் பிரிவும் இப்பொழுது ஒன்று சேர்ந்து யர்முக் ஆற்றங்கரையில் குழுமினர்.

முஸ்லிம்களின் இந்தப் படை நகர்த்தலைக் கேள்விப்பட்ட ரோமப் பேரரசன் ஸீஸர் தனது மந்திரிப் பிரதானிகளிடம், நிலைமையின் விபரீதத்தை இட்டு கலந்தோசனை செய்த பொழுது, இப்பொழுது நாம் முஸ்லிம்களிடம் மோத வேண்டாம் என்ற கருத்தை மன்னர் மந்திரிப் பிரதானிகளிடம் தெரிவித்தான். ஆனால் மந்திரிகளோ, மன்னரின் கருத்தை ஏற்காமல்..,

முஸ்லிம்களுக்கு நாம் ஒரு பாடத்தைக் கற்பித்துக் கொடுக்க வேண்டும், இன்னும் அந்தப் பாடத்தை அவர்களின் சந்ததிகள் கூட மறக்கக் கூடாது என்று உருமினர். இறுதியாக, மந்திரிகளின் ஆலோசனை தான் வெற்றி பெற்றது. முஸ்லிம்களின் மீது படையெடுத்துச் செல்வது என்று முடிவாகியது.

முஸ்லிம்களைக் களம் காண 4 லட்சம் ரோமப் படைவீரர்கள் தயார் செய்யப்பட்டனர். ஆனால் முஸ்லிம்களின் தரப்பிலோ ஒட்டு மொத்தமாக 46 ஆயிரம் படை வீரர்கள் தான் இருந்தனர். இன்னும் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலப்படாமல், பல்வேறு தளபதிகளின் கீழ் யர்முக் ஆற்றின் வௌ;வேறு பகுதிகளில் தனித்தனியாகப் பிரிந்திருந்தனர்.

இந்த நிலையில் யர்முக் ஆற்றின் கரைக்கு தனது படையினருடன் வந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நிலைமையின் பாதகத்தை உணர்ந்து, அனைத்துத் தளபதிகளையும் அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார். இதனடிப்படையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளபதியின் கீழ் போர் செய்வது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு தளபதிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். முதல் நாள் போருக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்குவது என்றும் ஒருமனதாக முடிவாகியது.

எப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றாற்களோ, அப்பொழுது வீரர்களின் வீரத்தையும், உயிர் தியாக வேட்கையையும் உசிப்பி விடுவதற்கானதொரு வீர உரையை அவர்களுக்கு மத்தியில் ஆற்றினார். இந்த உரையின் தாக்கம் ஒவ்வொரு வீரரின் நாடி நரம்புகளிலும் பரவி, இப்பொழுது அவர்களது தாகமெல்லாம் எதிரிகளைச் சந்திப்பதிலும், அதில் வீர மரணமடைந்து அந்த முடிவறாத சுவர்க்கத்தை அனந்தரங் கொள்வதிலும் நிலைத்திருந்தது. மற்ற உலக பந்தங்களெல்லாம் அவர்களிடம் விடை பெற்று நின்றது.


                                                            பகுதி - 8 / பகுதி - 10



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment