Sep 10, 2015

மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் உல்லாச திருவிழாக்கள் தான்..!!!

 
சென்னையில் இன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக முதலமைச்சர் தலைமையில் துவங்கியது.
 
உலகத்திலுள்ள பெரும் பெரும் தொழிலதிபர்கள், தொழில் ஜாம்பவான்கள், பெரும் தனவந்தர்கள் ஆகியோரை அழைத்து  எங்கள் ஊருக்கு வந்து உங்கள் தொழிலை ஆரம்பியுங்கள். அதற்கான முதலீட்டை இங்கே போடுங்கள். உங்கள் வியாபாரம் செழித்தோங்க அரசு இயந்திரங்கள் துணை நின்று உதவிகள் செய்யும்  என்று அவர் களுக்கு ஆர்வமூட்டி அழைப்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம்.
 
தொழிலதிபர்கள் முன் வந்தால் பல பல கோடி ரூபாய்கள் இங்கே முதலீடு செய்யப்படும். இந்த வருமானத்தை கொண்டு அரசாங்கத்திற்கு பல அனுகூலங்கள் இருக்கின்றன. (கொல்லைப்புற அரசியல் வருமானங்கள் அது தனி) வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனால் இதிலும் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தலையீடுகள் இருக்கும்.
 
இரண்டு நாள் மாநாட்டிற்காக மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய்கள் வாரி இறைக்கப்படுகிறது.
 
மாநாட்டில் பங்கேற்க வரும் முதலீட்டாளர்களை மனங்குளிர வைக்க இரண்டு நாட்களும் உயர்தர சொகுசு ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. இவர்களை வரவேற்க விமான நிலையம் அலங்கரிக்கப்படுகிறது. விமானத்திலிருந்து இறங்கியவுடன் சிவப்பு கம்பள வரவேற்பு. வீதிகள் தோறும் இசை நடன நங்கைகளின் நாட்டியங்கள், நட்சத்திர ஓட்டல்களில் இரண்டு நாட்கள் தங்கும் வசதி. போக்குவரத்திற்கு சொகுசு வாகனங்கள். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஹைடெக் கேளிக்கைகள் போன்றவை விரிவாக ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமா இதை அனுபவிக்கப் போகிறார்கள்? இவர்களுடன் சேர்ந்து அமைச்சர்கள், உயர் மட்ட ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் என்று பலருக்கும் மக்கள் வரிப்பணத்தில் கொண்டாட்டம் தான். இப்படி இந்த இரண்டு நாட்களும் தமிழக அரசுக்கு வரக்கூடிய பில் தொகை சில கோடிகளை தாண்டும்.
 
சரி! இத்தனை செலவுகளும் மக்கள் நலப்பணிக்காக அரசு வருவாய்க்கும், வேலை வாய்ப்புகளுக்கும் தானே என்று நாம் நினைத்தால், வழக்கம் போல்  நாம்தாம் இளிச்சவாயர்கள்.
 
ஒரு நாட்டில் தொழில்
துவங்குவதற்கு மில்லியன் பில்லியன் என்று பணத்தை கொட்டும் வெளிநாட்டு பண முதலைகள் இவர்களுடைய இரண்டு நாள் குளிப்பாட்டுதலில் மயங்கி பணத்தை கொட்ட இவர்கள் என்ன கேனயன்களா?
 
முதலீடு செய்யும் முன் அந்த நாட்டின் மற்றும் மாநிலத்தின் அனைத்து சாதக பாதகங்களையும் (RISK) அலசி ஆராய்வார்கள்.
 
மின்சார வசதி, சாலை கட்டமைப்பு, தொழிலாளிகளின் அன்றாட கூலி விகிதம், தினசரி வேலை நேரம், வேலை திறன், பணவிகித மதிப்பு, லஞ்ச ஊழல் விகிதாச்சாரம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் போக்கு, அண்டை நாடுகளுடன் அணுகுமுறை, ஆட்சியாளர்கள் மற்றும் அரசின் ஸ்திரத்தன்மை இப்படி பட்டியல் நீளும்
 
சர்வதேச முதலீட்டாளர்களின் தற்போதைய மிக முக்கியமான சர்வேயிங் என்னவென்றால் முதலீடு செய்யும் நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் அரசு இயந்திரங்கள் அந்த நாட்டில் மத ரீதியாக, சாதிரீதியாக,மொழி ரீதியாக பொருளாதார ரீதியாக, அகதிகளாக, வெளிநாடுகளிலிருந்து பிழைக்க வந்தவர்கள் ரீதியாக உள்ள சிறுபான்மையினரின் குறைந்தபட்ச நம்பிக்கையை பெற்று  செயல்படுகிறதா? என்பதுதான்.
 
காரணம் இந்த அடிப்படையில் உள்ள சிறுபான்மையினர்களின் நம்பிக்கையை ஒரு அரசு இழந்துவிட்டால், அவர்கள் ஒரு பாதுகாப்பற்ற நிலையையும், அச்சுறுத்தலையும் உணர்ந்தால் அங்கே அடிக்கடி உரிமை போராட்டங்கள், பந்த்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் என்று வெடிக்கும். தொழில் வளர்ச்சியை பாதிக்கும். முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.
 
இதற்கு உதாரணமாக தற்போதைய லிபியாவையும், நம் அண்டை நாடான இலங்கையையும் எடுத்துக் கொள்ளலாம்.
 
லிபியாவின் கடாபி இருந்தவரை நாட்டை இரும்பு பிடிக்குள் வைத்திருந்தார். உலகத்திலேயே வெளிநாட்டு கடன் வாங்காத ஒரே நாடு லிபியாதான். வெளிநாட்டவர் அதிகமாக முதலீடு செய்த நாடுகளில் ஒன்றாக லிபியா இருந்தது. தற்போதைய நிலை என்ன? மில்லியன் பில்லியன் கணக்கான அத்தனை மூதலீடுகளும் dead investment ஆக முடங்கி விட்டது. இதேபோல் தான் இலங்கையின் நிலையும் இருந்தது. இன்னும் மீண்டு வர முடியவில்லை.
 
இதை நாம் விளங்கிக் கொள்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகம் குவியும் உலகத்தின் டாப் 20 நாடுகளின் பட்டியலை எடுத்துப் பாருங்கள். யதார்த்தம் புரியும்.
 
1. ஹாங்காங் 2. சிங்கப்பூர்  3. டென்மார்க்  4.கனடா  5.யுனைடெட் கிங்டம் 6. நெதர்லாந்து  7. பின்லாந்து  8. ஸ்விட்சர்லாந்து  9. ஆஸ்திரேலியா  10. அயர்லாந்து  11. எஸ்டோனியா  12.லக்ஸ்ஸம்பர்க்  13.ஸ்வீடன்  14. பெல்ஜியம்  15. ஐஸ்லாந்து  16.நார்வே  17.ஆஸ்திரியா  18. சிலி  19.சைப்ரஸ்  20.மலேசியா
 
நமக்கு மிகவும் பரிச்சயமான சிங்கப்பூர், மலேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். மதரீதியாக மொழிரீதியாக  அங்கே உள்ள சிறுபான்மை மக்களுக்கு அனைத்து உரிமைகளும் பாரபட்சமில்லாமல் தரப்படுகிறது. அரசியலிலும், அரசு அதிகார மையங்களிலும் சிறுபான்மையினர்  கோலோச்சுகிறார்கள். சிறுபான்மை என்ற அச்சுறுத்தல் இல்லாமல் பாதுகாப்பு உணர்வை பெற்று வாழ்கிறார்கள்.
 
அங்கே அதிகமான சர்வதேச முதலீட்டாளர்கள் படையெடுப்பதற்கு காரணம் இதுதான்.
 
இந்த நிலை இங்கே ஏற்படாத வரை இது போன்ற மாநாடுகளும் அழைப்புகளும் வீண் விரயமே.
 
இப்போது நாம் கேட்கலாம், மாநாட்டின் முதல் நாளிலேயே தமிழக அரசு நிர்ணயித்த இலக்கான முதலீடு ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது என்று முதல்வர் அறிவித்திருக்கிறாரே என்று கேட்கலாம்.
 
இது ஒரு ஏமாற்று என்பதை இது போன்று முதல்வர்கள் சொன்ன அறிவிப்பையும், இதோ இந்த நாட்டிலிருந்து முதலீடு செய்ய வந்திருக்கிறார்கள். இதோ அந்த நாட்டிலிருந்து முதலீடு செய்ய வந்திருக்கிறார்கள் என்றெல்லாம் முதல்வர்கள் வெளிநாட்டு முகங்களுடன் கோட்டையில் கை குலுக்கி போஸ் கொடுத்த பழைய புகைப்படங்களை எல்லாம் தூசி தட்டி எடுத்துப் பாருங்கள்.
 
முதலீடு ஒரு லட்சம் கோடியை தாண்டிவிட்டது என்று முதல்வர் சொன்னவுடன் வந்திருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டு மேடையில் பணத்தை கொடுத்து ரசீது பெற்றுக் கொண்டார்கள் என்று அப்பாவியாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
 
இவ்வளவு முதலீடு செய்கிறோம் என்று ஒப்பந்தத்திற்கான ஒப்புதலும், முதல் கட்ட ஆயத்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதை வைத்து முதல்வர்கள் அறிவிப்பு செய்வார்கள். அதன் பிறகு உண்மையான முதலீடு வருவதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறைய நடைமுறைகள் இருக்கின்றன.
 
சிறீபெரும்புதூரில் ஆரம்பிப்பதாக ஒப்பந்தம் போட்ட நோக்கியா கம்பெனி, சோனி கம்பெனி, ஹுண்டாய் கம்பெனியின் இன்னொரு பிரிவு இவையெல்லாம் எங்கே என்று கேளுங்கள்.
 
பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தப்படாத வரை இது போன்ற மாநாடுகள் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் உல்லாச திருவிழாக்கள் தான். சர்வதேச முதலீட்டாளர்களுக்கு சற்றே ரிலாக்ஸ் செய்துக்கொள்ள ஒரு கேளிக்கை சுற்றுலா. ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாத நம் வரிப்பணத்தில். அவ்வளவுதான்.
 
 
 

No comments:

Post a Comment