Sep 3, 2013

அமெரிக்காவுடனான ஈரானின் கடும்போக்கு குறித்த உண்மை நிலை என்ன? (பகுதி 02)



ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள மக்கள் உணவு, மருந்து இல்லாமல் மடிந்தபோதும் ஈரான் என்ன செய்தது? ஈரான் நினைத்திருந்தால் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியிருக்கலாமே. அமெரிக்காவிற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அறிக்கைகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான், எப்போதாவது அதை செயலில் காண்பித்தது உண்டா? ஈரானின் நடவடிக்கைகள், அமெரிக்க நலன்கள் ஈராக்கில் பாதுகாக்கப்பட உதவியுள்ளன என்பதற்கு ஏராளமான உதாரணங்களை கூறமுடியும். 2005 ஆம் ஆண்டு ஈரானிய ஆதரவு பெற்ற அமைப்புகளை சார்ந்த இப்ராஹீம் அல் ஜஃபரிமற்றும் அல் மாலிகி ஆகியோரை அமெரிக்கா அதிகாரத்தில் அமர்த்தியது. ஆக்கிரமிப்பிற்கு பிறகு இராக்கில் தூதரகத்தை மீண்டும் ஈரான் திறந்து கொண்டது. அல் மாலிகி ஈரானுக்கு விஜயம் செய்ததோடு பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 2008 ஆம் ஆண்டு அஹ்மது நிஜாத் ஈராக்கிற்கு இருமுறை விஜயம் செய்து அமெரிக்க பொம்மையான அல் மாலிகியை சந்தித்து அரசின் திட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அஹ்மது நிஜாத் 2010 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்து அமெரிக்க ஆக்கிரமிப்பின் பாதுகாவலனான ஹமீது கர்சாயை சந்தித்து அமெரிக்காவுடனான நல்லுறவை வெளிப்படுத்தினார். ஈரானின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்க நலன்களை பேணி பாதுகாக்கவே உதவுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவிற்கு எதிராக கண்டன அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கும் ஈரான் ஒருபோதும் செயலில் இறங்காது என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். எமனில் பிரிட்டனின் ஏஜெண்டாக ஆட்சி புரிந்த அலி சாலிஹுக்கு எதிராக அல் ஹவுதி மக்களை தூண்டிவிட்டு உதவி செய்த ஈரான், தெற்கு எமனின் பிரிவினைவாத மதச்சார்பற்ற குழுவிற்கும் உதவி செய்தது. அமெரிக்காவின் மறைமுக ஆதரவு பெற்ற குழுக்களுக்கு ஈரான் உதவுவதன் மூலம் அமெரிக்க நலன்களே பாதுகாக்கப்படுகிறது.

ஈரான் சிரியாவிற்கு பக்கபலமாக இருப்பது ஒன்றும் புதிய விசயமல்ல. பசர் அல் அசாதின் தந்தை ஹஃபிஸ் அல் அசாத் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ஆட்சியைப் பிடித்த காலகட்டத்திலிருந்தே இது தொடர்கிறது. அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக விளங்கும். அசாத் குடும்பத்தினரின் மதச்சார்பற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரபு தேசியவாதக் கட்சியான பாத் கட்சி, சதாம் ஹுசைனின் பாத் கட்சியோடு தொடர்பு கொண்டிருந்தது குறித்து ஈரான் நன்கு தெரிந்துகொண்டே அசாத் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளது. ஈரான் அரசாங்கம் சிரியாவுடன் ராணுவம், வர்த்தகம், அரசியல் நடவடிக்கை போன்ற விசயங்களில் எப்போதும் உறுதுணையாகவே இருந்துள்ளது. நெருக்கடி நேரங்களில் சிரிய அதிபரைக் காப்பாற்ற ஈரான் ஆயுத உதவி வழங்கி வருகிறது. முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பசர் அல் அசாதிற்கு ஈரான் பக்க பலமாக இருந்தது முதல் சமீபத்திய இரசாயன விசா வாயு படுகொலை சம்பவம் வரை உற்று நோக்குவோமானால், சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் அரசியல் ஆக்கிரமிப்பிற்கு ஈரான் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியுள்ளது நன்கு விளங்கும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஈரானும் சேவை செய்துள்ளது. வடக்கு பிராந்தியத்தில் ஈரானின் செயல்பாடுகளால் தாலிபான்களை அமெரிக்கா வீழ்த்த இலகுவாக முடிந்தது. “எங்களுடைய படைகள் தாலிபான்களுடன் போரிட்டிருக்காவிட்டால் அமெரிக்கா புதைகுழியில் சிக்கியிருக்கும்” என்று முன்னாள் ஈரான் அதிபர் ரப்சஞ்சானி கூறியிருந்தார் ((al-Sharq al-Awsat newspaper, 9/2/2002). அதே போன்று ஈரானிய துணை அதிபராயிருந்த முஹம்மது அலி அப்தஹி:- “எங்களுடைய ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் பாக்தாதும் காபூலும் அமெரிக்காவின் கைகளில் வீழ்ந்திருக்காது” என்று கூறியிருந்தார். (Islam Online Net, 1/13/2004) .. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் பங்கெடுக்க அமெரிக்கா சென்றிருந்த அஹ்மத் நிஜாத்:- “ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவிற்கு ஈரான் உதவிக்கரம் நீட்டியது. எனினும் எங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை குறித்த அமெரிக்காவின் நேரடி எச்சரிக்கையே எங்களுக்கு பலனாக கிடைத்தது .. மேலும் ஈராக்கில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட எங்கள் நாடு ஏற்கனவே உதவியுள்ளது” என்று கூறியிருந்தார் (The New York Times on 26/9/2008).

ஈரானின் அணு சக்தி திட்டத்தை பொறுத்தவரை, இஸ்ரேல் பலமுறை ஈரானை அச்சுறுத்தியது நாம் அறிந்த விசயமே. இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தும் அமெரிக்கா குறுக்கே நின்று இஸ்ரேலை தடுத்து வருகிறது. அமெரிக்கா 1981 ஆம் ஆண்டு இராக்கில் சதாம் ஆட்சியின்போது, கட்டுமான நிலையில் இருந்த அணுசக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி வழங்கியது. ஆனால் 20% யுரேனியம் செறிவூட்டப்பட்ட நிலையில் உள்ள ஈரானின் அணு சக்தி நிலைகளை தாக்க இஸ்ரேலுக்கு அனுமதி மறுத்து வருகிறது. அமெரிக்காவின் சொந்த நலன்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு கொடுத்துவருவதற்காக, ஈரானுடன் சுமூகமாகவே இருக்க அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு எதிர் சக்தியாக உருவகப்படுத்துவதன் மூலம் மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா விரும்புகிறது. ஈரானை ஒரு கருவியாக உபயோகித்து முஸ்லிம் நாடுகளின் மீது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலை நாட்டிவருகிறது. அணு ஆயுதம் குறித்த பேச்சு வார்த்தை 2003 ஆண்டு துவங்கிய காலம் முதல் பேச்சுவார்த்தை நடைபெறும்போதெல்லாம், அமெரிக்கா ராணுவ நடவடிக்கை குறித்து பேசாமல் தடை – sanction பற்றியே பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். இது ஐரோப்பிய யூனியனுக்கும் இஸ்ரேலுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின்போதும் தடை - sanction குறித்தே அமெரிக்கா வலியுறுத்தியது. ஒவ்வொருமுறை இந்த பிரச்சனை தோன்றும்போதெல்லாம் ஈரானைக் குறித்த அச்சத்தை அமெரிக்கா போக்கிவந்தது. அணு ஆயுத பிரச்சினையை தீர்க்கப்படாத ஒன்றாக வைத்துக் கொண்டு, ஈரானை ஒரு தாதாவாக சித்தரித்து மத்திய கிழக்கில் எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்த அமெரிக்கா முனைந்து வருகிறது. இதற்காகவே அமெரிக்கா ஈரானுக்கு மறைமுகமாக உதவி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சில விசயங்களில் பிரச்சனைகள் இருப்பது உண்மையே. இதை வைத்து ஈரான் அமெரிக்காவின் கடும் எதிரி என்று தீர்மானிக்க கூடாது. கொமைனி பாரீஸ் நகரின் அருகிலுள்ள Neauphle-le-Château என்ற இடத்தில் தங்கியிருந்தபோது வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து நடந்த பேச்சுவார்த்தை போன்று பல்வேறு சமரச பேச்சுவார்த்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் பொம்மையாக இருந்து ஆட்சிபுரிந்த ஷா வீழ்வது நிச்சயம் என்று விளங்கிகொண்ட அமெரிக்கா ஈரானிய புரட்சியின் பலனை தனக்கு இணக்கமாக மாற்ற சில வேலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டது. ஈரானை அச்சுறுத்துவது போன்ற வெகுஜனக் கருத்தை உருவாக்கி, அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னுடைய நலனை பாதுகாத்து வறுகிறது என்பதே உண்மையாகும் . எனவே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுமூகமான உறவே நிலவி வருகிறது என்பதையும். ஈரானின் கடுமையான எதிரி அமெரிக்கா என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment