Jul 16, 2014

இன்று காலத்தின் கட்டாயம் எது ?


அநீதமான ஒரு உணர்வுத் தூண்டல் மூலம் ஏகாதிபத்திய எதரி தனது இலக்குகளையும் ,நிர்ணயங்களையும் அடைந்து கொள்கிறான் .எவ்வாறு ?அந்த உணர்வு எனும் பொறி வேகமாக தற்காப்பை வேண்டிய ஒரு கட்டாய வன்முறைக் கலாசாரத்தை கையில் எடுக்கும் .உச்ச தியாகத்தையும் அற்புதமான பல சாகசங்களையும் சுமந்து பிரமித்த போராட்டமாக பரிணமிக்கும் . பின் அதிலிருந்தும் சூழ்ச்சிமிகு எதிரி தனது சதிகளை , விலைபேசல்களை தொடங்கி இன்னொரு நிர்ணயத்தையும் ஏற்படுத்தி விடுகிறான் .

இன்று பாலஸ்தீன போராளிகளின் சுடு சக்தி பிரமிக்கத் தக்க அளவு அதிகரித்து இருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன .அதில் இருக்கும் உண்மைத் தன்மைகளை விட முஸ்லிம்களாகிய எமக்கு இருக்கும் ஆத்திரமும் , கவலையும் இத்தகு செய்திகள் மூலம் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி விடுகின்றன . ஆனால் நிலைமை எமது தரப்பில் அதி மிகை சேதத்தை ஏற்படுத்தி உள்ளது ;என்பதுதான் கசப்பான உண்மை .

எதிரியின் தேவைக்காக முஸ்லீம்களின் போராட்ட உணர்வு தூண்டப்படுவதும் , பின் அதையே சாக்காக வைத்து தனது திட்டமிட்ட அடைவுகளை சியோனிச இஸ்ரேல் அடைந்து கொள்வதும் காலம் காலமாக தொடரும் உண்மைகள் . முஸ்லீம் உம்மத்தின் இஸ்திரமான அரசியல் இராஜதந்திர பின்புலமற்ற நிலை இத்தகு ஏமாற்றங்களுக்கு பின்னால் சுலபமாக அவர்களை அணிதிரட்டி விடுகிறது .

ஏதோ திருப்பி அடித்தோம் என்ற ஒற்றை திருப்தி தவிர இங்கு குறிப்பிடத்தக்க அடைவுகள் என்று இதுவரை கூறக்கூடியது எதுவும் இல்லை . சிலநேரம் இடைக்கால சமரச தீர்வுகள் ஒரு சிறந்த அடைவாக சிலரால் முன்வைக்கப் படலாம் . ஆனால் அங்கு நடந்துள்ளது என்ன !? இஸ்ரேல் என்ற கள்ளப் பிறப்புக்கு தேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுத்தது தவிர !

அதே நேரம் முஸ்லீம் உலகம் தனது பலம் வாய்ந்த இராணுவத்தை மற்றும் தளவாடங்களை ,தேசிய காட்சி சாலைக்குள் வைத்து பூட்டி அழகு பார்க்கும் துரோக அரசியலை செய்யும் இன்றைய நிலையில் . இத்தகு பதில் நடவடிக்கைகளில் திருப்திப்படுவது தவிர வேறு வழியில்லை .

ஒரே உம்மத் ,ஒரே தலைமை என்ற இஸ்லாத்தின் தனிப்பெரும் கிலாபா அரசியலை நபிவழியில் மீள் கட்டமைக்காதவரை பலஸ்தீனுக்கோ முஸ்லீம் உம்மத் திற்கோ நிரந்தர விடிவு சாத்தியமில்லை . ஆனால் இன்று இத்தகு அரசியலின் பெயரில் வெறும் உணர்வு பூர்வமான உருவாக்கங்கள் உலாவிடப்பட்டிருப்பதும் ,இஸ்லாத்தின் தீர்வு தொடர்பில் ஒரு சலிப்புடன் கூடிய அதிருப்தியை விதைக்கும் நடவடிக்கையாக கூட இருக்கலாம் .

அதாவது இத்தகு தூர தரிசனமற்ற , உத்தரவாதமில்லாத பிரகடனங்களின் பின்னரும் தனது சண்டித்தனத்தை சியோனிஸ்டுகள் காட்டி நிற்பது எமக்கு தடியை தந்து இரும்பால் அடிக்க நினைக்கும் சங்கதி போல் தான் இருக்கின்றது . எதிரியின் இத்தகு சதிமுக அரசியலில் இருந்து எம்மை பாதுகாத்து உறுதியான அரசியல் பின்புலத்தை வேண்டி பிராத்திப்பதோடு அதற்கான முயற்சிகளில் வேகமாக ஈடுபடுவது இன்று காலத்தின் கட்டாயம் ஆகும்

No comments:

Post a Comment