74] நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்
 
 
 
1967 - இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம்.
 
ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள்.
 
அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள்குற்றம் சாட்டினார்கள்.
 
நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்?
 
ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக்காரணமானது.
 
அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள்.
 
அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த 'கெரில்லா' தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:
 
1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7.Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal'at Yaqub Faction, 12.AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17.Palestinian People's Party [Hizb Al Sha'ab], 18. Palestinian Popular Struggle Front.
 
இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம்.
 
மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
 
வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.
 
இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.
 
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு. இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா.
 
அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம்.
 
அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.
 
சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.
 
உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு.
 
அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும்.
 
உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா'லாட் என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம்.
 
இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.
 
நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது.போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.
 
அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது,இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
 
ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள்.அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது.வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர்.
 
சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது.1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.'இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம்கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்' என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.
 
இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை.குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.
 
அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.'இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல.
 
அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே' என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.
 
பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.
 
அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான்.அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது.இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை.
 
தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது.
 
அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.
 
நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா - பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல.இந்தமாதிரி நிலப்பரப்பு ரீதியில் பெரிய இடைவெளிகளுக்கு அப்பால் ஒரே தேசத்தின் வேறொரு பகுதி இருக்கும் இடங்களிலெல்லாம், எப்போதுமே பிரச்னைதான். காஸா விஷயத்தில் என்ன பிரச்னை என்பதைப் பிறகு பார்க்கலாம்.
Reactions:

0 comments:

Post a Comment

வாசித்தவர்கள்

Blog Archive

தொகுப்புகள்

'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்
Powered by Blogger.

Map IP Address
Powered byIP2Location.com

Follow by Email

Enter your email address:

Delivered by FeedBurner

இஸ்லாமிய மறுமலர்ச்சி

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

அதிகம் வாசித்த பதிவுகள்

About Me

My photo
“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com