Nov 10, 2015

இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட்.

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 73
 
 
 
பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை.


அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன?


அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா?


பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும்.


அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது?


ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?


எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது.


ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர்நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.


எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா?


அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில்அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?


இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).


உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது.


பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது.


சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.


ளின்டின் பணிகள் மிகவும் எளிமையானவை.
 
1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
 
2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல்,
 
3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல்.
 
4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.


இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே.


இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது.


ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம்கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.


இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.


இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000.
 

ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக் கணக்கில் உலகெங்கிலும் உண்டு.


மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம்.


உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும்.


உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள்.


இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும்.


எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள்அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை.


மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)


1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.
 
 
2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.
 
 
3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.
 
 
4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.
 
 
5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.
 
 
6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.


இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.


முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.


பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு,


படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி.


ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள்.
 
அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்!


கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!


இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.


மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான்.


அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும்.


எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.


இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப் படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.


மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான் மொஸாட் செயல்படுகிறது.


இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது.


பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 ஆகஸ்ட், 2005

No comments:

Post a Comment