ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 1

    

 
நவம்பர் 23, 2012 ஜெனீவாவில் அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் நடக்கிறது. இரு நாடுகளும் தமது உறவுகளை சுமூகப்படுத்திக்கொள்கின்றனர். இந்த ஒப்பந்தம் இருதரப்புக்குமிடையான


அனைத்து பிரச்சனைகளையும் உடனே தீர்க்கும் வண்ணம் அமையாவிட்டாலும் அதற்கான முதற்படியாக கருதப்பட்டது. £7 பில்லியன் பெறுமதியான பொருளாதாரத் தடைத்தளர்வு ஈரானுக்கு வழங்கப்படுகிறது. ஈரான் அணுச் செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த 6 மாதங்களுக்கு முடக்கி வைக்கிறது. முன்னைநாள் பேச்சுக்களைப் போலல்லாது இம்முறை பேச்சுக்கள் வித்தியாசமான சூழலில் இடம்பெறுகிறது. முன்னைய காலங்களில் அமெரிக்கா ஈரானுடனான பேச்சுக்களை P5+1(அமெரிக்கா, ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனி) என்ற கூட்டணியின் கையில் விட்டுவைத்திருந்தது. ஆனால் இம்முறை 1979ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முதலாக அமெரிக்கா தனது அதியுச்ச அதிகாரிகளைக்கொண்டு நேரடியாகப் பேச்சுக்களில் குதித்தது. வழமைபோல் பேச்சுக்களை கைவிடும் மனோபாவத்துடன் அமெரிக்கா இப்பேச்சுக்களை அணுகாமல் உண்மையில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற தன்னார்வத்துடன் செயற்பட்டது. இந்தப்பேச்சுக்களை தொடர்ந்து செப்டெம்பர் 2013இல் அப்போது புதிதாக பதவியேற்றிருந்த ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தனது முதலாவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பங்கேற்புக்காக அமெரிக்காவுக்கு பயணமாகிறார். இரு நாடுகளுக்கிடையிலான தேன்நிலவுப் பயணத்திற்கு பாதை திறக்கப்படுகிறது.

இந்த நிகழ்வுகளின் நகர்வுகள் கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தன. ஏன் அமெரிக்கா ஈரானின் தோலில் தட்டிவிட வேண்டும்? அண்மைக்காலம் வரையில் அமெரிக்காவை ஆகப்பெரிய சைத்தான் எனக்கூவிய ஈரான் ஏன் அமெரிக்காவுடன் ஊடல் கொள்ள வேண்டும்? இங்கேதான் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் சர்வதேச நிகழ்வுகளின் முன்னேற்றங்களை மிக நுணுக்கமாக நோக்க வேண்டிய தேவை உணரப்படுகிறது. ஒரு கணம் நாம் கண்மூடிவிட்டால் அரசியல் அந்தபுறங்களில் காட்சிகள் மாறிவிடலாம். உலக வல்லாதிக்க சக்திகளின் நோக்கங்கள் என்ன? அவர்கள் எமது நிலங்களில் விரித்திருக்கும் அரசியல் சதிவலைகள் என்ன என்பதை நாம் உணராது போனால் எமது உம்மத்தை விடுதலை செய்யும் சரியான பாதையிலிருந்து நாம் திசை மாறி விடுவோம். இந்த உண்மையை மனதில் நிறுத்தி அமெரிக்க - ஈரானிய கூட்டுறவை அலசுவது எமது எதிர்காலத்தை பாதுகாக்க தவிர்க்க முடியாததாகும்.