Mar 26, 2016

தெஹ்ரானின் பார்வையில் மத்திய கிழக்கு

 

ஈரான் - மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய முகவர் பாகம் – 3

ஈரான் தன்னை பிராந்திய வல்லரசாக வளர்த்தெடுக்க காய் நகர்த்திக்கொண்டிருகின்றது. இந்த உண்மை பல்வேறுபட்ட ஈரானிய அரசியல்வாதிகளில் கருத்துக்களில் தொனிப்பதை தெளிவாக அவதானிக்கலாம். உதாரணங்களாக சிலதை இங்கே குறிப்பிடலாம். 2009 இல் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் Manouchehr Mottaki சொன்னார், “சர்வதேச விவகாரங்களில் ஈரானின் பாத்திரத்தை அவதானித்தால் தெரியும் ஈரான் ஒரு பிராந்திய வல்லரசாக எழுந்து வருவதுஅதேபோல் மஹ்மூத் அஹ்மதினெஜாத் ஒரு முறை இவ்வாறு கூறியிருந்தார், “நாங்கள் அதிவேகத்தில் வல்லரசாக மாறிவருகிறோம். எங்களது பலம் இராணுவ ஆயுதங்களிலிருந்தோ, பொருளாதார ஆளுமையிலிருந்தோ வரவில்லை. எங்களது பலம் மக்களின் உள்ளங்களையும், ஆன்மாக்களையும் செல்வாக்குச் செலுத்துவதில் எங்களுக்குள்ள ஆளுமையிலிருந்தே வருகின்றது. அது அவர்களை பீதிகொள்ளச் செய்கிறது.”

இவ்வாறு ஈரானின் வல்லரசுக்கனவை நனவாக்குவதற்கு, சர்வதேச ரீதியாக வாழ்கின்ற ஷிஆக்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதியாக தம்மை ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு முக்கிய மைற்கல்லாக அவர்கள் கருதுகின்றனர். உதாரணமாக ஷிஆ கிரசண்ட் (ஷிஆ வளர்பிறை) என்ற வியூகத்தை சாட்டாகக்கொண்டு ஷீஆக்கள் கணிசமானளவு வாழ்கின்ற வெளிநாடுகளில் அது தலையிடுவதைக் குறிப்பிடலாம். இது சவூதி அரேபியா போன்ற நாடுகளை எதிர்கொள்வதில் ஈரான் பயன்படுத்தும் முக்கிய மூலோபாயமாகும். சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களில் ஷிஆக்கள் செறிந்து வாழ்கின்றனர். மேலும் அப்பிராந்தியங்கள்தான் சவூதியின் முக்கிய எண்ணெய் வயல்கள் காணப்படும் பகுதிகளாகும். சவூதியை பலகீனப்படுத்துவதற்காக சவூதிக்குள் இடம்பெற்ற பல எழுச்சிப்போராட்டங்களுக்கு ஈரான் முழுமையான பங்களிப்பைச் செய்தது. மேலும் பெரும்பான்மை ஷிஆக்களை, சிறுபான்மை சுன்னி முஸ்லிம்கள் ஆண்டுவரும் பஹ்ரேனிலும் ஈரான் இதே கொள்கையைத்தான் கடைப்பிடித்தது. பஹ்ரைனிலே மக்கள் எழுச்சி ஆரம்பித்து வீரியமடைந்த போது சவூதி அரேபியா உடனடியாக தனது துருப்புக்களை பஹ்ரேனுக்குள் அனுப்பியதும், ஈரான் பஹ்ரேனில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலைப்பயன்படுத்தி பஹ்ரேனின் ஆட்சிபீடத்தை ஆட்டங்காணச்செய்துவிடும் என்ற அச்சத்தில்தான்.

மேலும் பிராந்தியத்தில் ஒரு உறுதியான அலகாக இயங்குவதை நோக்கமாகக் கொண்டே ஈரான் சிரியாவின் தலைமையுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்குமிடையே மிக உறுதியான இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் பேணப்படுகின்றன. அஸாத்தின் அரசுக்கு முட்டுக்கொடுப்பதற்காக கணிசமானளவு இராணுவத்தாளபாடங்களை வழங்கியுள்ள ஈரான் எண்ணெய் மற்றும் நிலவாயுக்களை மிகக்குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. சிரியாவில் தொடரும் மக்கள் புரட்சியினால் அஸாத்தின் அரசு சரிந்து வீழ்ந்துகொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்காக பொருளாதார உதவிகள் தொடங்கி, இராணுவ ராஜதந்திர உதவிகள் வரை ஈரானின் முழுமையான ஒத்துழைப்பை நோக்கியால் இவர்களின் அரசியல் கூட்டுறவை புரிந்து கொள்ளலாம். ஈரானின் தலையீடோ அல்லது அதனது புரட்சிப் பாதுகாப்புப்படையின் நேரடிப்பங்களிப்போ கிடைக்காதிருந்திருத்தால் சிரிய அயோக்கிய அரசு என்றோ அழிந்து போயிருக்கும்.

ஈரான் பிராந்தியத்தில் சந்திக்கின்ற மிகப்பெரிய சவால்களின் ஒன்று இஸ்ரேலிடமிருந்தும், சவூதியிடமிருந்தும் வருகின்ற பிராந்திய ஆதிக்கப்போட்டியாகும். அவர்களும் பிராந்திய மேலாதிக்கத்திற்காக முயன்று வருபவர்கள் என்பதால் இந்த போட்டிநிலையை ஈரானால் தவிர்க்க முடியாது. அதேபோல ஈரான் அமெரிக்காவிடமிருந்தும் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. ஏனெனில் அமெரிக்கா இந்தப்பிராந்தியத்தை வேறுயாருடனும் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் மறுத்து வருகின்றது. எனவே இந்த சவால்களுக்கு மத்தியில் தமது பிராந்தியக்கனவை எந்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை நிரூபிக்க ஈரான் சில அரசியல் வீம்புகளை இடைக்கிடையே செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

தம் விடயத்தில் எச்சரிக்கையாக இரு என்பதை அமெரிக்காவுக்கு உணர்த்தும் வண்ணம் ஈரானின் கொள்கைகள் அமெரிக்காவை நம்பாதிருத்தலிலிருந்து அமெரிக்காவுடன் நெருங்கி இயங்குதல் என்ற நிலைக்கு அடிக்கடி மாறி வருவதை அவதானிக்கலாம். 2009 இல் ஈரானியப்புரட்சியின் முப்பதாவது நினைவாண்டை அடிப்படையாகக் கொண்டு பிபிசி தயாரித்த விபரணப்படத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஈரானில் 1997-2005 காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த முஹம்மத் கதாமி கருத்துச் சொல்கையில், தனது நிர்வாகத்தில் அமெரிக்காவுடன் ஈரானின் உறவை சுமூகநிலைக்கு கொண்டுவருவதற்காக பல்வேறுபட்ட முயற்சிகள் இடம்பெற்றதாகவும் மேலும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பின்போது அமெரிக்காவுக்கு தாம் ஆப்கானிஸ்தானிலுள்ள தாக்குதல் இலக்குகள் தொடர்பான வேவுத்தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார். வட கூட்டமைப்பினர் (Norther Alliance) காபுலை கைப்பற்றுவதற்கு தாம் ஆற்றிய பாரிய பங்களிப்பு தொடர்பாகவும், காபுலிலே ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு எவ்வாறு தாம் உதவினோம் என்பது தொடர்பாகவும் கோடிட்டுக் காட்டினார். இதற்கு காரணம் தலிபான்களை அமெரிக்கா தாக்குவது என்பது ஈரானின் நலனையும் அடிப்படையாக்கொண்டதே என்றும் அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவுடன் சுமூக உறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈரான் இறங்கியது 2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது. எனினும் அமெரிக்கா அதற்கு அப்போது சம்மதிக்கவில்லை.

இதே ஆவணப்படத்தில் தாம் ஈராக்கிய ஆக்கிரமிப்பின்போது அமெரிக்காவுடன் பங்காளியாகிக் கொள்ள முயன்ற விபரத்தை கதாமி பின்வருமாறு விபரிக்கிறார். “சதாம் சைன் எமது எதிரி, அவர் அழிக்கப்படுவதை நாங்களும் விரும்பியிருந்தோம். எனவே ஆப்கானிய அனுபவத்தை ஈராக்கிலும் மீட்டுவோம். ஆறுடன் ஆறை சேர்த்துக்கொள்வோம் - ஈராக்குடன் எல்லையைக்கொண்ட ஆறு நாடுகளையும்;, அமெரிக்காவையும், (.நா) பாதுகாப்புச் சபை உறுப்பினர்களையும் எகிப்த்தையும் இணைத்து. ஈரானை பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு சக்தியாகப் பாருங்கள், மாறாக அதனையே ஒரு பிரச்சனையாகப் பார்க்காதீர்கள்;.” இவ்வாறு சதாம் }சைனை வீழ்த்தும் முயற்சியில் முழுமையாக பங்குபற்றுவதற்கு ஈரான் விரும்பினாலும் அமெரிக்கா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதிலும் ஈரான், 1982 இல் தெஹ்ரானில் உருவாக்கப்பட்ட Islamic Supreme Council of Iraq(ISCI) என்ற அமைப்பைப்பயன்படுத்தி ஈராக்கிலுள்ள ஷிஆத்தரப்புக்களை ஒன்றிணைத்து அமெரிக்கா உருவாக்கிய அரசியல் முறைமையில் உள்நுழைத்தது. இந்த நகர்வு தென் ஈராக்கிலுள்ள கிளர்ச்சிகளை முற்றுப்பெறச் செய்து அமெரிக்காவை மத்திய ஈராக்கில் உருவாகியிருந்த கிளர்ச்சிகளில் கவனத்தைக் குவிக்க உருதுணையாக இருந்தது. அரசாங்க உயர் பதவிகள், இலஞ்சங்கள், வெகுமதிகள் என்பவற்றின் ஊடாக ஈராக்கிய தீர்வுக்குள் ஈரான் சார்பு தரப்புக்களை அமெரிக்கா உள்வாங்கிக்கொண்டது. இவ்வாறு ஈரான் விரும்பியிருந்தால் ஈராக்கிலே, அமெரிக்காவை இரத்தப்பெருக்கெடுத்து அழிய விட்டிருக்கலாம். எனினும் அது பூரண விருப்பத்துடன் அதற்கு பிராணவாயுவை செலுத்திக்கொண்டிருந்தது.

ஈராக்கிய – சிரியப் புதிர்

No comments:

Post a Comment