Jun 21, 2016

ரமழானும் உம்மத்தின் அதிமுக்கிய பொறுப்புக்கள் இரண்டும்!

       

 
அல்லாஹ்(சுபு) தனது நிறைவான ஞானத்திலிருந்தும், அதியுயர் அதிகாரத்திலிருந்தும் தனது அடியார்களில் சிலரை விட சிலரை மேன்மைப்படுத்தியிருக்கிறான். பூமியில் சில இடங்களை விட  சில இடங்களையும், சில சமூகங்களை விட சில சமூகங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அது போன்றே ரமழான் மாதத்தை ஏனைய அனைத்து மாதங்களையும் விடவும் சிறப்பான மாதமாக அறிவித்திருக்கிறான். அதற்கொரு முக்கிய காரணத்தையும் அவன் திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;
(அல் பகறா:185)

எனவே ரமழானின் அடிப்படைச் சிறப்பு  என்னவென்றால் அது அகிலத்தாருக்கு வழிகாட்டியை கொண்டு வந்திருக்கிறது. அண்ட சராசரங்களை படைத்து கட்டியாளும் அந்த ரப்பின் நற்செய்திகளையும், எச்சரிக்கைகளையும் சுமந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இறுதித்தூதான புர்கானை மாத்திரமல்லாது, தவ்ராத்தையும், இன்ஜீலையும், சபூரையும் கூட ரமழான் மாதத்திலேயே அல்லாஹ்(சுபு) அருளியிருப்பது ரமழானின் தனிச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

அத்தகைய சிறப்புக்குரிய மாதமான ரமழானிலே திருக்குர்ஆனை அருளிய அல்லாஹ்(சுபு), அது யாருக்கு வழிகாட்டியாகப் பயன்படும்; என்பது பற்றியும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; தக்வா பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல் பகறா:2)

உறுதியான இறைவிசுவாசமும், அனைத்து சந்தர்ப்பத்திலும் அவனது பிரசன்னத்தை மறந்திராத விழிப்புணர்வும், என்றும் அவனது விசாரணைக்கு அஞ்சி வாழ்கின்ற இறையச்சமும் உள்ள ஒருவருக்கே அல்லது ஒரு சமூகத்திற்கே அல்குர்ஆன் வழிகாட்டியாக தொழிற்படும் என்பதே இதன் பொருளாகும். ரமழானிலே மனித குலத்திற்கான வழிகாட்டலை வழங்கியதற்காக அந்த மாதத்தை ஏனைய மாதங்களை விட சிறப்பித்த அல்லாஹ்(சுபு), அந்த வழிகாட்டலால் பயன் பெறக்கூடிய ஒரு சமூகத்தின் முக்கிய பண்பான தக்வாவை வளர்ப்பதற்கான ஓர் பயிற்சியையும் அதே மாதத்திற்குள் பொதித்திருப்பது அவனது வழிகாட்டலின் பரிபூரணத் தன்மையை நிரூபிக்கிறது. ரமழானில் நோன்பை  அல்லாஹ்(சுபு) கடமையாக்கியிருப்பது அதற்காகத்தான். நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் குறித்து விபரிக்கும் இந்த திருமறை வசனம் இதனை தெளிவுபடுத்துகிறது.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தக்வாயுடையோர் ஆகலாம்.
(அல் பகறா:183)

எனவே ரமழான் மாதத்தை அடைந்திருக்கின்ற முஸ்லிம் உம்மத்தின் மீது குறைந்தது இரண்டு முக்கிய பொறுப்புக்கள் இருக்கின்றன. முதலாவது, மனிதகுலத்தின் வழிகாட்டியான அல்குர்ஆனை தனது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அமூல்படுத்த அது தயாராக வேண்டும். அல்லது அதற்காக முயற்சிக்க வேண்டும். இரண்டாவது, அந்த வழிகாட்டலை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடய மனோபாவமான தக்வாவை இந்த மாதத்தில் மிக ஆழமாக வளர்த்துக் கொள்ள அது எத்தனிக்க வேண்டும்.

முதலாவது அல்குர்ஆனை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வது என்பதன் பொருள் என்ன என்பதை மேற்குறிப்பிட்ட அல் பகறாவின் 185 வசனத்தின் ஊடாக சுருக்கமாக பார்ப்போம்...

இந்த வசனத்தின் ஆரம்பத்தில் அல்குர்ஆனை அல்ஹுதா என அல்லாஹ்(சுபு) அறிமுகப்படுத்துவது “ அது சத்தியத்தின்பாலும், ஸிறாத்தல் முஸ்தக்கீமின் பாலும் வழிகாட்டக்கூடியது என்ற பொருளிலும், கால, இட வேறுபாடுகளைக் கடந்த முழு மனதிகுலத்திற்குமான பூகோள வழிகாட்டி என்ற பொருளிலுமாகும்.

தொடர்ந்து பய்யினாத் மின் அல் ஹுதா என்று அல்லாஹ்(சுபு) தெரிவிப்பது, அந்த வழிகாட்டலுக்கான (அனைத்தையும் பற்றிய) மிகத்தெளிவான விளக்கமாக அது அருளப்பட்டிருக்கிறது என்பதையும், அது எதனுடனும் ஒப்பிடமுடியாத, இன்னொருவரால் கொண்டு வர முடியாத அல்லாஹ்(சுபு) வின் தீர்க்கமான அத்தாட்சி என்பதையும் தெளிவுபடுத்துவதாகும். இமாம் அல் மவர்தி இந்த வசனத்தில் வருகின்ற (பய்யினாத் மில் அல் ஹுதா மற்றும் அல் புர்கான்) என்ற சொல்லாட்சிகள் குறித்து குறிப்பிடும் போது “அது எது ஹலால், எது ஹராம் என்பதை விளக்குவதாகவும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய அளவுகோளாகவும் வந்திருக்கிறது” என விளக்குகிறார்கள்.

இறுதியாக அல்குர்ஆன் தன்னை அல் புர்கான் அதாவது அளவுகோல் என்று அழைக்கும் சொல்லாட்சி அது சத்தியத்தையும், அசத்தியத்தையும், நல்லதையும், கெட்டதையும், நல்ல செயலையும், கெட்ட செயலையும் வேறு பிரிக்கக் கூடியது என்ற பொருளை விளக்குவதாக அமைந்துள்ளது. இமாம் அல் பைதாவி அல்குர்ஆன், தன்னை “பய்யினாத் மின் அல் ஹுதா மற்றும் அல் புர்கான் - என இரு விதமாக அறிமுகப்படுத்துவதன் ஊடாக சொல்லவருவது, அல்லாஹ்(சுபு), அல்குர்ஆனை அற்புதத்தன்மை பொருந்திய, மனிதகுலத்திற்கான வழிகாட்டியாக அருளியுள்ளதுடன் அது சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடிய மிகத்தெளிவான வசனங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது. மேலும் அது தனக்கும்; ஏனைய பிழையான சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் இடையான வித்தியாசத்தை பிரித்துக் காட்டக்கூடியதாகவும் இருக்கிறது” என்று விளக்கம் அளிக்கிறார்கள்.

ரமதான் மாதத்திலே அல்குர்ஆனின் மகிமை பற்றி மஸ்ஜித்கள், குத்பாக்கள், வெகுசன ஊடகங்கள் என அனைத்திலும் ஞாபகமூட்டப்படுவதைப் பார்க்கிறோம். இம்மாதத்தில் அதனை ஓதுவதன் சிறப்புப்பற்றியும், அது தரக்கூடிய அதியுயர் வெகுமதி பற்றியும் நாம் தொடர்ந்து நினைவு படுத்தப்படுகிறோம். எனினும் நாம் மேலே சுட்டிக்காட்டியதைப்போல அதனை முழுமையான அந்தஸ்த்துடன் அணுகுகிறோமா? அல்லது அது வெறுமனவே பாராயணம் செய்வதற்கும், ஒரு சில கிரிகைகளில் ஓதுவதற்கும் மாத்திரம் பயன்படுகிறதா? ஏன் அல்குர்ஆனை ஹுதாவாவும்(வழிகாட்டி), அல் புர்கானாகவும்(அளவுகோல்) நாம் பயன்படுத்துவதில்லை? ஏன் முஸ்லிம் உம்மத்தின் விவகாரங்களை அல்குர்ஆன் தீர்மானிப்பதில்லை?  இவை போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளித்தால் எமது அணுகுமுறையின் ஆபத்து புலப்படுவதுடன் இன்று உம்மத் அடைந்துள்ள இழிநிலை ஏற்பட்டதற்கான காரணிகளும் தெளிவாகும்.

இன்று தராவீஹ் தொழுகைகளிலே அல்குர்ஆன் அதிகமதிகம் பாராயணம்  செய்யப்படுவதும், நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்(சுபு) திருப்த்தியைப் நாடி இந்த மாதத்திலே ஒருமுறையேனும் முழு குர்ஆனையும் ஓதி முடிக்க முயன்று வருவதும் சந்தோசமான விடயங்கள்தான். எனினும் அந்த அல் குர்ஆன் எதற்காக அருளப்பட்டதோ அந்த நோக்கத்தை இன்று வரை எம்மால் நிறைவேற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது? எமது சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நீதித்துறைகள் அனைத்தும் அல்குர்ஆன் வழிகாட்டாத, இஸ்லாம் சொல்லாத அந்நிய சட்டங்களாலும், கொள்கைகளாலும் அல்லவா வழிநடத்தப்படுகின்றன? எமது அகீதாவுக்கும், பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும், வரலாறுக்கும் மாற்றமாக மனித மூளைகளிலிருந்து உதித்த சடவாத சிந்தனைகளினால் அவை கட்டுப்படுத்தப்படுவதையும், முதலாளித்துவ சிந்தனைகளாலும், முறைமைகளாலும் நாம் ஆளப்பட்டு வருவதையும் அல்லவா நாம் அனுபவித்து வருகிறோம்? காலத்திற்கு காலம் சீர்திருத்தம் என்ற வேடம் தரித்து வந்த அந்நிய சிந்தனைகள் அல்குர்ஆனை எமது நடைமுறை வாழ்விலிருந்து படிப்படியாகப் பறித்து விட்ட பிறகு நாம் இந்த இழிநிலையை அடைந்திருப்பது தவிர்க்க முடியாததுதான்.

இஸ்லாமிய அரசியல் அதிகாரம் சுமார் ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் முஸ்லிம்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்ட பின்னர் உம்மத்தின் விவகாரங்களை ஆளுகின்ற சட்டங்களும், முறைமைகளும் இஸ்லாம் அல்லாத மூலங்களிலிருந்தும், பெறுமானங்களிலிருந்தும் பெறப்பட்டு மோசடியான கொடுங்கோலர்களின் கரங்களினால் எம்மீது அமூல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடருகின்ற இந்த அரசியல் சாபத்தின் விளைவு சர்வாதிகாரமும், கொடுங்கோலும், வறுமையும், வன்முறையும், பலகீனமும், பாரபட்சமும் கொண்ட தேசமாக எமது தேசம் மாறியிருக்கிறது. அனைத்து வளங்களையும் பெருமளவில் கொண்ட எமது நிலங்கள் தற்போது பொருளாதார மேம்பாடற்ற, கைத்தொழில் முன்னேற்றமற்ற பிராந்தியங்களாகவும், மேற்குலகின் சுரண்டல் சந்தைகளாகவும்  உருமாறியிருக்கின்றன.

ஆனால் நம்பிக்கை தருகின்ற விடயம் என்னவென்றால் எமது மிக அண்மிய வரலாறு மாற்றத்திற்கான வேட்கை உம்மத்தில் மீண்டும் ஓங்கி வருவதை காட்டுகிறது. மக்கள் அதற்காக எவ்விலையையும் தர தயாராகி வருகிறார்கள் என்பதை தெரிவிக்கிறது. அரபுலகில் வெடித்த புரட்சிகள் மக்கள் மத்தியில் பலமான சிந்தனை அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன. சிரியாவிலே அரை தசாப்த்தங்களையும் தாண்டி இன்று வரை பஷாருக்கு எதிரான புரட்சி நிலைத்து நிற்கிறது என்றால் அது குறைத்து மதிப்பிடமுடியாத நல்ல சமிஞ்ஞையே. அல்ஹம்துலில்லாஹ்!

உம்மத்தில் தோன்றியிருக்கின்ற இந்த மாற்றம் ஆறுதல் அளித்தாலும் எப்போது அல்குர்ஆன் எமது அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மாறுகிறதோ, எமது வாழ்வியல் விவகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக செயற்பட ஆரம்பிக்கிறதோ அப்போது மாத்திரமே உண்மையான மாற்றம் சாத்தியமாகும். எமது துயரங்களும், கஷ்டங்களும் அது வரையில் அகழப் போவதில்லை. அந்த உண்மை மாற்றத்தை அடைவதற்கு அல்குர்ஆன் தன்னைத்தான் அறிமுகப்படுத்துவதைப்போல அல்குர்ஆனை உம்மத் பூரண வழிகாட்டியாகவும் (ஹுதாவாகவும்), அந்த வழிகாட்டலின் விளக்கமாகவும், தனது வாழ்வுக்கான ஒரேயோரு அளவுகோலாகவும்(புர்கானாகவும்) முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே மறுமலர்ச்சியின் பாதையில் அதனால் பயணிக்க முடியும்.

அல்குர்ஆனை முஹம்மத்(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் இவ்வாறு எடுத்துக்கொண்டதன் விளைவுதான் அவர்களால்; முழுக்க முழுக்க அல்குர்ஆனிய ஆளுமைகளாக நடமாட முடிந்தது. அல்குர்ஆனிய சமூகமொன்றை முதன்முறையாக மதீனாவில் நிலைநாட்ட முடிந்தது. இதேபோன்றதொரு ரமழான் மாதத்திலே பத்ர் களமானது, யவ்முல் புர்கானாக - (சத்தியவான்கள் யார்?, அசத்தியவான்கள் யார்? எனத் தீர்மானிக்கும் நாளாக) மாறியதென்றால் அதற்கு காரணம் அல்குர்ஆனை அவர்கள் அல்புர்கானாக ஏற்றுக்கொண்டதே. அதேபோல அவர்கள்  அல்குர்ஆனை ஒரு பாரிய சமூகப்புரட்சியின் ஆயுதமாக எடுத்துக்; கொண்டதன்; விளைவுதான் மீண்டும் ஒரு ரமழானில் மக்காவை வெற்றி கொண்டு முழு அரேபிய தீபகற்பத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு அல்குர்ஆன் தம்மீது சுமத்திய பொறுப்பின் பரப்பை ஸஹாபாக்கள் மாத்திரம் புரிந்திருக்க வில்லை. அதற்கு பின்னர் வந்த இஸ்லாமிய சமூகமும் பல நூற்றாண்டுகளாக உணர்ந்திருந்தது. அதனால்தான் எவ்வாறு ரமழான் மாதம் ஸஹாபாக்களுக்கு வெற்றியின் மாதமாக அமைந்ததோ, அவர்களுக்கு பின் வந்தவர்களுக்கும் அது வெற்றியின் மாதமாக திகழ்ந்தது. சலாஹ}த்தீன் அய்யூபி ஹித்தீன் சமரில் சிலுவை யுத்தக்காரர்களுக்கு முடிவு கட்டியதும், ஐன்ஜாலூத் போரில் சைப்புத்தீன் குத்ஸ் தாத்தாரியர்களை முறியடித்ததும் இந்த மாதத்தில்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. எனவே அல்குர்ஆனை முழுமையான வழிகாட்டியாக, நிரந்தரமான அளவுகோலாக கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை இன்றைய முஸ்லிம் உம்மத் ஏற்றாக வேண்டும். அதனை இந்த ரமழான் மாதம் அவர்களுக்கு ஞாபகப்படுத்துமாக இருந்தால் அது விமோசனத்தின் முதற்படியாக அமையும்.

எனினும் தாஹுத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்தின் கீழும், கொடுங்கோண்மையான குப்ரிய ஆட்சிகளுக்கு கீழும் பல இருண்ட யுகங்களை கடந்து வருகின்ற உம்மத்திற்குள் இந்த தலைகீழ் மாற்றம் தோன்றுவது இலகுவான காரியமல்ல. அந்த மாற்றம் மிக உறுதியான ஈமானும், துடிப்புள்ள தக்வாவும் இருக்கின்ற ஒரு உம்மத்தில் மாத்திரமே தோற்றம் பெறும். இந்தக்கருத்து நாம் இந்தக் ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இரண்டாவது பொறுப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது. அதுதான் தக்வாவை அடைந்து கொள்வது பற்றியது.  அல்லாஹ்(சுபு) நோன்பை கடமையாக்கியிருப்பதும், இராப்பொழுதுகளில் நின்று வணங்கச் சொல்லியிருப்பதும் அல்லாஹ்(சுபு)வின் பிரசன்னத்தை கனப்பொழுதும் மறவாத ஓர் உயர்ந்த உம்மத்தை தோற்றுவிக்கவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரமழானிலே இரவு பகலாக வளர்க்கப்படும் இந்த மனோபாவம் அல்லாஹ்(சுபு)வின் வழிகாட்டலை உம்மத்தின் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அமூல்படுத்துவதற்கு இன்றியமையாதது. எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளை கடக்க வேண்டி ஏற்பட்டாலும் அவனது தீனை இந்த உலகத்திலே நிலை நாட்டுவதற்கு தக்வா எனும் இந்த மனோநிலையே அடிப்படையான ஆயுதம். எப்போது தக்வா என்னும் இந்த மனோநிலை உம்மத்திடம் வலுவிழந்து போனதோ, எப்போது அல்லாஹ்(சுபு)விற்கு மாற்றாக அவனது சிருஷ்டிகளின் பால் அதனது அவதானமும், அச்சமும் தோன்றியதோ அப்போதே அழிவின் பாதையை அது திறந்து விட்டது. அந்த அழிவின் பாதையில் மிக நீண்ட தூரம் பயணித்தது. தக்வாவுடையவர்களுக்கு மாத்திரம்தான் இந்த அல்குர்ஆன் வழிகாட்டும் என அல்லாஹ்(சுபு) கூறியதை மெய்ப்படுத்தும் விதமாக தக்வா இல்லாத நிலையில் அல்குர்ஆன் அணுகப்பட்டபோது உம்மத்தின் வழிகாட்டலுக்கும், வளர்ச்சிக்கும் அது வடிகாலாக அமையவில்லை. உம்மத் தக்வாவின் வீழ்ச்சியால் அல்குர்ஆன் வசனங்களுக்கு தனது ஆசாபாசங்களுக்கு ஏற்ப விளக்கம் அளிக்க முற்பட்டது. கிரேக்க தர்;க்கத்தின் அடிப்படையிலும், இந்திய தத்துவங்களின் அடிப்படையிலும் அதனை வியாக்கிஞானம் செய்தது. பிற்காலத்தில் அதிகளவில் மேற்குலக சிந்தனைகள் அவற்றின் இடத்தை பிடித்தன. சத்தியமும், அசத்தியமும் கலந்த, இஸ்லாமும், குப்ரும் குலைந்த ஒரு கலவையை நவீன கால இஜ்திஹாத், நடைமுறைக்கேற்ற இஸ்லாம் என்று அது பெருமிதத்துடன் அறிமுகம் செய்தது. இவ்வாறு உம்மத் பார்த்துக்கொண்டு இருக்கும் நிலையிலேயே அதனது வாழ்விலிருந்து அல்குர்ஆன்; பறிக்கப்பட்டது. அது வெறுமனவே மனனமிடுதலுக்குள்ளும், அழகான பாராயணத்துக்குள்ளும், அலங்காரமான பிரதிகளுக்குள்ளும் முடங்கிப்போனது. எதனால் இந்த உம்மத்திற்கு வெற்றியும், கண்ணியமும் கிட்டியதோ அந்த ஆற்றல் சக்தி அதனிடமிருந்து பறிபோனது.

அதனால் அன்று முஃமீன்களைக் கண்டால் குலைநடுங்கிய குஃப்பார்கள்; இன்று முஃமீன்களின் முதுகுகளில் ஏறி சவாரி செய்யும் நிலை தோன்றியிருக்கிறது. உம்மத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதனது வளங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. சுயமரியாதையும், கண்ணியம் இழந்த நிலையை அது அடைந்து நிற்கிறது. அதனது பிரச்சனைகளுக்கு அந்நியர்கள் பஞ்சாயத்து சொல்கிறார்கள். அல்குர்ஆன் இருக்க வேண்டிய ஸ்தானத்தில் குஃப்ரிய சிந்தனைகள் அமர்ந்துள்ளன. மொத்தத்தில் இஸ்லாமிய வரலாற்றில் என்றும் வீழ்ந்திடாத அதலபாதாளத்தில் இன்றைய உம்மத் வீழ்ந்து கிடக்கிறது.

எனவே உம்மத் இந்த மாபெரும் வீழ்ச்சியிலிருந்து மீண்டு, மீள வரலாறு படைக்க வேண்டுமென்றால் இந்த  ரமழானில் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதிலும், அவனுக்கு கட்டுப்படுவதிலும் தனது உட்சாகத்தையும், விருப்பத்தையும் வெளிக்காட்டுகின்ற உம்மத் ரமழானுக்கு இந்தச் சிறப்பு எங்கிருந்து வந்தது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ரமழான் அல்குர்ஆன் அருளப்பட்டதால்தான் சிறப்பிக்கப்பட்டதென்றால் அந்த அல்குர்ஆன் இந்த உலகில் எந்த நோக்கத்தை நிறைவேற்ற வந்தது என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ்(சுபு)வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதகுலத்திற்கான வழிகாட்டல் அல்குர்ஆனிலிருந்து மாத்திரம்தான் ஊற்றெடுக்க முடியும் என்பதை அது முழுமையாக நம்ப வேண்டும். தனது வாழ்விற்கான ஒரேயொரு அளவுகோல் அல்குர்ஆன் மாத்திரம்தான் என்பதில் அது உறுதியாக நிற்க வேண்டும். அத்தகைய ஒரு சூழல் உலகில் தோற்றம் பெறவேண்டுமென்றால் அது அல்குர்ஆனின் அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியால் மாத்திரம்தான் சாத்தியமாகும் என்பதையும் அது உறுதியாக நம்ப வேண்டும். எனவே இந்த ரமழான் அத்தகையதோர்; தூய இஸ்லாமிய அரசியற் தலைமையை நிலைநாட்ட உழைக்கின்ற உம்மத்தை தயார்படுத்துமானால் அது ரமழானின் நோக்கத்தையும், அதிலே அருளப்பட்ட அல்குர்ஆனின் நோக்கத்தையும் ஒருசேர நிறைவேற்றிய பெருமையைப் பெறும். இன்ஷா அல்லாஹ்!
 

No comments:

Post a Comment