Jun 20, 2016

பள்ளிவாசல் பரிபாலனம்

இறை இல்லங்களை பரிபாலனம் செய்வது பொறுப்பான ஒரு பணியாகும். மஸ்ஜிதுகளை நிர்மாணிப்பதும் பரிபாலிப்பதும் நேர்வழி பெற்ற சிறந்த முஃமின்களின் பண்பாக அல்குர்ஆன் வர்ணிக்கின்றது. (பார்க்க: அல்குர்ஆன் 9: 18)



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஒரு கறுப்பினப் பெண் இருந்தாள். பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்வது அவளது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் அவளைக்காண முடியவில்லை. இதனை அவதானித்த நபியவர்கள் அவளைப் பற்றி விசாரித்தார்கள். அவள் இறந்து விட்டதாக அன்னாருக்கு தெரிய வந்தது. “அவள் இறந்த செய்தியை அப்போதே நீங்கள் எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா?” என்று தோழர்களை விழித்துக் கூறிய நபியவர்கள், அவளது கப்ரை தரிசித்து அவளுக்காக தொழுகையையும் நிறை வேற்றினார்கள். (அல்புகாரி, முஸ்லிம்)



இது மஸ்ஜிது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதன் சிறப்பை எடுத்துச் சொல்லப் போதுமான ஆதாரமாகும். மஸ்ஜித்களை நிர்வகிப்பது ஓர் உயர்ந்த அமலாக இருப்பது போலவே ஒரு பெரிய பொறுப்புமாகும். இந்த வகையில் தகுதியுடையவர்கள் பரிபாலன சபையில் இருக்கின்றபோதே ஒரு பள்ளிவாசல் அதன் பணியை செவ்வனே நிறைவேற்ற முடியும். பரிபாலன சபைக்கு நியமிக்கப்படுவோர் அல்குர்ஆன் குறிப்பிடும் மஸ்ஜித் பரிபாலனத்திற்குரிய தன்மைகளையும் தகைமைகளையும் பெற்றவர்களாக இருக்கின்றார்களா என்பது உறுதி செய்யப்படல் வேண்டும்.



“அல்லாஹ்வுடைய பள்ளிகளை பரிபாலனம் செய்பவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து தொழுகையையும் நிறைவேற்றி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வையன்றி மற்ற எவருக்கும் பயப்படாமலும் இருப்பவர்களே. இத்தகையோர் நேர்வழி பெற்றவர்களாக இருக்கத்தக்கவர்களே.” (அல்குர்ஆன் 9: 18)


அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத், பொறியியலாளர் ரீஸா யஹ்யா

No comments:

Post a Comment