Jul 8, 2016

மதீனாவில் குண்டுவெடிப்பு! தொடர்‬:-03


இன்று அநேகமான முஸ்லிம்கள், முஸ்லிம்கள் பயங்கரவாதிகளும் அல்ல இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் மார்க்கமும் அல்ல என்பதை நிரூபிப்பதற்குக் கடும் பிரயத்தனம் எடுப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்த முயற்சியின் விளைவுதான் மதீனாவில் நடந்தது போன்ற ஒரு வன்செயலுக்குக் காரணம் முஸ்லிம்களில் ஒருசாரார்தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே முந்தியடித்துக்கொண்டு அந்த வன்செயலைக் கண்டிப்பதுவும், அதற்குக் காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டோருக்கு காபிர்கள் என அவசரமாக பத்வா கொடுக்கமுனைவதும்.

சாதாரனமாக எந்தவொரு குற்றச்செயலும் இழைக்கப்படும்போது எழுப்பப்படும் கேள்விகள் எதுவும் இங்கு எழுப்பப்படவில்லை. இதில் ஒரு மடமையும், தெளிவான ஒரு சுயநலமும் இருக்கின்றது: தாங்கள் எந்த வகையிலும் குற்றவாளிகள் அல்ல என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்போர் முன்னிலையில் நிரூபித்து நற்பெயர் பெறவேண்டும் என்ற ஒரு உந்துதல் இருக்கின்றது.

இவ்வாறு நாம் செயற்படுவது எமது சுயபெறுமானம் வலுவிழந்த நிலையக்காட்டுகின்றது. அவ்வாறு செய்யவேண்டிய எந்தத் தேவையும் எமக்கில்லை. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பதிலளிப்பதையே ஒரு மார்க்கக் கடமையைப்போல் நாம் எடுத்துக்கொண்டால் நாம் ஒருபோதும் முன்னேற்பாட்டுச் செயற்பாட்டாளர்களாக (proactive) மாறமாட்டோம்; தொடர்ச்சியான எதிர்வினைச் செயற்பாட்டாளர்களாகவே (reactionary) இருப்போம். அதாவது, எமக்கென சொந்தமான எதுவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், எம் எதிரிகளின் நிகழ்ச்சிநிரலிலேயே இயங்கிக்கொண்டிருபோம். எமது பொதுஎதிரிகள் யார் என்பதை மறந்து, அவர்களின் நோக்கங்கள் என்ன என்பதை மறந்து, எம் இருப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பான அவர்களின் வேலைத்திட்டங்கள் என்ன என்பதை மறந்து உள்ளக முரண்பாடு வளர்ப்பதிலேயே நாம் காலம் கழிப்போம். இது எழுச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு சமூகத்தின் பண்பாக இருக்கமுடியாது.

எமக்கிடையான உள்ளக முரண்பாடுகள் மிகவும் உக்கிரமாகத் தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈரான் மற்றும் சவூதியின் ஊக்குவிப்போடு குறிப்பாக ஷீஆ-சுன்னி முரண்பாடுகள் இன்று சூடுபிடித்து வருகின்றன. சவூதி சலபிக்களை எதிர்க்கும் சில ஷீஆ ஆதரவுக் குழுக்கள் தங்களின் எதிரிகளை ISIS காரர்களாகச் சித்தரித்து காட்டிக்கொடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவர்களுக்கு
ISIS இலங்கையில் இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கு விடைகான்பதில் எதுவித அக்கறையும் இல்லை. தங்கள் எதிரிகளைக் காட்டிக்கொடுத்துப் பழிவாங்கவேண்டும் என்ற வேட்கையில் இலங்கையிலும் ISIS இருக்கின்றது என்ற மாயையையும் அச்சத்தையும் இவர்கள் தோற்றுவிக்க முனைகின்றார்கள்.

அத்துடன் இந்தக் காட்டிக்கொடுப்புகள் சில சவூதிசார் சலபிக்களாலும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. சவூதியின் சர்வாதிகாரப் போக்கையும், அதன் காலனித்துவ நாடுகளுடனான கள்ளத்தொடர்பைக் கண்டிக்கின்ற அத்தனை குழுக்கள் மீதும் இவர்கள் ISIS முத்திரை குத்துவார்கள். இக்குழுக்களின் வழிமுறை வன்முறை அற்ற வெறும் அரசியல் / அறிவியல் வழிமுறையாக இருக்கின்றபோதும் கூட இந்தக் காட்டிக்கொடுப்பைச் செய்ய இவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

2011ஆம் ஆண்டிலே ஆப்கானிஸ்தானிற்குள் தாலிபான் என்ற “பயங்கரவாதிகளும்” 2013ஆம் ஆண்டிலே ஈராக்கிற்குள்ளே சத்தாம் ஹுசைன் என்ற “பயங்கரவாதியும்” இருப்பதாகக் கூறிய அமெரிக்கா அவ்விரு “பயங்கரவாதிகளிடமுமிருந்து”அந்நாட்டு மக்களைத் தான் விடுவிக்கப்போவதாகப் பொய்க்கோசம் எழுப்பியது. அப்போது ஆப்கானிஸ்தானிற்கு எதிராக ஈரானும், ஈராக்கிற்கு எதிராக சவூதியும் அமெரிக்காவுடன் இணைந்து காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அந்தத் துரோகத்தனத்தின் விளைவாக இன்றும் அவ்விரு நாடுகளிலும் முஸ்லிம்களின் இரத்தம் ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்று இங்கு (இலங்கையில்) இல்லாத ஒரு ISIS இற்கு எதிரான காட்டிக்கொடுப்பு அவ்வாறன ஒரு விபரீதத்தையே ஏற்படுத்தும்.

அமெரிக்கா உலகில் உள்ள எந்தவொரு இராணுவச் சக்தியுடனும் ஒப்பிடமுடியாத அளவு பலம் கொண்ட ஒரு இராணுவச் சக்தி. அதனோடு இரானுவரீதியாகப் பொருதி வெற்றிகொள்ளக்கூடிய எந்தவொரு நாடும் உலகில் இல்லை. அப்படியிருக்க, சாதாரண ஆயுதக்குழுக்களால் எவ்வாறு அதனைத் தோற்கடிக்க முடியும்? எனவே எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அமெரிக்கா அச்சமடைவதில்லை. மாறாக அவ்வாறன பயங்கரவாதக் குழுக்களின் இருப்பு அமெரிக்காவிற்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகின்றது. ஏனெனில், அவ்வாறன குழுக்கள் இருக்கின்றபோதுதான் அமெரிக்காவை எங்கள் நாடுகளுக்குள்ளும் சமூகங்களுக்குள்ளும் வரவேற்கின்ற துரோகிகள் எங்களுக்குள் உருவெடுக்கின்றார்கள். எனவே, உண்மையிலேயே அவ்வாறன பயங்கரவாதக்குழுக்கள் இல்லாவிடில் அவற்றைத் தாமே தோற்றுவிக்கும் பணியிலும் தாமே இறங்குகின்றார்கள். இதற்கான சான்றுகள் தென்னமெரிக்க நாடுகளுடனான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் நிறையவே காணக்கூடியதாக உள்ளது.

எனவே எம்மத்தியில் ISIS போன்ற குழுக்கள் இருக்கின்றனவா? இல்லையா? என்ற கேள்விகளும்; உண்மையிலேயே அவை காணப்பட்டால் அவற்றைத் தோற்றுவித்தது யார்? என்ற கேள்விகளும்கூட அர்த்தமற்றவை. இருக்கின்ற அல்லது இல்லாதிருக்கின்ற இந்தப் பயங்கரவாதக்குழுக்களைக் காரணமாகக் காட்டி அமெரிக்கா (மற்றும் ஏனைய முஸ்லிம் விரோத சக்திகள்) எவ்வாறு எங்களுக்குள் ஊடுருவல் செய்யமுனைகின்றன என்பதிலேயே எங்கள் பிரதான கவனம் இருக்கவேண்டும். முஸ்லிம் நாடுகளுக்கெதிரான இன்றைய யுத்தங்களைத் தலைமை தாங்குகின்ற மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான் எங்களின் எதிரிகள். அந்நாடுகளின் நகர்வுகள் தொடர்பாகவே நாங்கள் அதிகூடிய கவனம் செலுத்தவேண்டும்.

இயக்கவெறி என்ற நோய்க்கு ஆட்படாத எவராலும் இந்த இயக்கவாதத்தின் ஆபத்துகளை உணரமுடியும். இந்த இயக்கவெறி நோயிலிருந்து இந்த உம்மத்தைக் காப்பதற்கான ஒரேயொரு வழி எமது பொது எதிரி யார் என்பதை அடையாளப்படுத்திக்கொண்டு அந்த எதிரி தொடர்பான எமது செயற்பாடுகளைக் கூட்டிக்கொள்வதில்தான் உள்ளது.

எமது பொதுஎதிரி மேலைத்தேய முதலாளித்துவ நாடுகள்தான். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான இவர்களின் யுத்தங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில் தொடங்கிய முஅத்தா யுத்தம் முதல், பின்னர் சிலுவை யுத்தங்கள், அதன் பின்னர் காலனித்துவம், தற்போது “பயங்கரவாதத்திற்கு” எதிரான யுத்தம் என்று தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே எமது பொது எதிரி மீதான கவனத்தை விட்டுவிட்டு முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற அல்லது இருப்பதாகச் சொல்லப்படுகின்ற குழுக்களை விமர்சிப்பதிலேயே நாம் காலம் கழிப்பது எமது எதிரிக்கு நன்மையாகவே அமைகின்றது. நாம் அப்படிச் செய்வதையே அவர்களும் விரும்புகின்றார்கள்.

அமெரிக்கா எந்தவொரு பயங்கரவாதக் குழுவைக் கண்டும் அச்சமடைவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்குக்காரணம் அதனிடம் இருக்கின்ற அதியுயர் இராணுவ பலம். அமெரிக்கா மிகவுமே அஞ்சுவது அமெரிக்காவின் காட்டுமிராண்டித்தனங்களைத் தோலுரித்துக்காட்டி மக்கள் மனங்களிலிருந்து அதனைத் தூரப்படுத்த முனைகின்ற அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இஸ்லாமிய இயக்கம் இலங்கைவாழ் சமூகங்களிடையே அமெரிக்காவின் காலனித்துவ யதார்த்தத்தைப் புரிய வைத்து, அதன் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக்காடுகின்ற வேலையைச் செய்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த முயற்சியில் அது வெற்றியும் பெறுகின்றது என்றும் வைத்துக்கொள்வோம். இதன் விளைவு என்னவாக இருக்கும்? இது இலங்கை – அமெரிக்காவிடையான உறவுகளில், ஒத்துளைப்புகளில் எவ்வாறான தாக்கத்தைச் செலுத்தும்? இவ்வாறான இயக்கங்கள் உலக நாடுகள் அனைத்திலும் செயற்பட்டால், உலகநாடுகளிடையே அமெரிக்காவின் நிலை என்னவாகும்? எனவே அமெரிக்கா, மற்றும் காலனித்துவ ஐரோப்பிய சக்திகள் மிகவும் அஞ்சுவது இவ்வாறான முஸ்லிம் அறிவியல் / அரசியல் இயக்கங்களையே. எனவே, ISIS போன்ற இயக்கங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் பயன்படுத்தி, வன்முறையற்ற, சாத்வீகமான அறிவியல் / அரசியல் முயற்சிகளை முன்னெடுக்கின்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் இவர்கள் தடை செய்வார்கள். இதை முஸ்லிம்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் அனைவரும் மிகவும் வருந்தவேண்டி வரும்!



From Mohamed Faizal
(தொடரும் இன்ஷா அல்லாஹ்

No comments:

Post a Comment