May 25, 2011

கல்வி, கற்றல், கற்பித்தல் - நபிகளாரின் வழிகாட்டல்கள்

இஸ்லாம் கல்வி, கற்றல், கற்பித்தல் தொடர்பாக விரிவாக பேசுகின்ற மார்க்கமாகும். அல்குர்ஆனை நோக்கும் போது இஸ்லாம் அறிவுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.அல்குர்ஆனைப் போலவே நபியவர்களின் ஹதீஸ்களிலும் அறிவு பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளதை காணமுடிகிறது.பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் கிதாபுல் இல்ம் என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும். அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. 

உதாரணமாக 'கிதாபுத் திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புஹாரியில் மாத்திரம் 'கிதாபுல் இல்ம்' என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன. இனி, அறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களை பார்ப்போம்.'ஒருவர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)'நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. 

ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் அறிவை மட்டுமே வாரிசாக விட்டுச் சென்றனர். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.' (அபூதாவுத், அஹ்மத்)

அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும் போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத்தரும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது

.'அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்' என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

இதிலிருந்து இந்த உலகம் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்கமுடிகின்றது.கற்பித்தலுக்கான நபிகளாரின் வழிகாட்டல்கள்கல்வி, அதன் முக்கியத்துவம், கோட்பாடு பற்றியெல்லாம் விளக்கியுள்ள நபியவர்கள் கல்விப் போதனையின் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள், கற்பித்தலுக்குக் கையாளவேண்டிய முறைகள், உத்திகள் பற்றியும் விளக்கியுள்ளார்கள்.மாணவனுக்கு அன்பு காட்டல்:ஆசிரியர், மாணவர்களை அன்பாகவும் பண்பாகவும் நடாத்த வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்லிம் சமுதாயத்தின் முதல் ஆசானாகக் கருதப்படும் நபி (ஸல்) அவர்கள், மக்களை அன்பின் அடிப்படையில் வழி நடாத்துபவர்களாகவே இருந்தார்கள். இவ்வுண்மையை அல்குர்ஆன் எத்துணை அழகாக விளக்குகின்றது என்பதனைக் கீழ்வரும் திருமறை வசனம் உங்களுக்கு உணர்த்துகின்றது.

''(விசுவாசிகளே!) உங்களிலிருந்து நிச்சயமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் கஷ்டத்துக்குள்ளாகி விட்டால் (அது) அவருக்கு மிகவும் வருத்தமாகவே இருக்கும்.அன்றி, உங்களை பெரிதும் விரும்புகின்றவராகவும், விசுவாசிகள் மீது மிகவும் அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்'' (9:28)

தம்மைப் பற்றி வர்ணித்த நபியவர்கள்.....,'உண்மையில் நான் உங்களுக்கு, குழந்தைகளுக்குத் தந்தையைப் போன்று இருக்கின்றேன்' என்றார்கள். (அபூதாவூத், அந்நஸாஈ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்) 

தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான தொடர்பு அன்பினதும் பாசத்தினதும் அடிப்படையில் அமைந்திருக்கும். அவ்வாறுதான் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமிடையிலான தொடர்பும் அமைய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு தந்தை, தனது பிள்ளைகள் மத்தியில் பரஸ்பர பாசத்தை வளர்ப்பது போல ஓர் ஆசிரியர் தனது மாணவர்கள் மத்தியில் பரஸ்பர அன்பை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளார்.மாணவர்களுக்குப் பாடங்களை இலகுபடுத்தியும், ஆர்வமூட்டும் விதத்திலும் போதிப்பது மாணவர்கள் மீது ஆசிரியர்களது அன்பின் வெளிப்பாடாக அமையும். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை ஆசிரியர்களாக, அழைப்பார்களாக. நீதிபதிகளாக அனுப்பிய வேளைகளில் இந்த அம்சத்தையே அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள். ஆசையூட்டுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்' (புகாரி , முஸ்லிம்)'கல்வியூட்டுங்கள், கடுமையாக நடத்தாதீர்கள், கல்வியூட்டுபவன் கடுமையாக நடப்பவனைவிடச் சிறந்தவன்.' (அல்-பைஹகீ -ஷுஅபுல் ஈமான்) மக்களுக்கு அறிவூட்டும் ஆசானாகத் திகழ்ந்த நபியவர்கள் தம்மிடம் போதனைகளைப் பெற வருவோரை அன்பாகவும் பண்பாகவும் நடத்துபவர்களாக இருந்தார்கள் என்பதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றது. 

''நபியே! அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீராயின், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்'' (3:159) ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது, தடியைப் பயன்படுத்துவது இஸ்லாமிய கல்வி முறையில் வரவேற்கப்படுவதில்லை. ஏனெனில், தடியைப் பாவிப்பது, நாம் இதுவரை விளக்கிய மாணவர்களை அன்புடன் நடாத்தும் பான்மைக்கு முரணானதாகும்.'நபி (ஸல்) அவர்கள் தமது கையினால் எந்தவொரு பெண்ணையோ, பணியாளனையோ அல்லது மிருகத்தையோ அடித்ததில்லை' என அன்னாரின் சேவகனாகவிருந்த அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)பிள்ளைகள் பத்து வயதை அடைந்த பின்னரும் தொழுகையை நிறைவேற்றாத வேளையில், அவர்களை அடிப்பதற்குப் பெற்றோருக்கு இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. இது தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக விதிவிலக்காக அமைந்த ஒரு சட்டமாகும்.தவறு செய்தவனுக்கு அனுதாபம் காட்டல்மாணவர்கள் தவறு செய்யும் போது கடுமையாக நடந்து கொள்வது, தண்டிப்பது, பரிகசிப்பது போன்ற அணுகுமுறைகளை விட, அவர்களின் மீது அனுதாபம் கொள்வதே வரவேற்கத்தக்கதாகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இதனைத் தெளிவாகக் காண்கின்றோம்.

ஒரு முறை ஒரு நாட்டுப்புற மனிதர் பள்ளியில் நுழைந்து சிறுநீர் கழிக்க முற்பட்டார். இதனைக் கண்ட நபித்தோழர்கள் அவரைக் கண்டிக்க முனைந்தனர். உடனே நபியவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி ''அவரைக் கண்டிக்காது விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவரையணுகி, ''இப்பள்ளிவாசல்கள் சிறுநீர் கழிப்பது, அசுத்தப்படுத்துவது போன்ற கருமங்களுக்குத் தக்க இடங்களல்ல. இவை அல்லாஹ்வை 'திக்ர்' செய்வது, தொழுவது, குர்ஆன் ஓதுவது போன்றவற்றிற்குரிய இடங்களாகும்'' என்று கூறிவிட்டு, ஒருவரை அழைத்து, ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வந்து அவ்விடத்தில் ஊற்றுமாறு பணித்தார்கள். (முஸ்லிம்)இங்கு நபியவர்கள், அந்த மனிதர் பிறந்து வளர்ந்த நாட்டுப்புற பின்னணியைக் கவனத்திற் கொண்டு, அவர் செய்த தவறை எவ்வாறு அனுதாபத்துடன் நோக்கி, மிகவும் நாசுக்காக அவரை நெறிப்படுத்தினார்கள் என்பதை காண்கின்றோம்.இவ்வாறு, ஒரு பாடசாலைக்கு வரும் மாணவர்களும் வித்தியாசமான குடும்பங்களிலிருந்து வருவார்கள். முரண்பட்ட பண்புகளுடையவர்களாக இருப்பார்கள். இதனால், அவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் மிகவும் அனுதாபத்துடன் நோக்குவதே சாலச் சிறந்ததாகும்.அன்புகாட்ட வேண்டும், அனுதாபம் கொள்ள வேண்டும் எனும்போது, தவறு செய்தவர்களை அவர்கள் செய்த தவறுகளைக் சுட்டிக்காட்டாமலேயே விட்டு விட வேண்டும் என்பது அர்த்தமல்ல. மாறாக, நாசுக்காக, தேவையைப் பொறுத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றையுணர்த்துவது பிரதானமாகும். திறமைகளைப் பாராட்டுதல் மாணவர்களுக்கு அன்பு காட்டுவது, அவர்களின் தவறுகளை அனுதாபத்துடன் நோக்கி, நாசுக்காகத் திருத்துவது போன்றவற்றுடன் மாணவர்களின் திறமைகளை மெச்சுவதும், அவர்களது நன்னடத்தைகளைப் பாராட்டுவதும் முக்கியமானவையாகும். எப்போதும் ஆசிரியர், திறமையை வெளிகாட்டும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.

இந்தவகையில்தான் நபி (ஸல்) அவர்கள், அழகாக அல்குர்ஆனை ஓதக்கூடியவராக இருந்த அபூமூஸா அல் அஷ்அரி (றழி) அவர்களைப் பாராட்டினார்கள். (புகாரி, முஸ்லிம்)பொதுவாக ஸஹாபாக்கள் நல்ல விடயங்களைச் செய்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களை நபியவர்கள் புகழ்ந்திருப்பதையும் பாராட்டியிருப்பதையும் வரலாற்றில் காணமுடிகின்றது. நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (றழி) அவர்களை 'இந்த உம் மத்தின் நம்பிக்கைக்குரியவர் என்றும், அபூபக்கர் (றழி) அவர்களை உம்மத்தினரில் அன்பானவர் என்றும், அலி (றழி) அவர்களைச் சிறந்த நீதிபதியென்றும், ஸைதை வாரிசுரிமைச் சட்ட வல்லுநர் என்றும், முஆத் (றழி) அவர்களை ஹலால் ஹராம் விடயங்களில் தேர்ந்தவர் என்றும் வர்ணித்துப் பாராட்டியுள்ளார்கள்.படிமுறை அமைப்பைப் பேணல்:இஸ்லாம் எல்லா விடயங்களிலும் படிமுறை அமைப்பைப் பேணுகின்றது. இஸ்லாமிய சட்டங்களும் படிப்படியாகவே வழங்கப்பட்டன. கல்விப் போதனையின் போதும் இம்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என இஸ்லாம் போதிக்கின்றது. முஆத் (றழி) அவர்களை நபியவர்கள் யெமன் பிரதேசத்திற்கு அனுப்ப முற்பட்ட வேளையில் எவ்வாறு படிப்படியாக, ஒன்றன் பின் ஒன்றாக மார்க்கக் கடமைகளை அங்கு வாழும் மக்களுக்கு விளக்க வேண்டுமென்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் அளவு, அமைப்பு ஆகிய இரண்டிலும் இப்படிமுறையைப் பேண வேண்டும் அதாவது, மாணவனுக்கு அவன் இருக்கும் தரத்தில் எந்தளவு அறிவைக் கொடுக்க வேண்டுமோ அந்தளவையே வழங்க வேண்டும். ஒரே தடவையில் அதிகமான விடயங்களைப் புகுத்த முற்படும் போது, அவனால் கிரகிக்க முடியுமான சிறிதளவையும் கூட, அவன் இழந்து விடும் நிலையே உருவாகும்.மேலும், பாடங்களைப் பொறுத்தவரையிலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதலில் தெரிந்ததையும் பின்னர், தெரியாததையும் முதலில் தெளிவானதையும் பின்னர் மயக்கமானதையும் முதலில் இலகுவானதையும் பின்னர் கஷ்டமானதையும், முதலில் நடைமுறையையும் பின்னர் சித்தாந்தத்தையும் படிமுறை அமைப்பில் கற்பிக்க வேண்டும். முக்கியமான விடயம் யாதெனில், ஒரு பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர், முதலில் மாணவர்களுக்கு அப்பாடத்துடன் தொடர்பான சிக்கலான, நுணுக்கமான விடயங்களைக் கற்பிக்கக் கூடாது. அப்பாடத்தின் இலகுவான, மயக்கமற்ற பகுதியில் இருந்தே போதனையை ஆரம்பிக்கவேண்டும்.எனவேதான் எமது ஆரம்பகால அறிஞர்கள், தரத்தைக் கவனத்திற் கொண்டு, நூல்களைக் கட்டங்களாகப் பிரித்து எழுதினார்கள். உதாரணமாக, இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் சட்டங்களை விளக்கும் ஓர் ஆரம்ப நூலை அல்வஜீஸ் (சுருக்கம்) என்ற பெயரில் எழுதினார்கள். பின்னர் அல்வஸீத் (இடைநிலை நூல்) என்ற பெயரில் மற்றொரு நூலை எழுதினார்கள். அடுத்து அல்மப்ஸூத் (விளக்கம்) எனும் பெயரில் விரிவான ஒரு நூலை ஆக்கினார்கள்.இவ்வாறு மாணவர்களின் தர வித்தியாசத்தைக் கருத்திற் கொண்டே எமது இமாம்கள் நூல்களை எழுதியுள்ளார்கள்.தனிநபர் வித்தியாசங்களைக் கவனத்திற் கொள்ளல் ஆற்றல்களையும் திறமைகளையும் பொறுத்தவரையில் மாணவர்கள் பல தரத்தினராக இருப்பர். விளங்கும் தன்மை, கிரகிக்கும் ஆற்றல் போன்றவற்றில் ஒருவருக்கொருவர் வேறுபட்டு நிற்பர். ஒருவருக்குப் பொருந்தும் ஒன்று மற்றொருவருக்குப் பொருத்தமாயிருக்காது. ஒரு சூழலுக்கு இயைபாக இருக்கும் ஒன்று மற்றொரு சூழலுக்கு ஏற்புடையதாய் இருக்காது ஒரு காலத்துக்குப் பொருத்தமாயமையும் ஒன்று மற்றொறு காலத்துக்குப் பொருத்தமற்றதாக இருக்க முடியும்.ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக அவதானித்து அவனுக்குத் தேவையான அறிவை அவசியமான அளவிலும் தரத்திலும், பொருத்தமான நேரத்திலும் வழங்கும் திறமையுள்ளவரே சிறந்த ஆசிரியர் ஆவார்.மனித இனத்தின் முதல் ஆசானாகக் கருதத்தக்க நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வித்தியாசங்களை கவனத்திற் கொள்ளத் தவறவில்லை. 

கல்விப் போதனையின் போது மேற் குறிப்பிட்ட வேறுபாடுகளை நபி (ஸல்) அவர்கள் கவனத்திற் கொண்ட விதத்தைப் பின்வருமாறு சுருக்கமாக குறிப்பிட முடியும்.

1. தம்மிடம் வந்தவர்களின் வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டு, அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற போதனைகளைப் பொருத்தமானதாக அமைத்துக் கொண்டமை.. நபி (ஸல்) அவர்களிடம் பலர் வந்து தமக்கு உபதேசிக்குமாறு வேண்டிய வேளைகளில், அவர்கள் வித்தியாசமான உபதேசங்களைச் செய்தார்கள்.. ஒருவருக்கு 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு 'ஷிர்க்' வைக்கக் கூடாது. தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத்தையும் கொடுக்க வேண்டும். இனபந்துக்களைச் சேர்ந்து நடக்க வேண்டும்' என்றார்கள்.. மற்றொருவருக்கு, 'எங்கிருந்த போதும் அல்லாஹ்வைப் பயந்து கொள்வீராக. ஒரு தீமையைச் செய்துவிட்டால், அதனைத் தொடரந்து ஒரு நன்மையைச் செய்து விடுவீராக. அந்த நன்மையானது அத்தீமையை அழித்து விடும். மனிதர்களுடன் பண்பாகப் பழகுவீராக' என்றார்கள்.. மேலும் ஒருவருக்கு, 'அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் என்று கூறிப் பின்னர் அதில் நிலைத்திருப்பீராக' என்று உபதேசித்தார்கள்;.. இன்னொருவருக்கு நபியவர்கள், 'கோபப்படாதீர்' என உபதேசித்தார்கள்.

2. ஒரே கேள்விக்கு, அதனைக் கேட்டவர்களைக் கவனத்திற் கொண்டுவித்தியாசமான பதில்களைக் கூறியமை. உதாரணமாக, 'சிறந்த அமல் எது? அல்லது இஸ்லாத்தில் மிகச் சிறந்தது எது? இவ்வாறு பலர், பல சந்தர்ப்பங்களில் நபியவர்களிடம் கேட்டுள்ளனர். இத்தகைய கேள்விகளுக்கு அவர்கள் சிலபோது தொழுகையையும், மற்றொரு போது ஜிஹாதையும். சிலவேளை ஹஜ்ஜையும் சிறந்த அமல்' என விளக்கியுள்ளார்கள்.. இந்த வகையில்தான் 'காலச் சூழல் மாற்றங்களுக்கேற்ப சட்டங்கள் மாறுபடும்' என்ற அடிப்படையை இஸ்லாம் அங்கீகரிக்கின்றது.

நபியவர்கள் தம்மிடம் வந்தவர்களின் வேறுபாடுகளைப் பொறுத்து அவர்களுடன் நடந்து கொள்ளும் முறையையும் வித்தியாசமானதாக அமைத்துக் கொண்டார்கள்.. மேலும், நபியவர்கள் கட்டளைகளைப் பிறப்பிக்கும்போது மனிதர்களின் சக்தி, பின்னணி போன்றவற்றைக் கருத்திற் கொண்டார்கள்.. ஒருவரின் குறித்த ஒரு நடத்தையை அங்கீகரித்த நபி (ஸல்) அவர்கள், மற்றொருவரில் அதே நடத்தை வெளிப்பட்டபோது அதனை அங்கீகரிக்காதிதிருந்ததுண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகள், மனிதர்களின் பின்னணிகள் போன்றவற்றைக் கவனித்தே அவர்கள் இவற்றைத் தீர்மானித்துள்ளார்கள்.நடுநிலையைக் கைக்கொள்ளல். கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் எப்போதும் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய முக்கியமானதோர் அம்சமாக இது விளங்குகின்றது. மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்படும் அளவுக்கு விரிவாகவோ, அல்லது பிரயோசனத்தைக் குறைத்துவிடும் அளவுக்குச் சுருக்கியோ கல்விப் போதனையை அமைத்துக் கொள்ளக் கூடாது, மாறாக நடு நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மக்களுக்குப் போதனை செய்பவர்களாக இருந்தார்கள். ஒரு முறை ஒரு மனிதர் அவர்களை அணுகி, 'ஏன் நீங்கள் தினமும் போதனை செய்யக் கூடாது?' என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள். 'நான் மக்களைச் சலிப்படையச் செய்வதை வெறுக்கின்றேன். இதுவே அப்படிச் செய்ய எனக்குத் தடையாகவுள்ளது. எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகக் கவனமாக உபதேசித்தது போன்றே நானும் நடந்து கொள்கின்றேன்' என்றார்கள். (ஆதாரம் : புகாரி).

நடைமுறைச் சம்பவங்களைப் போதனைக்குப் பயன்படுத்தல். ஒரு சிறந்த ஆசிரியர் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வைத்து மாணவர்களுக்குச் சிறந்த படிப்பினைகளை வழங்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு நிகழ்ச்சியையும் இந்த வகையில் பயன்படுத்தாதிருந்ததில்லை.. ஒரு முறை கௌரவமான மக்ஸுமிய்யாக் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி களவாடி அகப்பட்டுக் கொண்டாள். அவளது கை வெட்டப்பட்டுத் தண்டிக்கப்படுவதை அவளது கோத்திரத்தவர்கள் விரும்பவில்லை. எனவே, இது விடயமாக (நபி) ஸல் அவர்களிடம் சிபாரிசு செய்வதற்காக, நபியவர்களின் அன்புக்குரியவரான உஸாமா பின் ஸைதை அனுப்பிவைத்தனர். உஸாமா (றழி) அவர்கள் நபியவர்களிடம் வந்து அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து பேசியபோது, நபி (ஸல்) அவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சமத்துவம் பற்றியதும் குல, வகுப்புவாதம் பற்றியதுமான இஸ்லாத்தின் கருத்தை வலியுறுத்த விரும்பினார்கள். அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.'உஸாமாவே! அல்லாஹ்வின் தண்டனை விடயத்திலா சிபாரிசு செய்கின்றீர்? உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அழிக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் தங்களில் மேன்மகன் திருடினால் அவனை விட்டுவிடுவர்: பலவீனன் திருடினால் அவனைத் தண்டிப்பர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஹம்மதுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும், நான் அவரது கையையும் வெட்டியேயிருப்பேன்.

'நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது! இதனைக் கண்ட மக்கள், ரஸூலின் மகன் இறந்ததுதான் இக்கிரகணத்திற்குக் காரணமாகும் என்று பேசிக் கொண்டனர். பொதுவாக இத்தகைய மூட நம்பிக்கைகள் அன்றைய ஜாஹிலிய்யாக் கால மக்களிடம் நிலவின, இத்தகைய மூட நம்பிக்கைகள் பிழையானவை என்று விளக்குவதற்கு நபியவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் மக்களுக்கு பின்வருமாறு கூறினார்கள்.'மனிதர்களே!, சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரு அத்தாட்சிகளாகும்.

அவை, ஒருவர் பிறப்பதாலோ இறப்பதாலோ கிரகணத்திற்குட்படுவதில்லை.'கற்பித்தலுக்கு பொருத்தமான சாதனங்களைப் பயன்படுத்தல். நபி (ஸல்) அவர்கள், தமக்குக் கிடைக்கக் கூடியதாகவிருந்த பலதரப்பட்ட கற்பித்தல் சாதனங்களையும் பயன்படுத்தினார்கள்..'ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், 'மண்ணில் ஒரு கோட்டைக் கீறி, ஸஹாபாக்களுக்கு அதனைச் சுட்டிக் காட்டி, இதுவே அல்லாஹ்வுடைய பாதையாகும்' என்றார்கள். பின்னர் அக்கோட்டின் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பல கோடுகளைக் கீறி 'இவை பல பாதைகளாகும். இவை ஒவ்வொன்றின் மீதும் ஒரு ஷைத்தான் இருக்கின்றான். அவன் அதன் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றான்.' என்று கூறிவிட்டு 'இதுவே நேரான பாதையாகும். இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனைய பாதைகளைப் பின்பற்றாதீர்கள். அவை உங்களை அவனது (அல்லாஹ்வினது) பாதையில் இருந்து பிரித்து (வழிகெடுத்து) விடும்' என்ற ஸூறத்துல் அன்ஆமின் 153 ஆம் வசனத்தை ஓதிக்காண் பித்தார்கள்.மேலும், பல சந்தர்ப்பங்களில் நபியவர்கள் சில கருத்துக்களைக் காட்சிகளினூடாக விளக்கி, அவற்றை மனதில் ஆழமாகப் பதியவைக்க முயன்று வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. 'தக்வாவுக்குரிய இடம் உள்ளமாகும்' என்ற கருத்தைக் கூற விரும்பிய நபியவர்கள் தமது நெஞ்சைக் காட்டி 'தக்வா இருப்பது இங்குதான்' என்று மூன்று முறை கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 'நானும், அனாதைகளைப் பராமரித்தவனும் சுவனத்தில் இப்படி இருப்போம்' என்று கூறி, நபியவர்கள் தமது இரண்டு விரல்களை இணைத்துக் காட்டியமையும் இங்கு குறிப்பிடக்கூடிய ஓர் உதாரணமாகும்.. நபி (ஸல்) அவர்கள் போதனைகளின் போது விரிவுரை முறையைக் கையாண்டார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாக, அவர்களின் இறுதி ஹஜ்ஜின் பிரசங்கங்களை குறிப்பிட முடியும். இத்தகைய பிரசங்கங்களை வெறும் விரிவுரைகளாக அமைத்துக் கொள்ளாது, கேள்விகள் எழுப்பி, சபையோரை விழிப்புடன் வைத்துக் கொள்வார்கள் நபியவர்கள்.உதாரணங்கள், உவமைகள் மூலம் பல கருத்துக்களை விளக்குவதும் நபியவர்களின் கற்பித்தல் முறைகளில் ஒன்றாகும். இதற்குப் பல உதாணரங்களை ஸீராவில் காணலாம். இங்கு இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் உங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றோம்.'தன்னை மறந்துவிட்டுப் பிற மனிதர்களுக்குப் போதிக்கும் மனிதன், பிறருக்கு ஒளியைக் கொடுத்து, தன்னை எரித்துக் கொள்ளும் திரியைப் போன்றவனாவான்.''முஃமின் தேனீயைப் போன்றவனாவான். அது நல்லதைச் சாப்பிடும், நல்லதையே வெளியேற்றும். அது ஒரு கொடியில் அமர்ந்தாலும் அதனை முறித்து விடாது.' (அத்தபரானி, அல் பஸ்ஸார்)இவற்றுடன், போதனையின் போது இடைக்கிடையே கேள்விகள் எழுப்புவதன் மூலமும் நபியவர்கள் தாம் கூற வந்த கருத்துக்களை சபையோரின் மனதில் பதியவைக்க முயன்றமைக்கு உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.

sources from thalaimaithuvam.blogspot.com

No comments:

Post a Comment