Mar 21, 2014

ரஷியாவுடன் முறைப்படி இணைந்தது கிரீமியா



ரஷியாவுடன் கிரீமியா பகுதி முறைப்படி இணைக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். இதையடுத்து ரஷிய வரைபடத்தில் கிரீமியா சேர்க்கப்பட்டது.

பின்னர் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ""மக்களின் இதயம் மற்றும் நினைவுகளில் கிரீமியா பகுதி ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வந்தது'' என்றார்.

இதன்மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய எல்லை வரைபடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழவுள்ளது.

ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ள கிரீமியாவை, நாட்டின் ஒரு பகுதியாக அங்கீரிகரிப்பதற்காக புதின் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று குறித்து ரஷிய நாடாளுமன்றத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க மறுத்ததால் எதிர்க்கட்சிகள் அளித்த நெருக்கடியைத் தொடர்ந்து தலைநகர் கீவை விட்டு உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் வெளியேறினார்.

அதையடுத்து கிரீமியாவை ரஷியப் படை கைப்பற்றியது. கிரிமீயாவை ரஷியாவுடன் இணைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், 97 சதவீத கிரீமிய மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், இந்த வாக்கெடுப்புக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையும் விதித்துள்ளன.

ஜப்பான் பொருளாதாரத்தடை: இதனிடையே, ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுமியோ கிஷிடா விடுத்துள்ள அறிக்கையில், "உக்ரைனில் இருந்து கிரீமியா பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அது அந்நாட்டின் இறையாண்மையை மீறிய செயல்.

படை பலத்தின் மூலம் ரஷியாவின் முயற்சியில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. அந்த நாட்டின் மீது செவ்வாய்க்கிழமை முதல் சில வகை பொருளாதாரத்தடை விதிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான விசா தளர்வு, முதலீடுகள், விண் வெளி ஆராய்ச்சி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்படுகிறது. ரஷியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றன''

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிக நீக்கம்

ஜி8 நாடுகள் அமைப்பில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தன்னாட்சி பெற்ற பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்து கொண்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் இணைவதற்கு கிரிமியாவில் உள்ள 97 சதவீதம் பேர் விரும்பியதையடுத்து விரைவில் ரஷ்யாவுடன் கிரிமியா இணைகிறது. இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த இணைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளன. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source:thenee.com

No comments:

Post a Comment