" அந்த குறிப்பிட்ட மரத்தை மட்டும் நெருங்காதே. என்ற இறைவனின் கட்டளையை சாத்தான் மறக்கடித்தான் .அவனது ஆசை வார்த்தைகளில் ஆதாமும் (அலை ) ,ஏவாளும் (அலை ) ஏமாந்தது உண்மை . இருந்தும் அந்த முதல் பாவத்தை நோக்கி ஆதத்தை (அலை ) ,ஏவாள் (அலை ) தூண்டினாள் என குத்திக் காட்டுவது ஆண் ஆதிக்க அராஜஹம் இல்லையா!? அப்படியானால் இந்த ஆதி வரலாற்றில் இருந்தே பெண்கள் மீதான ஆணிய அடக்குமுறை தொடங்கியதா !?
இப்படி ஒரு சகோதரி என்னிடம் கேட்டாள் ! பெண் இனத்தின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் கயமை மிக்க இத்தகு வரலாற்றுப் புரிதல்களால் காலாகாலமாக பெண்கள் ஒரு ஈனப்பிறவியாக பார்க்க கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது எனக்கும் புரிந்தது . ஆனால் உண்மை என்ன ?
பெண்ணின் படைப்பிலக்கணம் மார்க்கத்தின் அடிப்படையில் புரியாமல் சந்தர்ப்ப வாத குற்றத்தை சுமத்தி நிற்பது ஒரு மகா அநியாயமே .முதலில் படைக்கப்பட்டது ஆதம் (அலை ) இவர் ஆண் .மண்ணிலிருந்து படைக்கப்பட்டார் .பின் ஏவாள் (அலை ) எனும் பெண் படைக்கப்பட்டது எதிலிருந்து !? இந்த இடத்தில இருந்தே வாத விவாதங்களுக்கு அப்பால் உள்ள ஒரு இயற்கையின் உண்மை புரியப்பட வேண்டும் .அதுதான் ஆதத்தின் (அலை ) விலா எலும்பில் இருந்தே ஏவாள் (அலை ) எனும் பெண் படைக்கப்பட்டாள் என்பதே இறை வேதம் காட்டி நிற்கும் அடிப்படை .
அதாவது பெண் என்பவள் பிறிதொரு கூறு அல்ல . ஆணின் ஒரு பாகம் .இந்த இடத்தில இருந்தே ஆணுக்கும் ,பெண்ணுக்குமான பொதுச் சுதந்திரத்துக்கான அடிப்படை அரசியலை இறைவன் வகுத்து விடுகிறான் .விடயத்தை இப்படி புரியாமல் அவளை மட்டுப்படுத்துவதும் ,கட்டுப்படுத்துவதும் மகா தவறுகளே .
இன்னும் ஆணுக்கும் ,பெண்ணுக்குமான வாழ்வியல் ஒழுங்கையும், சட்ட திட்டங்களையும் காட்டித் தரும் தகுதியும் இறைவன் ஒருவனுக்கே உண்டு . அவன் படைத்ததால் கட்டளையிடும் தகுதி அவனுக்கு மட்டுமே உண்டு . இதை வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது .ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் என்ற இயற்கையின் நியதியை தவிர்ப்பதோ ,மாற்றுவது மிகப்பெரிய குற்றம் .
எனவே பெண்ணை இழிவு படுத்தி பார்க்கும் ஆண் ,அடிப்படையில் தன்னையே இழிவு படுத்தி பார்க்கிறான் என்பதே உண்மை ."உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே ." எனும் இறை தூதர் (ஸல் ) வாக்கு சொல்லி நிற்கும் உண்மை யாதெனின் ,ஒரு ஆணின் உண்மை உருவத்தை காட்டி நிற்கும் பண்புக் கண்ணாடியாக பெண்ணே இருக்கிறாள் என்பதே . புரிந்தால் (குறிப்பாக மார்க்கத்தின் பெயரால் )பெண்ணை அவமதிக்கும் ஆண்கள் தம் செயல்களை சற்று அடக்கி வாசிக்கட்டும்
No comments:
Post a Comment