Aug 29, 2015

அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 02


இஸ்லாத்திற்கு முன்பு!!

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு, அபூபக்ர்(ரழி) அவர்களின் இயற்பெயர் அப்துல் கஅபா என்பதாகும். இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டபின் அப்துல்லாஹ் என்று  அழைக்கப்பட்டார். ஆனால் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களைலும் சரி, அதன் பின் நாட்களைலும் சரி அவரது இயற்பெயர் மறைந்து, அபூபக்ர் என்று  அழைக்கப்பட்டார்.
அபூபக்ர் என்பது அவரது சிறப்புப் பெயராகும். நபியவர்கள் அவரை அன்போடு சித்தீக்என்றும் அழைக்கவே அபூபக்ர் சித்தீக் என்று அவரது பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர்(ரழி) அவர்களும் முர்ராஎன்ற ஒரே வம்சப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள். அபூபக்ர்(ரழி) அவர்களின் தாய் மற்றும் தந்தை உதுமான் இப்னு அபிகுஹாஃபா அவர்கள் இஸ்லாமிய நெறியைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபோது அவர்களின்  தந்தைக்கு 90 வயதாகி இருந்தது.

ஹிஜ்ரத்திற்கு முந்தைய 50 ஆண்டுகளுக்கு முன்பாக அபூபக்ர்(ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அந்த கால கட்டத்தில் கூட, குறைஷிக் குலத்தவர்களில் அபூபக்ர்(ரழி) அவர்கள் நல்ல மரியாதைக்குரிய ஒருவராகத் திகழ்தார்.

அபூபக்ர்(ரழி) மக்காவில் பிறந்து வளர்த்தாலும், வியாபார நிமித்தமாக அடிக்கடி சிரியா, யமன் போன்ற  நாடுகளுக்குச் சென்று வரக் கூடியவராக இருந்தார்கள். வியாபார நிமித்தமாக மக்காவை விட்டுச் சென்ற பொழுது அவர்களுக்கு வயது 18.

 இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்வதற்கு முன்னரே அபூபக்ர்(ரழி) அவர்களிடம் காணப்பட நல்லொழுக்கங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்காக மக்களிடம் மிகவும் மதிப்புள்ள மனிதராகத் திகழ்தார்கள். பிரச்சனைக்குரிய விஷயங்களில் மக்கள் இவர்களிடம் வந்து கலந்தாலோசனை செய்வதும், அபூபக்ர்(ரழி) அவர்கள் கூறக் கூடிய கருத்துகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகயும் மக்கத்து மக்கள் போற்றி வந்தார்கள். 

அன்றைய அரபுலகத்தில் கொலைக்குப் பகரமாக இரத்த இழப்பீட்டுத் தொகைப் பெற்றுக் கொள்ளும் வழக்கமிருந்தது. அவ்வாறு பெறக் கூடிய பணம் அபூபக்ர்(ரழி) அவர்களின் சம்மதமில்லாமல் பெறப்படுவதில்லை என்றதொரு நிலை அன்றைய நாட்களில் நிலவி வந்தது. இஸ்லாத்தைத் தலுவுவதற்கு முன்பு மதுவின் வாடையைக் கூட நுகராத மனிதராகத் திகழ்ந்தவர்தான் அபூபக்ர்(ரழி) அவர்கள். 

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு!!

இஸ்லாத்தின் ஒளிக்கதிர்கள் மக்காவில் பரவுவதற்கு முன்புள்ள கால கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடிக்கடிப் பார்த்துப் பேசி வரும் வழக்கமுள்ளவராக அபூபக்ர்(ரழி) அவர்கள் இருந்தும், நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பு முதன் முதலாக விடுக்கப்பட்ட அந்த நாட்களில் அவர் யமன் நாட்டில் இருந்தார்கள். பின் அங்கிருந்து மக்காவிற்கு திரும்பிவந்த அபூபக்ர்(ரழி) அவர்களை அபூ ஜஹ்ல், உத்பா, சைபா போன்ற மக்காவில் உள்ள பிரபலமானவர்கள் சென்று சந்தித்தனர்.  

விட்டிற்குத்  தன்னைப் பார்க்க வந்த அபூ ஜஹ்ல், உத்பா, சைபா போன்றொரைப் பார்த்து "என்ன விஷயமாக வந்து இருக்கிக்கிறார்கள்? ஏதேனும் விசேஷ செய்தி உண்டா? என்று அபூபக்ர்(ரழி) அவர்கள் வினவினார்கள்.

"ஆம். அது ஒரு மிகப் பெரிய செய்தி! அபூதாலிபின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அனாதை. தன்னை இறைத்தூதர் என்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார். நாங்கள் உங்கள் உடைய வருகைக்காகததான் காத்து இருக்கிறோம். நீர் வந்த உடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.இன்னும் இதில் உம்முடைய ஆலோசனை என்ன என்பதையும் நாங்கள் அறிய மிக ஆவலாக இருக்கிறோம். அதற்காகத் தான் உங்களது இல்லம் வந்தோம்". என்று தாங்கள் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தி, விஷத்தை கக்கினர்.

செய்தியைக் கேள்விப்பட்ட அபூபக்ர்(ரழி) அவர்கள் தன்னைப் பார்க்க வந்த பெருந்தலைகளை விட்டுவிட்டு, தன் ஆருயிர் தோழரை காண விரைந்து சென்றார்.
நபி(ஸல்) அவர்களை சந்தித்த அபூபக்ர்(ரழி) அவர்கள், "தோழரே ! நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா?" என்று கேட்டார்கள்.

அதற்கு, "ஆம்! என்று உரைத்தார் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.
" உங்களுடைய அந்த அழைப்பின் பொருள் என்ன?" என்று அபூபக்ர்(ரழி) என்று கேட்டார்கள்.

"லா இலாஹ இல்லல்லாஹ்!  முஹம்மதுர்  ரசூலுல்லாஹ்!"  என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

அதன்பின்னர் அபூபக்ர்(ரழி) அவர்கள், “முஹம்மது நபிஸல்) அவர்களே! என் அன்புத் தோழரே! நான் உங்களது அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் என்றுமே பொய் கூறியது இல்லையே!” என்று கூறி, திருக்கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏற்றக் கொள்கை அர்ப்பணித்தார்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

குறிப்பு : முழு வரலாற்றை படிக்க கலிஃபாக்கள் வரலாறு நூலை வாங்கி படிக்கவும்.

No comments:

Post a Comment