Aug 27, 2015

ஏழை அகதிகளின் இடுகாடு!!!


மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு!!! ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்பவர்களின் எண்ணிக்கையில் நடப்பு ஆண்டான 2015-லும் எந்த மாற்றமும் இல்லை. அதாவது அகதிகளாக வருவொர் பிணங்களாக கரையேறுகிறார்கள் – அந்த எண்ணிக்கைதான் அப்படியே தொடர்கிறது.

வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள். ஜூலை மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் அகதிகள் மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் வந்திறங்கியதாக உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முந்தைய மாதத்திலும் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரைக்கும் 1 இலட்சத்து 24 ஆயிரம் அகதிகள் கிரீசுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, மே மாத கடைசியில் மட்டும் ஐரோப்பாவை சேர்ந்த கடற்படை மற்றும் வியாபார கப்பல்கள் மொத்தம் 1,770 அகதிகளை மத்தியத் தரைகடல் பகுதியில் மீட்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவு அகதிகள் கப்பல்கள் தரைத் தட்டும் இடமாக மத்தியத் தரைக்கடல் உள்ளது.

கிரீஸில் உள்ள லெஸ்போஸ் (Lesbos), காஸ் (Kos) மற்றும் சியோஸ் (Chios) தீவுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஐரோப்பாவிற்கான உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் செயலாளர் வின்சென்ட் கோசெடேல் (Vincent Cochetel) அகதிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் தங்குமிடங்கள் செய்து கொடுக்க முடியாத இந்த குழப்பமான சூழலை எனது 30 ஆண்டு அனுபவத்தில் கண்டதில்லை என்கிறார். இது வரையில் நிகழ்ந்த அகதிகளின் உயிரிழப்பில் மிகப்பெரியதும் கொடூரமானதும் இந்த ஆண்டில் நிகழ்ந்த அகதிகள் கப்பல் விபத்தாகும்.

லிபியாவின் திரிபோலியில் இருந்து கிளம்பிய அகதிகள் கப்பலில் இருந்த 850 பேரில் 350 பேர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்கள். மீதி இருந்தவர்கள் சோமாலியா, சிரியா, மாலி, ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்டு 34 பேர்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். 

உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015-ம் ஆண்டில் மட்டும் 30,000 அகதிகள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இறந்த அகதிகளில் வட ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 1,722 என்கிறது.

இங்கே மிகவும் கொடூரமான விஷயம் என்னவெனில், போன ஆண்டின் இறப்பு எண்ணிக்கையான 3,271 இந்த ஆண்டின் தொடக்க வாரங்களிலேயே எட்டப்பட்டு விட்டது.
அகதிகளின் இந்த நிலைக்கு முதன்மையான காரணம் ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக ஆப்பிரிக்க கண்டம் மாற்றப்பட்டதுதான். அது தோற்றுவித்த கலவரங்களும், உள்நாட்டுப் போரும், அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆட்கடத்தல் கும்பல்களின் முக்கியமான இலக்கு இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளும் அதன் மக்களும் தாம்.

ஜூலை 27 அன்று 2,000 க்கும் மேற்பட்ட அகதிகள் பிரான்ஸ், காலேசில் (Calais) உள்ள ஐரோப்பிய சுரங்க வளாகத்தில் நுழைய முயற்சி செய்தனர். அங்கிருந்து இங்கிலாந்தை சென்றடைய செய்த இந்த கடுமையான முயற்சியில் ஏராளமானோர் காயமுற்றனர். பிரான்ஸ் போலிஸ் 200 அகதிகளை கைது செய்துள்ளனர் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்த கோடையில் மட்டும் 8 அகதிகள் ரயில் டிரக்கில் ஏற முற்பட்டு இறந்து போயினர்.
ஏற்கனவே பிரான்சில் 3000 பேர்கள் அகதிகளாக உள்ளனர். இந்த அகதிகளை கட்டுப்படுத்தத் தவறுவதாக பிரான்சும் பிரிட்டனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.

பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் தெரசா மே மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காசிநியூ இருவரும் சேர்ந்து வெளியிட்ட கடிதத்தில், பெரும்பான்மையான அகதிகள், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வழியே பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு வருவதாக் கூறினர்.
இதற்கு நிரந்தர தீர்வாக இருவரும், ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்வோரின் எண்ணிக்கையை குறைப்பது தான் என்று ஒரே குரலில் கூறியிருக்கின்றனர். .

கடுமையான சட்டங்கள் போடுவதன் மூலமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலமாகவும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுபடுத்த வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் விடுக்கின்றன. உலகம் முழுதும் இந்த ஏழை எளிய உழைக்கும் மக்கள் இருமுறை புலம் பெயர்ந்துள்ளனர். காலனி ஆதிக்க காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்கள் நேரடியாக ஆப்பிரிக்க ஆசிய மக்களை அடிமைகளாக இழுத்து சென்றனர். பிறகு இன்றைய மறுகாலனிய காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் போர்சக்கரத்தில் மாட்டிய ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் உள்நாட்டு நிலைமைகள், அம்மக்களை தமது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இரண்டாவது முறையாக நவீன அடிமைகளாக விரட்டுகின்றன. அதிலொரு பகுதி மக்கள் தாம் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாய் வீசியடிக்கபடுகின்றனர்.
21-ம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் பலிபீடங்களாக ஆசிய ஆப்ரிக்க ஏழை நாடுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த கொடூரத்தின் வடிவம் தான் மாறியுள்ளதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை. அகதிகளாக புலம் பெயர்ந்து செல்லும் மக்களில் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். - தகவல் வினவு. 

"முஸ்லிம்கள் ஒரு உடலைப் போன்றவர்கள் உடலின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அதை மற்ற பகுதி சரி செய்யும் என நபி (ஸல்) கூறினார்கள். ஆனால் நாம் உம்மத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல், அவற்களின் நிலையை மாற்ற முயற்ச்சி செய்யாமல் இருப்பது நமது குப்ரு சிந்தனையை உள்வாங்கியதன் விளைவு!!! அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் உண்மையான இறைநம்பிக்கையாளன் ஆக மாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்!!! ஒரு கணம் சிந்தியுங்கள் நாம் எல்லாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள்தானா??? 

எப்போது மாறும் உம்மத்தின் நிலை "!!!

From facebook bro Muhammad Noorulla

No comments:

Post a Comment