Sep 2, 2015

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 02

 
இஸ்லாத்தைத் தழுவு முன்


இஸ்லாத்தினை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் என்னும் வெளிச்சப் புள்ளி, அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.

ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார். முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.

மீண்டும் அஸர்  தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது. அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது வெட்டி வேலை, அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும் கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹுதைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார். பின் நாம் ஹர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்று பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார். அப்பொழுது ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு உளக் கிளர்ச்சி ஏற்பட்டது. இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.




இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்



மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப் பார்க்க ஆரம்பித்தார். அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்த அவர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனைக் குழப்பத்தில் ஆழ்ந்த பொழுது, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.

உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவாகியது. இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்ட பொழுது, இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள். மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது.

மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் தேதியன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

காலித் பின் வலீத் (ரழி) அவர்களே....!

உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..!

நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.

இல்லை..! யா ராசூலுல்லாஹ்..! இருப்பினும், நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே, இறைவா! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.


                                           பகுதி - 01 / பகுதி - 03 

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment