Sep 22, 2015

அரபா நோன்பின் மாண்புகள்.


அரபா தினம்’ என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான். ‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்’ (திருக்குர்ஆன் 5:3) இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரபாதினத்தின் போதும் தான் இறங்கியது. இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறும்போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை! நாங்கள் அப்போது அரபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: தாரிக்பின் ஷிஹாப் (ரஹ்) புகாரி: 4606)

அரபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரபா (வில் தங்குவது) தான். துல்ஹஜ் பத்தாம் இரவில் அதிகாலைக்கு முன்பு ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால், அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி)

அரபா நோன்பின் மாண்பு: 

அரபா தினத்தில் ஹஜ்ஜிக்கு செல்லாதவர்கள் நோன்பு நோற்பது சிறப்பான வழிபாடாகும். புனித ஹஜ்ஜிக்கு செல்பவர்கள் அரபா தினத்தில் அதிகமதிகம் நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தேவையில்லை! ‘அரபா நாளின் நோன்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்) அரபா தினத்தை விட சிறந்தநாள் வேறெதுவும் கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்).

No comments:

Post a Comment