Sep 4, 2015

காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் இறுதி நிலை

காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 13 (இறுதி பகுதி)

இறுதி நிலை


எதிரிகளின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைத்த அந்த வீரத்தின் விளை நிலத்தில் மரணத்தின் விதைகள் வளர்ந்து விருட்சமாக வளர ஆரம்பித்தன. பலவீனங்கள் அவரது நெஞ்சத்தை நோயுற முயன்று தோற்றுப் போனதால், பலவீனம் மரணமாக மாறியது. வேங்கை போல நடந்த அவரது கால்கள் இப்பொழுது படுக்கையில் நிலைகுலைந்து கிடந்தன. மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. மரணப்படுக்கையில் கிடந்த அந்த மாவீரர், தனது எண்ணங்கள் நிறைவேறாத நிலைகுறித்து, குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தார்.

நான் எத்தனை போர்களில் கலந்து கொண்டிருப்பேன். எத்தனை வாட்களையும், அம்புகளையும் எனது உடல் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் உயிர்தியாகியாக மாறி, சுவனத்துத் தோட்டங்களிலும், இறைவனுடைய அர்ஷிலும் பச்சைப் பறவையாகப் பறந்து திரியத் துடித்தேனே..!

எனது உடலில் தான் எத்தனை எத்தனை தழும்புகள்..! இதில் ஒன்றாவது என்னை உயிர்த்தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே..!

எனது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே..! என்று குமுறிய அவரது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

அவரது கவலைகள் அவரைக் கரைசேர்க்கவில்லை. உயிர்த்தியாகி என்ற அந்தஸ்தை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைக்காமலேயே மரணத்தை அவர் தழுவிக் கொண்டார். உடலை விட்டு உயிர், இறைவனின் பால் சென்று விட்டது.

அவர் மரணமடைந்த பொழுது, ஆட்சிப் பொறுப்பில் உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் மரணத்தைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் கண்கள் கலங்கினார்கள். மதீனா நகரமே சோகத்தில் மூழ்கியது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், இறுதியாக விட்டுச் சென்றவைகள் அவரது ஆயுதமும், அவரது குதிரையும் தான் என்பதைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள், உண்மையில் அவர் மிக உயர்ந்த மனிதர் தான் என்று புகழாரம் சூட்டினார்கள்.

உமர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை தளபதிப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள். எப்பொழுது உமர் (ரழி) அவர்களின் அந்த உத்தரவு கிடைத்ததோ, அப்பொழுதே தனது பதவியைக் காலி செய்து விட்டு, எந்த முணுமுணுப்பும் காட்டாமல் அடுத்தவருக்கு வழி விட்டதோடு, சாதாரணப் படைவீரராகவே தனது இறுதிக் காலம் வரை செயலாற்றி வந்தார். உன்னதமான நோக்கங்களுக்குச் சொந்தக்காரரான அவர், இஸ்லாமும், அதன் கொள்கைகளும் இந்தப் பூமியில் நிலைபெற வேண்டும், இறைவனது சத்திய வார்த்தைகள் இந்தப் பூமிப் பந்தை ஆள வேண்டும், அதற்காக உடலாலும், பொருளாலும், உயிராலும் சேவை செய்வது ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட அந்த உத்தமர், அதற்காக தளபதிப் பொறுப்பில் இருந்து தான் செயல்பட முடியும் என்றில்லாமல், சாதாரணப் படைவீரனாகவும் இருந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அவரது இந்த உத்தமமான, நேர்மையான, தூய்மையான எண்ணங்கள் இன்றைக்கும் நமக்கொரு வரலாற்றுப் படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது.

தனது இஸ்லாமிய வாழ்வை மிகப் பெரும் படைத்தளபதியாக ஆரம்பித்து, சாதராண படைவீரராக முடித்துக் கொண்டார். இஸ்லாத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து போர்களில் கலந்து கொண்டதன் காரணமாக, அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் விழுப்புண்களாகல் சூழப்பட்டிருந்தது, இன்னும் ஒவ்வொரு பாகமும் வலியால் ரணமாகி, வேதனையைத் தந்து கொண்டிருந்தன.

என்றைக்கு அவர் மரணமடைந்தாரோ அன்றைய தினம் தான் அவரது முதல் ஓய்வு நாளாகப் பரிணமித்தது. சுவனச் சோலைகளில் தஞ்சம் புகுந்த அந்தத் தினம் தான் அவர் ஓய்வு எடுக்கும் முதல் தினமாகவும் இருந்தது.

அவரது மரண ஊர்வலம் அவரது வீட்டிலிருந்து தொடங்குகின்றது. அவரது உடல் அவரது இல்லத்திலிருந்து வெளிக் கொண்டு வரப்பட்ட பொழுது, கண்ணீருடன் தனது மகனை அனுப்பி வைத்த அவரது தாயார்,

மகனே..! நீ வாழ்ந்த காலங்களில் சிங்கத்தை விட வீரமாக வாழ்ந்தாய். அதே போல நதியை விட பிறர் மீது கருணையைப் பொழிந்து வாழ்ந்தாய் என்று புகழாரம் சூட்டிய அவரது தாய், இன்னும் மகனே..! எவ்வாறு சிங்கம் தனது குட்டிகளை அரவணைத்துப் பாதுகாக்குமோ அது போல இந்த இஸ்லாமிய உம்மத்தைப் பாதுகாத்து வளர்த்து வந்தாய்.

யா அல்லாஹ்...! எனது மகனை உன்னிடம் அடைக்கலமாகத் தந்து விட்டேன், அவன் மீது கருணை புரிந்தருள்வாயாக..! என்று பிரார்த்தித்தார்கள்.

ஆம்..! அந்தத் தாயின் பிரார்த்தனைகளின் பிரதிபலனை நிச்சயமாக அவர் மறுமை நாளிலே கண்டு கொள்வார். கண்களில் குளிர்ச்சியைப் பெற்றுக் கொள்வார். அவன் எப்பொழுதும் என்னை சந்தோஷமாகவே வைத்திருந்தான், எனவே, யா அல்லாஹ்..! மறுமை நாளிலே அவனுக்கு நீ சந்தோஷத்தை அளிப்பாயாக என்றும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயார் தனது மகனின் மறுமைக்காகப் பிரார்தித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயாரது பிரார்த்தனைகளின் வரிகளைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள்,

அவரது தாயார் கூறிய அனைத்தும் உண்மையே..! அவர் கூறிய அனைத்திற்கு உரித்தானவரே..! என்று புகழாரம் சூட்டினார்கள்.

இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களது உடல் மண்ணறைக்குள் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தளபதியை இழந்த தோழர்களின் இதயங்கள் சோகத்தால் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தாலும், இறைவனின் முடிவை ஆமோதித்தவர்களாக அமைதி காத்தார்கள், முழுச் சூழ்நிலையும் நிசப்தமாக இருந்தது. காற்றில் அசையக் கூடிய இலையின் ஓசையும், காலடியில் படக் கூடிய சறுகுகளின் ஓசையும் கூட அந்த வேளையில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

அமைதி..! அமைதி...! பூரண அமைதி...!

வெற்றியைத் தவிர வேறெதனையும் பெற்றுத் தராத அந்தத் தளபதியின் உடல் மண்ணிற்குள் வைக்கப்பட்டதும், குமுறிக் கொண்டிருந்த எரிமலைகள் இப்பொழுது உதடுகளின் ஓரத்தில் வந்து நின்று வெடிக்கக் காத்திருந்தன. கண்கள் பனிக் குடத்தை சுமந்து கொண்டிருந்தன.

சற்று தூரத்தில் இன்னொரு தோழரும் நடந்து கொண்டிருக்கும் அடக்க நிகழச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆம்..! அந்தத் தோழரும் ஒரு இணை பிரியாத தோழர்தான். ஒவ்வொரு போரிலும் தனது தலைவனை முதுகில் சுமந்து கொண்டு, தனது தலைவன் இடும் கட்டளைகளுக்கு மாறு செய்யாமல், எதிரிகளை ஊடறுத்துச் சென்று தலைவனின் பணியை எளிதாக்கியவரும் இந்தத் தோழர் தான்.

ஆம்..! அந்தத் தோழர் யாருமல்ல..! காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட அவரது குதிரையான அஸ்கர் தான் அந்தத் தோழர்.

இனி தனது தலைவனை என்றுமே நாம் பார்க்கப் போவதில்லை என்று அறிந்த அஸ்கரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் திரண்டு, முத்துக்கள் திவளைகளாக அதனது கண்ணத்தை நனைத்துக் கொண்டு காற்றாற்று வெள்ளமாக உருண்டோடிக் கொண்டிருந்தது.

அமைதியைக் கிழித்துப் போட்டது அஸ்கரின் கண்ணீர், எரிமலையாய் வெடித்துச் சிதறின தோழர்களின் இதயச் சிரைகள்..!

அஸ்கரின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரைக் கண்ட தோழர்களது இதய எரிமலை வெடித்துச் சிதறின, உதடுகள் துடித்தன.., கண்கள் கண்ணீரைச் சொறிய ஆரம்பித்தன. இருளைக் கிழித்த ஒளியைப் போல அமைதியும் அங்கே அழிந்தே போனது, எங்கும் தோழர்களின் விம்மிய ஓசை..!

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 21 ல் மரணமடைந்தார்கள். அவர்களின் உடல் ஹம்மாஸ் - ல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், படைத்தவனைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டார்.


                                                   பகுதி - 12


முற்றும்.

No comments:

Post a Comment