Sep 6, 2015

அபீசீனியாவிற்குப் பயணமாகுதல் (ஹிஜ்ரத்)

 
அபீசீனியாவிற்குப் பயணமாகுதல் (ஹிஜ்ரத்)


அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 04

 
இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் மிதமிஞ்சிச் சென்று கொண்டிருந்த பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மக்காவை விட்டு அபீசினியாவிற்குப் பயணமாகும்படி அறிவுறுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் அபீசீனியாவை ஆண்ட கிறிஸ்தவ மன்னர் நீதிக்கும் இரக்கத்திற்கும் இன்னும் அங்கு அடைக்கலம் தேடிச் செல்வோர்களின் மீது கருணை காட்டக் கூடியவராக இருந்தார். இந்த தருணத்தில் முஸ்லிம்கள் இரண்டு பிரிவாக அபீசீனியாவிற்குப் பயணமானார்கள்.

முதல் குழுவில் 11 ஆண்களும் 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இரண்டாவது குழுவில் 80 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். இந்த இரண்டு குழுவையும் அனுப்பி விட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலேயே இருந்து கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே தங்கி விட்டதன் காரணத்தால் அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவிலேயே தன் ஆருயிர்த் தோழருடன் இருக்கவே விரும்பினார்கள். இருப்பினும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களையும் அபீசீனியாவிற்குப் பயணமாகும்படி உத்தரவிட்டார்கள். தனது தலைவருக்குக் கட்டுப்படுவதில் இன்பம் கண்ட தோழர் அபுபக்கர் (ரலி) அவர்கள் இப்பொழுது தனது குடும்பத்தவர்கள் அனைவரிடமும் பிரியா விடை கொடுத்து விட்டு அபீசீனியாவை நோக்கிப் பயணமானார்கள்.

அவர் பயணமாகிக் கொண்டிருந்த வழியில் இப்னு துக்னா பார்க் அல் காமித் என்ற இடத்தில் வசித்து வந்த காரா கோத்திரத்தாரின் தலைவராகிய இப்னு துக்னாவைச் சந்திக்க நேர்ந்தது. அபுபக்கர் (ரலி) அவர்களது அந்த நிலையைக் கண்ட இப்னு துக்னா அவர்கள் அபுபக்கர் அவர்களே நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்? என்னுடைய மக்கள் மக்காவை விட்டும் என்னை வெளியேற்றி விட்டதன் காரணமாக நான் இப்பொழுது அபீசீனியாவை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கின்றேன் என்றார்கள்.

உம்மைப் போன்ற ஒரு மனிதரை இந்த மக்காவாசிகள் ஊரை விட்டு வெளியேற்றி விட்டார்களா? கூடாது.

நீர் கஷ்டப்படுகின்றவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றீர்கள், விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கின்றீர்கள், பிறரது கஷ்டங்களை நீங்கள் பங்கு கொள்கின்றீர்கள், இத்தகைய நற்குணங்களைப் பெற்ற நீர் ஏன் உமது நாட்டை விட்டுப் போக வேண்டும். நான் உங்களது பாதுகாப்பிற்காகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். வாருங்கள்! நானும் நீங்களும் மக்காவிற்கே மீண்டும் போவோம். உங்களது பாதுகாப்பிற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, நீர் உமது இறைவனையும் சுதந்திரத்தோடு வழிபட்டு வரவும் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறிய இப்னு துக்னா, அபுபக்கர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவிற்குச் செல்கின்றார்.

அன்று மாலை நேரத்தில், மக்கத்துப் பெருந்தலைகள் கூடியிருந்த அந்த அவையில் இப்னு துக்னா அவர்கள் இவ்வாறு உரை நிகழ்த்தி, அவர்களிடம் கேட்டார்கள், ஏழைகளுக்கு இரக்கப்பட்ட, உங்களது கஷ்டங்களில் பங்கு கொண்ட, உங்களது சிரமங்களைக் கண்டு ஓடோடி வந்து உதவிய இந்த மனிதர் சத்தியத்தை ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற காரணத்திற்காகவா நீங்களை அவரை நாட்டை விட்டுத் துரத்துகின்றீர்கள்?

அபுபக்கர் அவர்களை நாடு கடத்தவோ அல்லது அவரது சொந்த விருப்பத்தின் பெயரிலோ அவர் இந்த நகரத்தை விட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது.

இப்பொழுது, இப்னு துக்னா அளித்த பாதுகாப்பு உத்திரவாதத்தை ஏற்றுக் கொண்ட குறைஷிகள் கூறினார்கள்,

அபுபக்கர் அவர்கள் இந்த ஊரில் இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை, ஆனால், அவர் அவரது இறைவனை அவரது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வைத்து வணங்கிக் கொள்ளட்டும். அவர் அவரது இறைவனைப் பிரார்த்திக்கும் பொருட்டு சத்தமிட்டு அவர் குர்ஆன் வசனங்களை மக்களை கூடும் திறந்த வெளிகளில் ஓதக் கூடாது. ஏனென்றால் எங்களது பிள்ளைகளும் பெண்களும் இதனை வழி தவறி விடுவார்களோ என்று நாங்கள் பயப்படுகின்றோம்! என்றும் கூறினார்கள்.

மிக நீண்ட யோசனைக்குப் பின் குறைஷியர்களின் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக் கொண்டு, அதன்படி நடக்க அபுபக்கர் (ரலி) அவர்கள் நடக்கச் சம்மதித்தார்கள். இறைவன் மீதுள்ள இறைநம்பிக்கை என்பது குப்பிக்குள் இருக்கும் வாசனைத் திரவியம் போன்றது. அதை இறுக மூடினாலும் அதன் வாசனை வெளி எட்டிப் பார்த்துக் கொண்டு தானே இருக்கும். தனது இறைநம்பிக்கையை மூடி மறைக்க இயலாத அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது வீட்டிற்கு வெளியே சிறிய பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி அதில், இறைவனைத் தொழுது வர ஆரம்பித்தார்கள்.

இளகிய மனம் படைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைவசனங்களை ஓத ஆரம்பித்தவுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது இந்த செயல்பாடுகளை மக்கத்து இளைஞர்களையும், பெண்களையும் ஆச்சரியத்தில் ஆழத்தியது, இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தாங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவர்களிடம் மிகைத்தது. இப்பொழுது, மிகவும் உஷாராகிப் போன மக்கத்துக் குறைஷிகள் இப்னு துக்னாவிடம் சென்று முறையிட ஆரம்பித்தார்கள்.

உங்கள் முன் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களை அபுபக்கர் அவர்கள் மீறி விட்;டார்கள். அவர் வீட்டின் முன் ஒரு பள்ளிவாசலைக் கட்டிக் கொண்டு, அதில் தொழுகை நடத்துவதுடன் இறைவசனங்களை ஓதவும் ஆரம்பித்து விட்டார்கள். இதன் காரணமாக எங்களது பெண்களும், குழந்தைகளும் வழி தவறிக் கொண்டிருக்கின்றார்கள்! என்று புலம்பி முறையிட ஆரம்பித்தார்கள்.

எனவே, இதனை நீங்கள் நேரில் வந்து கண்டு அபுபக்கரைத் திருத்துங்கள். நாங்கள் உங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதற்கு விரும்பவில்லை அதேநேரத்தில், அபுபக்கர் அவர்களை இதே நிலையில் விட்டு விடவும் எங்களுக்குச் சம்மதமில்லை, அவர் அவரது பள்ளிவாசலில் தொழுவதையும், அங்கு இறைமறை வசனங்களை உரக்க ஓதுவதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று புலம்பினார்கள்.

குறைஷிகளின் முறையீடுகளை எடுத்துரைத்த இப்னு துக்னா அவர்களிடம், அபுபக்கர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், இப்னு துக்னா அவர்களே! உங்களது பாதுகாப்பிற்கு மிக்க நன்றி! தயவு செய்து நீங்கள் எனக்காகப் பொறுப்பேற்றிருந்த அந்த பாதுகாப்பை நீங்கள் தயவுசெய்து, வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். நான் என்னைப் படைத்தவனின் பாதுகாப்பில் இருப்பதையே விரும்புகின்றேன். அதில் தான் நான் சந்தோஷமடைகின்றேன் என்று கூறினார்கள்.

ஹிஜ்ரத்

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறைவேதம் அருளப்பட்ட நாளிலிருந்து 13 வருடங்கள் அவர்கள் மக்காவில் தங்கி இருந்து பிரச்சாரம் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் 13 வருட காலமும் அவர்கள் செய்து கொண்டிருந்த அந்த பிரச்சாரப் பணிகள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் மிகவும் உறுதியாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டிருந்தது, இத்தகைய பணிக்கு ஈடானதொன்று இன்று வரைக்கும் எந்த சமுதாய வரலாற்றிலும் கிடையாது. இந்தப் பிரச்சாரப் பணிகளின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இன்னும் அவர்களை வாய்மையாகப் பின்பற்றிய தோழர்களுக்கும் அந்த குறைஷிகள் சொல்லொண்ணாத் துன்பங்களைத் தந்த போதும், அந்தத் துன்பங்கள் யாவும் அவர்களது பிச்சாரப் பணிகளுக்கு புது உத்வேகத்தையும், இன்னும் ஊக்கத்தையுமே தந்து கொண்டிருந்தது. மேலும், குறைஷிகளின் அந்தத் தாக்குதல்களை, அதாவது காட்டுமிராண்டிகள் போல் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்ட அவர்களது அந்த போர்க்குணம் கொண்ட ஈனச் செயல்களை, அவர்கள் தன்னந்தனியாக எதிர்கொண்டு சமாளித்து வந்தார்கள், அதில் தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொண்டு, இறைவனையே முற்றிலும் சார்ந்தவர்களாக இந்த மனித சமுதாயத்தை அடிமைத் தளைகளிலிருந்து விடிவிக்க வந்த அந்த விடிவெள்ளி பிரகாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்ல, தன்னைப் பின்பற்றியவர்களுக்கு வழிகாட்டியும் கொண்டிருந்தது.

காலம் காலமாக தங்களது மூதாதையர்களின் குல வழக்கப்படி இணை வைத்து வணங்கும் கொடிய பழக்கத்தைக் கடைபிடித்து வந்த அந்த மக்கத்துக் குறைஷிகள், இன்னும் பல்வேறு படுபாதகச் செயல்களை தயக்கமில்லாது செய்து வந்த அவர்கள், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின்பு மிகவும் நாகரீக மனிதர்களாக மாற்றம் பெற்றார்கள். நாடோடிகளாக நாகரீகமற்றவர்களாகத் திரிந்த அவர்கள் இப்பொழுது அரேபியப் பிரதேசத்தின் ஆட்சியாளர்களாக மாற்றம் பெற்றார்கள். இன்னும் அதனை விட மனிதநேய மிக்க தலைவர்களாக மாறிப் போனார்கள். இந்த மாற்றம் இரத்தம் சிந்திப் பெறப்பட்டதல்ல, மாறாக சத்தியம் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தான் எனலாம். மேலும் இந்த உலகம் இந்த சத்தியப் புள்ளிகளை கண்ட மாத்திரமே தன்னுடைய இருளை அகற்றிக் கொண்டு, சத்திய வெளிச்சம் பட்டவுடன், அந்த அசத்திய இருள்கள் தானாகவே அவர்களது மனப் பிரதேசத்தை விட்டும், இன்னும் அந்த சூழ்நிலைகளை விட்டும் அகன்று, சத்தியத்துக்கு வழிவிட்டு அசத்தியம் அகன்றே போனது.

இஸ்லாத்தின் அந்த ஆரம்ப கால மூன்றாண்டுகளின் இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் இரகசியமாக நடந்தேறிக் கொண்டிருந்த வேளையில், அபுபக்கர் (ரலி), அலி (ரலி), உதுமான் (ரலி), இன்னும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) போன்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்கள் இஸ்லாத்தில் நுழைந்து, தங்களது பெயர்களை இஸ்லாமிய வரலாற்றில் முன்னிறுத்திக் கொண்டார்கள்.

பின்பு இஸ்லாமியப் பிரச்சாரத்தை வெளிப்படையாகச் செய்வதற்கு இறைவன் அனுமதி வழங்கியதன் பின்பு, இஸ்லாமியப் பிரச்சாரம் வெளிப்படையாக செய்யப்பட்டு, முழு அரேபிய சமுதாயத்திற்கும் இன்னும் முழு மனித சமுதாயத்திற்கு விடுக்கப்பட்ட அந்த அழைப்பு, அரேபியப் பாலைப் பெருவெளியின் மலைகளிலும், வயல் வெளிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் எங்கினும் ஒலிக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்த ஏகத்துவப் பிரச்சாரப் பணி இன்றளவும் உலகின் நாலா பாகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது அந்த உற்ற தோழர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, உலகின் நாலா பகுதிகளுக்கும் பரவிச் சென்று அவற்றைப் பரப்பும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

இஸ்லாமியப் பிரச்சாரப் பணியின் ஆரம்பக் கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினுள் தனது பிரச்சாரப் பணியை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பப் பிரச்சாரப் பணிகள் அந்தளவு எளிதானதொரு பணியாக இருக்கவில்லை. இன்னும் உற்சாகமூட்டும் அளவிலும் இருக்கவில்லை. ஆனால் மக்காவின் வெளிப்புறப் பகுதியில் வைத்து, மதீனாவில் இருந்து வந்த சிலர் இஸ்லாத்தின் செய்திகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக கவனமாகவும், ஆழ்ந்த கவனத்தோடும் செவிமடுத்ததன் பின்பு, ஒரு மிகப் பெரிய மாற்றம் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஏற்பட்டது. அதன் காரணமாக, இரண்டு மூன்று ஆண்டுகளில் முழு மதீனாவுமே முழு இஸ்லாமிய பிரச்சாரக் கேந்திரமாக மாறித்தான் போனது தான் விந்தையான அதிசயமாகும்.

இப்பொழுது மதீனா முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கூடிய பிரதேசமாக, முஸ்லிம்கள் அடைக்கலம் தேடிச் செல்லும் இடமாக மாறிப் போனதன் பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் உள்ள தனது தோழர்களை மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யும்படி பணித்தார்கள். அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களே மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார்கள்.

மிகப் பெரும் தோழர்களான உமர் (ரலி) அவர்கள் முதற்கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாகவே ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று விட்டார்கள். இப்பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆருயிர்த் தோழரைப் பார்த்துக் கேட்டார்கள்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது ஆருயிர்த் தோழர் அவர்களே..!

நான் எப்பொழுது ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு செல்வது? எனக்கு அனுமதி உண்டா? என்று கேட்டார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களே..! என இடை நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..! நானும் தான் உங்களைப் போலக் காத்திருக்கின்றேன், இறைவனது உத்தரவு வரட்டும் பொருங்கள் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களது தொலைநோக்குச் சிந்தனை இப்பொழுது வேலை செய்தது. நாம் மட்டும் தனியாகப் போகப் போவதில்லை. நம்முடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் வர இருக்கின்றார்கள் போலல்லவா தெரிகின்றது..! இனி நாம் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது தான் என முடிவு செய்த அபுபக்கர் (ரலி) அவர்கள் பயணத்திற்கான ஒட்டகைகளையும், பயண வழிகாட்டியையும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். இதற்காக இரண்டு ஒட்டகங்களைத் தயார்படுத்தினார்கள்.

வழக்கமாக அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மாலையிலோ அல்லது காலையிலோ தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது வழக்கத்திற்கு மாற்றமாக, தலையில் ஒரு மறைப்பை வைத்துக் கொண்டு அந்தக் கடுமையான வெயில் நேரத்தில் மதிய நேரத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது இல்லத்தினுள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நுழைகின்றார்கள். அப்பொழுது தனது குடும்பத்தவர்களுடன் அபுபக்கர் (ரலி) அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற வேளையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களது வருகையைக் கண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! எனது ஆருயிர்த் தோழரே...! நீங்கள் காரணமில்லாமல் இந்த அகால வேளையில் வர மாட்டீர்கள் என்பது திண்ணம்..!

இப்பொழுது கதவுக்கு மிக அருகில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கோருகின்றார்கள். உள்ளே வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களே..! நான் உங்களுடன் தனிமையில் உரையாட வேண்டும்..!

என்னுடன் எனது இரண்டு மகள்தான் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர இங்கு வேறு யாருமில்லை தோழரே..! என்று அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து பதில் வந்தது.

தோழரே..! நமக்கு அனுமதி வந்து விட்டது. இப்பொழுது மதீனாவிற்குப் பயணமாக வேண்டும்.

நான் உங்களுடன் வருவது பற்றிய முடிவு? என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் ஆவலுடன்..!

நீங்களும் தான் என்னுடன் வருகின்றீர்கள்..! என்னுடன் வருவதற்கு உங்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கின்றது..! இது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பதிலாக வந்தது.

இந்த சம்பவத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களது விவரிப்பதைப் பாருங்கள்..!

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்வதற்கு அனுமதி கிடைத்து விட்டதை அறிந்து எனது தந்தை ஆனந்தத்தில், சந்தோஷமானது கண்ணீராக அவரது கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.

இப்பொழுது, பயணத்திற்குத் தேவைப்படும் நோக்கில் தயார் செய்யப்பட்ட இரண்டு ஒட்டகங்களைத் தனது தோழரின் முன்னால் நிறுத்திய அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இரண்டில் ஒன்றைத் தங்களுக்காகத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்கள். ஒன்றைத் தேர்வு செய்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அதற்கான கிரயப்பணத்தையும் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இப்பொழுது இருவரும் அன்றைய இரவே மக்காவை விட்டும் கிளம்பி விட வேண்டும் என்ற முடிவாகியது.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) மற்றும் அலி (ரலி) அவர்களைத் தவிர..! மற்ற அனைத்து பிரபலமாக நபித்தோழர்களும் மக்காவை விட்டும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டிருந்தார்கள். இதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கத்து மக்கள் கொடுத்து வைத்திருந்த அமானிதப் பொருட்களை திருப்பி ஒப்படைக்கும் பொருட்டு, அந்தப் பொருட்களுக்குப் பாதுகாப்பாக, அலி (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களோ..! இப்பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பயணப்பட இருக்கின்றார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட அந்த இரவு நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவை விட்டும் புறப்பட்டு, தவ்ர் குகையில் தஞ்சமடைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் புறப்பட்டு விட்டார்கள் என்பதை அறிந்த குறைஷித் தலைவர்கள் கோபமடைந்தார்கள். அவரை எப்படியாவது உயிருடன் அல்லது பிணமாகவோ பிடித்து விட வேண்டும் கங்கணம் கட்டிச் செயல்பட்டார்கள்.

இந்த நிலையில் தவ்ர் குகையில் இருவரும் இருந்து கொண்டிருந்த பொழுது தான் கீழ்க்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளி, தனது உண்மை அடியார்களுக்கு ஆறுதல் வழங்கினான்.

குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், ''கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்"" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைதுதான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்;. (9:40)

மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்லும் வழக்கமான பாதையை விட்டு விட்டு, கடலோர மார்க்கமாக மதீனாவைச் சென்றடைந்தார்கள். அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு 49 வயதும், 6 மாதங்களும் ஆகி இருந்தது, அவர்களது தலைமுடி கறுப்பு நிறத்திலிருந்து சற்று நிறம் மங்கத் தொடங்கி இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 53 வயதாகியிருந்த போதிலும், தலைமுடி கறுத்தும், அடர்த்தியாகவும் இருந்தது.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பொழுது, 40 ஆயிரம் திர்ஹம்களுக்கு சொந்தக் காரராக இருந்த அவர், இப்பொழுது வெறும் 5 ஆயிரம் திர்ஹம்கள் மட்டுமே மீதமிருந்தது. அவர் தன்னுடைய சொத்துக்களில் அதிகமானதை இறைவனுடைய வழியில் செலவு செய்தவராகவே இருந்தார். இப்பொழுது, மீதமிருந்த அந்த சொத்தையும், தன்னுடனேயே மதீனாவிற்கு எடுத்து வந்து விட்டார். அவர் தனது மனைவியையும், பிள்ளைகளையும், இன்னும் தனது பெற்றோர்களையும் இறைவனது பாதுகாப்பின் கீழ் தான் விட்டு வந்திருந்தார். அவர்களுக்கென எதனையும் விட்டு விட்டு வந்திருக்கவில்லை.



(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment