2. முஸ்லிம்களை இன ரீதியாகவும், குழு ரீதியாகவும் பிளவுபடுத்துவதையும், அதன் பால் அழைப்பதையும் நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
இன்று இன ரீதியாகவும், குழு ரீதியாகவும் முஸ்லிம்களிடையே காணப்படும் முரண்பாடுகள் பாரிய வன்முறைகளாக வெடித்து விஷ்வரூபம் எடுத்துள்ளதைப்போல் முஸ்லிம்களின் நெடிய வரலாற்றில் எங்கும் நாம் காணமுடியாது. எமது வரலாற்றில் கருத்து முரண்பாடுகளும், வீரியமான அரசியல் முரண்பாடுகளும் நிலவிய காலங்களில் கூட இன்றைய சூழலைப்போல் அது தலைவிரித்தாட வில்லை. இந்நிலை மிக அண்மிய காலத்தில் தான் உருவாகியிருக்கிறது என்பது முஸ்லிம் அல்லாத ஆய்வாளர்களின் கருத்தும்கூட.
பேராசிரியர் பிரட் ஹாலிடே இது பற்றி பின்வருமாறு சொல்கிறார், “சுன்னிகளுக்கும், ஷியாக்களுக்கும் இடையிலான உண்மையான நேரடியான முரண்பாடுகள்(வன்முறைகள்) மிக அண்மித்த காலத்திலேயே குறிப்பிடத்தக்கவையாக மாறியுள்ளன.” எனவே இன்று எமக்கிடையே தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இந்த வன்முறைக்கலாசாரம் திட்டமிட்ட புறக்காரணிகளால் உருவானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கிலாஃபா என்பது இன, குழு வாதங்களை கடந்தது. அது குறித்த ஒரு மத்ஹப்புக்கு அல்லது சட்ட நிலைப்பாட்டுக்கு மாத்திரம் கட்டுப்பட்டதோ அல்லது சொந்தமானதோ அல்ல. மாறாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. எனினும் தற்காலத்தில் கருத்தாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் எம்மிடையே ஆழமான வெறுப்புணர்வும், பிளவும் வேறூண்றச்செய்யும் முயற்சி பல மட்டங்களில் மேற்கோள்ளப்படுவது குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். எமக்கு மத்தியில் அகீதாவின் கிளைகளிலும், பிக்ஹ் நிலைப்பாடுகளிலும் காணப்படும் வேறுபாடுகள் இவர்கள் சொல்வதைப்போல் மிகத் தெளிவான பரிகோடுகள் கிடையாது. மாறாக அவை மிக நிதானமாகவும், ஆழமாகவும் கையாளப்பட வேண்டிய பல்பரிமாணங்கள் கொண்டவை என்பதை நாம் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்.
இந்த நிதானப்போக்கு எம்மிடைய அண்மைக்காலம் வரை இருந்தது என்பதற்கு அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த ஆரம்ப காலப்பகுதியில் இன, குழு ரீதியான வேறுபாடுகளை கடந்து இணைந்த ஜும்ஆக்களும், மாநாடுகளும், கூட்டுவேலைத்திட்டங்களும், ஆர்பாட்டங்களும் இயல்பாக இடம்பெற்றமை மிகச் சிறந்த சான்றாகும். இன்றும் ஓரிரு ஈராக்கிய குடும்பங்களுடன் பழகிப்பார்த்தால் அல்லது விசாரித்துப்பார்த்தால் இந்த இன மற்றும் குழுக்களிடையே காணப்படும் சாதாரண உறவுகளையும், இன்னும் சொல்லப்போனால் அதிகளவான திருமண பந்தங்கங்களைக்கூட புரிந்து கொள்ளலாம். பின்னர் பல காலனித்துவ சதிவேலைகளால் நிலைமை தலை கீழாக மாறிமை நாம் அறிந்ததே.
எனவே இஸ்லாத்திற்கு மாத்திரம்தான் அரபிகள், குர்திஷ்கள், துருக்கியர்கள், சுன்னிகள், ஷியாக்கள் என அனைவரையும் ஓர் அணியில் தலைமை தாங்கும் தகுதி இதுவரையில் இருந்திருக்கிறது. இனிமேலும் அதனால் மாத்திரம்தான் ஐக்கியம் சாத்தியப்படும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment