Aug 24, 2015

அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 01

முதலாம் கலிஃபா
அபூபக்ர் (ரழி)



புனித மக்கா

1400 ஆண்டுகளுக்கு முன் வறுமை!! பசி!! இதைத் தவிர வேற எதுவும் தெரியாது.
கிடைத்ததை வைத்து வாழ்க்கை நடத்தும் கொடிய நிலை. வறுமையை பயன்படுத்தி அவர்களை அடிமையாக்க முனைந்தது யூதர்களின் பணக்காரக் கூட்டம். வட்டி எனும் கொடிய விதையை வதைத்து, அதை பெரும் விருட்சமாய் வளரவிட்டிருந்தனர்.

வறுமை காரணமாக கொள்ளை.

வளமின்மை காரணமாக வழிப்பறி.

வளம் வேண்டி செய்யும் கொலை.

என மாபாதகங்கள் ஒரு புறம் அந்த அரபுப் பகுதியை ஆட்டிப் படைத்தன.
எல்லா ஊர்களிலும் உள்ளது போன்ற ஏற்றத்தாழ்வு அங்கும் உண்டு. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் மட்டுமில்லை; இன, மொழி, நிற வித்தியாசங்களும் அங்கே கடைப்பிடிக்கப்பட்டதுண்டு.

நாகரிகம் செத்துப் போய் அநாகரிகம் பொருத்திருத்த வேலை அது. நாகரிகம் பேசினால் அவன் பைத்தியக்காரன். மனிதாபிமானம் பற்றி சிந்தித்தால் அவன் ஏமாளி என்பது தான் அந்த காலக்கட்டத்தின் நிலையாக இருந்தது.

இறைவழிபாடு கூட கேலிக் கூத்தாக்கப்பட்ட காலமது!! புனித இல்லம் கபாவில் நிர்வாணமாய் வலம் வருவர். குளவிக் குரல் எழுப்பி, கும்மாளம் போடுவதுதான் வழிபாட்டு முறை.

இப்படி எல்லா வகையிலும் சீர்கெட்டு, சிதைந்து போய் இருந்த மக்காவில்தான் அபூபக்ர்(ரழி) அவர்கள் பிறக்கிறரர்கள். அபூபக்ர் என்பது அவர்களின் குறிப்புப் பெயராகும்.

அவர்களின் பெயர் : அப்துல்லாஹ்

தந்தை பெயர் : உதுமான் (அபிகுஹாஃபா)

தாய் பெயர் : உம்முல் கைர் (ஸல்மா)

‘தைம்’ எனும் வம்சத்தில் பிறந்தார். இவரின் வம்சாவழித் தொடர்பில்தான் நபி(ஸல்) அவர்களின் வம்சாவழியும் இணைக்கிறது.

அபூபக்ர்(ரழி) அவர்களுக்கு சித்தீக் (அதிகமாக உண்மைபடுத்துபவர்) என்ற புனைபெயரும் உண்டு. இஸ்லாமிய வரலாற்றில் அபூபக்ர் சித்தீக் என்ற பெயரை விட்டு விட்டு எந்த குறிப்பையும் எழுத இயலாது என்பது நிதர்சனம்.

நபி(ஸல்) அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியின் போதும் அவர்கள் உடன் இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் “நீங்கள் நபிதான் என வர்க்கா பின் நவ்ஃபல் அவர்கள் கூறிய பின் ஆண்களில் முதலில் இஸ்லாத்தை உண்மை என நம்பி ஏற்றவர்கள் இவர்கள்தான்.

3660. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார். 
"(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்" என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன். (புகாரி)

3656. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்ப - துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார். 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி)

நபி(ஸல்) அவர்களின் பேரன்பை பெற்ற அபூபக்ர்(ரழி) அவர்கள் பேரரறிராகவும் திகழ்ந்தார் என்பதற்கு பின்வரும் ஹதிஸ் சான்றாக உள்ளது.

3654. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்பட்டிருந்த போது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அதில், 'அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்தார்" என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியாரைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு இவர் ஏன் அழுகிறார்?' என்று நாங்கள் வியப்படைந்தோம். இறைத்தூதர் தாம் அந்த சுயாதிகாரம் அளிக்கப்பட்ட அடியார். (நபி - ஸல் - அவர்களின் இறப்பையே இது குறிக்கிறது என்பதை அபூ பக்ர் - ரலி - அறிந்து கொண்டார். ஏனெனில்,) அபூ பக்ர்(ரலி) எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூ பக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூ பக்ர் அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூ பக்ரின் வாசலைத் தவிர" என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பாசப்பிணைப்பில் இருந்தவரும், இஸ்லாமிய வளர்ச்சியில் பேரருவமிக்கவரும், சொர்க்கத்திற்குரியவர் என அடியாளம் காணப்பட்டவருமான அபூபக்ர்(ரழி) அவர்களின் வரலாற்றை இன்ஷா அல்லாஹ் தெரிந்து கொள்வோம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


குறிப்பு : முழு வரலாற்றை படிக்க கலிஃபாக்கள் வரலாறு நூலை வாங்கி படிக்கவும்.

No comments:

Post a Comment