Aug 21, 2015

குழப்பமான சூழ்நிலையில் தனித்திருக்க இஸ்லாம் வலியுறுத்துகிறதா?


ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களிடமிருந்து அபூஇத்ரீஸ் அல்கவ்லானி அறிவித்ததாக புஸ்று இப்னு உபைதுல்லாஹ் அல்ஹளரமி அறிவித்துள்ள ஹதீஸ் புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْخَيْرِ، وَكُنْتُ أَسْأَلُهُ عَنِ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ، فَجَاءَنَا اللهُ بِهَذَا الْخَيْرِ، فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ شَرٌّ؟ قَالَ: «نَعَمْ» ، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ؟ قَالَ: «نَعَمْ، وَفِيهِ دَخَنٌ» ، قُلْتُ: وَمَا دَخَنُهُ؟ قَالَ: «قَوْمٌ يَسْتَنُّونَ بِغَيْرِ سُنَّتِي، وَيَهْدُونَ بِغَيْرِ هَدْيِي، تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ» ، فَقُلْتُ: هَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ؟ قَالَ: «نَعَمْ، دُعَاةٌ عَلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا» ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، صِفْهُمْ لَنَا، قَالَ: «نَعَمْ، قَوْمٌ مِنْ جِلْدَتِنَا، وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا» ، قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَمَا تَرَى إِنْ أَدْرَكَنِي ذَلِكَ؟ قَالَ: «تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ» ، فَقُلْتُ: فَإِنْ لَمْ تَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ؟ قَالَ: «فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا، وَلَوْ أَنْ تَعَضَّ عَلَى أَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடத்தில் மக்கள் நன்மையைப்பற்றி வினவிக்கொண்டிருந்தார்கள். தீமை என்னை பீடித்து விடக்கூடாது என்ற அச்சத்தில் அதுபற்றி நான் அவர்களிடம் வினவினேன்.அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஜாஹிலிய்யத்திலும்,தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம்.அப்போது அல்லாஹ் (இஸ்லாம் என்ற) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான்.ஆகவே இந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் கேட்டேன்.ஆம்! என்று அவர்கள் பதிலுரைத்தார்கள்.அந்த தீமைக்குப் பிறகு ஏதேனும் நன்மை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம்! அதில் புகைமூட்டம் (கலங்கல்) இருக்கும்!என்று அவர்கள் கூறினார்கள்.புகைமூட்டம் என்றால் என்ன? நேர்வழியல்லாத ஒன்றைக்கொண்டு வழிகாட்டுவார்கள். அவற்றில் நன்மையையும், காண்பாய்; தீமையையும் காண்பாய்; அந்த நன்மைக்குப் பிறகு ஏதேனும் தீமை ஏற்படுமா? என்று நான் வினவினேன். ஆம்! ஒரு கூட்டத்தினர் நரகத்தின் வாயிலை நோக்கி (மக்களை) அழைப்பார்கள். அதை ஏற்றுக்கொண்டவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார்கள்! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவர்களைப்பற்றி எங்களுக்கு விவரியுங்கள் என்று நான் கூறினேன். அவர்கள் நம்மை சேர்ந்தவர்களாகவும், நமது மொழிகளை பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அது என்னை பீடித்துக் கொள்ளும் பட்சத்தில் எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். முஸ்லிம்களின் ஜமாஅத்தையும், இமாமையும் பற்றிப்பிடிப்பீராக என்று கூறினார்கள். மக்கள் மத்தியில் அந்த ஜமாஅத்தும் இமாமும் இல்லை என்றால் என்ன செய்ய? என்று நான் வினவினேன். ஒரு மரத்தின் வேர் பாகத்தை உமது பற்களால் கவ்விப் பிடிக்க நேர்ந்து, அதே நிலையில் உமக்கு மரணம் ஏற்பட்டாலும் இந்த பிரிவினர்கள் அனைவரையும் விட்டு விலகியிருப்பீராக! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை சிலர் மேற்கோள் காட்டி குழப்பமான காலகட்டத்தை முஸ்லிம்கள் அடைந்துவிட்டதால் ஒவ்வொரு முஸ்லிமும் தனித்து செயல்படவேண்டுமென்றும்,இனி வர இருக்கும் காலகட்டம் இன்னும் மோசமாக இருக்குமென்றும்,காடுகளுக்கு சென்று விவசாயம் செய்தும் கால்நடைகளை வளர்த்தும் உயிர் வாழ வேண்டுமென்றும், அல்லது அவரவர் தங்கள் ஈமானை பாதுகாத்துக்கொள்ள தனித்து வாழவேண்டுமென்றும் கிலாஃபத்தின்மூலம் அல்லாஹ் அருளிய சட்டங்களை இந்த பூமியில் நிலைநிறுத்துவதற்கான உழைப்பை செய்யாமல்  ஒதுங்கி இருக்கவேண்டுமென்றும் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்த ஹதீஸில் பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் சந்திக்க இருக்கும் நல்ல சூழ்நிலை குறித்தும், மோசமான சூழ்நிலை குறித்தும்,அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வொரு முஸ்லிமும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மக்களிடமிருந்து விலகி தனித்திருப்பதைப்பற்றி கூறப்பட்டுள்ள இதுபோன்ற ஹதீஸ்களைப் பொறுத்தவரை அவை வணக்க வழிபாடுகளில் பின்பற்றவேண்டிய விஷயங்களில் தொடர்புடையவை என்பதையும் கலீஃபாவிடமிருந்து விலகி இருப்பதற்கோ,முஸ்லிம்களுக்கான அமீரான கலீஃபா இல்லையெனில் கிலாஃபத்தை நிலைநாட்டும் பணியிலிருந்து விலகி இருப்பதற்கோ அனுமதி அளிக்கவில்லை என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
முஸ்லிம்கள் தங்களுக்கான ஜமாஅத்தையும்(கிலாஃபா)  இமாமையும்(கலீஃபா) பெற்றிராதபோது என்னசெய்வது என்பது பற்றியும்,நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களைப் பொறுத்து என்னசெய்வது என்பது பற்றியும் ஹுதைஃபா(ரலி) அவர்கள் வினவியபோது, இத்தகைய பிரிவினரை விட்டு விலகிவிட வேண்டுமென்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டுள்ளார்களே ஒழிய, முஸ்லிம்களை விட்டு பிரிந்துவாழ வேண்டுமென்றோ,கிலாஃபா இல்லாத சூழலில் கிலாஃபத்தை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்றோ கட்டளையிடவில்லை! ஆகவே வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகிக்கொள்ளவேண்டும் என்ற இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் கட்டளை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு இருக்கும் நிலையில் தமக்கு மரணம் நேர்ந்தாலும் வழிகெடுக்கும் கூட்டத்தினருடன் இணையாமல் விலகியிருக்க வேண்டும் என்று இங்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் அழுத்தமாக கூறியுள்ளார்கள்.
“மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு” – என்று அலங்காரமாக (metaphorical – مَجَازِيّ) கூறப்பட்டுள்ளதை, காட்டிற்கு செல்லவேண்டுமென்றும் முஸ்லிம்களை விட்டும் விலகி வாழ வேண்டுமென்றும் சிலர் தவறாக விளக்குகின்றனர்.இதுபோன்ற அலங்கார பதங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் ஏராளமாக உபயோகிக்கப்பட்டுள்ளன. இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்ளவேண்டுமென்ற அடிப்படை கல்வியினை பெறாதவர்கள் இதுபோன்ற தவறான விளக்கங்களை அளிப்பது ஆபத்தானதாகும்.இங்கு ஒரு காரியத்தை அழுத்தமாக கூறுவதற்காக “மரத்தின் வேரை தமது பற்களால் கவ்விப்பிடித்தவாறு” என்று கூறப்பட்டுள்ளது; எந்த சூழ்நிலையிலும் தீனை விட்டுவிட அனுமதியில்லை என்பதே இதன் பொருளாகும்.நரகத்தின் வாயிலில் நின்றுகொண்டு மக்களை வழிகேட்டின் பக்கம் அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு முற்றிலும் விலகி ஒருவர் தமது தீனை பின்பற்றவேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஹதீஸில் கலீஃபாவை நிலைநிறுத்தும் பணியைவிட்டு விலகியிருப்பதற்கான அனுமதியோ அல்லது விதிவிலக்கோ எவருக்கும் அளிக்கப்படவில்லை.மாறாக, தீனை பின்பற்றவேண்டும் என்ற கட்டளைக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நரகத்தின் வாயிலை நோக்கி அழைப்பவர்களை விட்டும் விலகியிருக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.அந்நிலையில் கூட கலீஃபாவை நிலைநிறுத்தும் பணியில் அவர் ஈடுபடாவிடில் அவர்மீது பாவம் நிலைகொண்டிருக்கும். ஆகவே அவர் மரத்தின் வேரை தமது பற்களால் கடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மரணம் நேர்ந்தாலும் நரகத்தின் வாயிலை நோக்கி அழைக்கும் வழிகெடுக்கும் கூட்டத்தினரை விட்டு விலகியிருந்து தன்னுடைய தீனை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமே ஒழிய, முஸ்லிம்களின் ஜமாஅத்திலிருந்து விலகிக்கொள்வதற்கோ அல்லது தீனின் சட்டங்களை நிலைநாட்டும் பணியை மேற்கொள்ளாமல் புறக்கணித்து விடுவதற்கோ அல்லது முஸ்லிம்களுக்குரிய இமாமை (கலீஃபாவை) ஏற்படுத்தும் கடமையை விட்டு ஒதுங்கியிருப்பதற்கோ அவருக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது.
நபி  صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ
“ஆடு ஒரு முஸ்லிமின் சிறந்த சொத்தாக ஆகும்நிலை ஏற்படும்போது அவர் அதனுடன் மலையின் உச்சிக்கு சென்றுவிடுகிறார். அவருடைய தீனை ஃபித்னாவிலிருந்து காக்கும் விதத்தில் மழை பொழிகிறது”
                                                                    (அபூ ஸயீதுல் குத்ரி(ரலி),புஹாரி)
குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதால் முஸ்லிம்களைவிட்டு தனித்து வாழவேண்டுமென்றும் காட்டிற்கு சென்று கால்நடைகளை மேய்த்து வாழ்க்கையை நடத்தி தீனை பாதுகாக்க வேண்டுமென்றும் சிலர் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி விளக்கமளிக்கின்றனர்.ஒருவர் முஸ்லிம்களின் ஜமாஅத்தான கிலாஃபத்தைவிட்டு விலகியிருக்க வேண்டுமென்பதையோ அத்தகைய கிலாஃபா இல்லாத போது அதை நிலைநாட்டுவதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டுமென்பதையோ இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டவில்லை. மாறாக உணர்சிப்பூர்வமான பாமர முஸ்லிம் ஒருவருக்கு எது சிறந்த சொத்தாக இருக்கும் என்பதையும், ஃபித்னாவுடைய காலகட்டத்தில் அவர் எவ்வாறு பாதுகாப்பு பெறுகிறார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.எனவே மக்களிடமிருந்து விலகி தன்னை தூரமாக்கிக் கொள்வதற்கு இந்த ஹதீஸ் ஆர்வமூட்டவில்லை என்பதை விளங்கிக்கொள்ளலாம்.
இஸ்லாமிய நிலப்பரப்பானது பல நாடுகளாக பிரிந்து கிடப்பதற்கோ பல ஆட்சியாளர்களின் கீழ் ஆளப்படுவதற்கோ அறவே அனுமதி கிடையாது என்ற நிலையில், முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களின் தயவில் இருப்பவர்கள் இது போன்ற மார்க்க விளக்கங்களை அதிகமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ் سبحانه وتعالى வழங்கியருளிய இஸ்லாமிய சட்டங்களைக் கொண்டு ஆட்சி செய்யும் முஸ்லிம்களின் ஒரே ஜமாஅத்தான கிலாஃபா என்பது ஒரே இமாமையும்(கலீஃபா) ஒரே தேசத்தையும் கொண்டதாகும். அத்தகைய முஸ்லிம்களின் ஒரே தலைமையான கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்கான உழைப்பில் ஈடுபடுவதை திசை திருப்புவதற்காகத்தான் இதுபோன்ற விளக்கங்களை பரவலாக்கிவிட்டுள்ளனர்.
நபி  صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:-
وَمَنْ بَايَعَ إِمَامًا فَأَعْطَاهُ صَفْقَةَ يَدِهِ، وَثَمَرَةَ قَلْبِهِ، فَلْيُطِعْهُ إِنِ اسْتَطَاعَ، فَإِنْ جَاءَ آخَرُ يُنَازِعُهُ فَاضْرِبُوا عُنُقَ الْآخَرِ
“எவரேனும்  ஒருவர்  தமது   கரத்தால்   கைலாகு  செய்வதன் மூலமும் தமது  இதயத்தால் நம்பிக்கை கொள்வதன் மூலமும் ஓர் இமாமுக்கு   பைஆ செய்தால்,  பிறகு    இயன்றவரை   அவருக்கு கட்டுப்பட்டு நடக்கட்டும்.  இந்நிலையில் மற்றொருவர்   வந்து (அதிகாரத்தில்)  அவரிடம்  சர்ச்சை செய்தால்  அவரது கழுத்தை வெட்டுங்கள்”                         ( அப்துல்லாஹ்  இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி),   முஸ்லிம் )
مَنْ أَتَاكُمْ وَأَمْرُكُمْ جَمِيعٌ عَلَى رَجُلٍ وَاحِدٍ، يُرِيدُ أَنْ يَشُقَّ عَصَاكُمْ، أَوْ يُفَرِّقَ جَمَاعَتَكُمْ، فَاقْتُلُوهُ
“உங்களின் விவகாரங்கள் ஒருவரின்   தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருக்கும்போது  (கலீஃபாவிற்கு  போட்டியாக  வருவதின் மூலம்) உங்கள் பலத்தை  குறைப்பதற்கோ அல்லது உங்கள் ஒற்றுமையை குலைப்பதற்கோ நாடியவராக எவரேனும்   வந்தால் அவரை கொன்றுவிடுங்கள்”            (அரஃபஜா(ரலி), முஸ்லிம் )
إِذَا بُويِعَ لِخَلِيفَتَيْنِ، فَاقْتُلُوا الْآخَرَ مِنْهُمَا
“இரண்டு கலீஃபாக்களுக்கு   பைஆ பெறப்பட்டால் இரண்டாவது நபரை கொன்றுவிடுங்கள்”
 (அபூஸயீது  அல் குத்ரி(ரலி),  முஸ்லிம் )
அபூஹாஸிம்  அறிவித்து முஸ்லிமில்  பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:-

قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الْأَنْبِيَاءُ، كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ، وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي، وَسَتَكُونُ خُلَفَاءُ فَتَكْثُرُ»، قَالُوا: فَمَا تَأْمُرُنَا؟ قَالَ: «فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ، فَالْأَوَّلِ، وَأَعْطُوهُمْ حَقَّهُمْ، فَإِنَّ اللهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
 “நான் ஐந்து வருடங்கள் அபூஹுரைராவுடன்  இருந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்   கூறியதாக அவர் அறிவித்துள்ளதை  செவியுற்றிருக்கிறேன்:- பனூஇஸ்ராயீல்  மக்களை  நபிமார்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு நபி மரணித்ததும் மற்றொரு நபி அவரிடத்திற்கு அனுப்பப்பட்டார். நிச்சயமாக! எனக்குப் பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள்;  ஆனால் கலீஃபாக்கள்  வருவார்கள். அவர்கள்  அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்.   (அதுகுறித்து)  எங்களுக்கு  என்ன  கட்டளையிடுகிறீர்கள்? என்று(ஸஹாபாக்கள்)   வினவினார்கள்.  அவர்கள் அனைவருக்கும்  ஒருவருக்குப்பின் ஒருவராக பைஅத்  கொடுங்கள். அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக!   அவர்களிடம்   ஒப்படைக்கப்பட்ட   பொறுப்பு பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிப்பான்”
முஸ்லிம் உலகில்  ஒன்றிற்கு மேற்பட்ட ஆட்சியாளர்கள் இருப்பதற்கு அனுமதியில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே இஸ்லாத்தின் எதிரிகளால் வரையறுக்கப்பட்ட இன்றைய முஸ்லிம் நாடுகளின் எல்லைக்கோடுகள் தகர்த்தெறியப்பட்டு அனைத்து நிலப்பகுதிகளும் ஒரே கலீஃபாவின் கீழ் ஆளப்பட வேண்டுமென்றால் அத்தகைய கிலாஃபத்தை மீண்டும் நிறுவுவதற்காக முஸ்லிம்கள் அயராது உழைக்கவேண்டும்.

No comments:

Post a Comment