காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 08
தாத்து ஜன்தல் என்ற குலத்தினர் வசிக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 500 பேர் கொண்ட படைப் பிரிவை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தக் குலத் தலைவர் அகீதர் பின் அப்துல் மாலிக் என்பவரை உயிருடன் பிடித்து இங்கு கொண்டு வாருங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் சென்ற படையானது மிக வேகமாகப் பயணித்து, தாத்து ஜன்தலை இரவிலேயே அடைந்து விட்டார்கள். இன்னும் அந்த இடத்தை அடைந்ததும், தனது தோழர்களை மெதுவாகப் பேசிக் கொள்ளும்படியும், இன்னும் குதிரைகளை மெதுவாக நடக்க விட்டு சலசலப்பு இல்லாமல் நகரத்திற்குள் நுழையும்படியும் கட்டளையிட்டார்கள்.
இப்பொழுது, முழுச் சூழ்நிலையும் மிகவும் அமைதியாக இருந்தது. அகீதர் பின் அப்துல் மாலிக் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு, மதுபானத்தையும் அருந்திக் கொண்டிருந்தான். காட்டில் இருந்து ஊருக்குள் வந்ததொரு வெள்ளை நிற மிருகம் ஒன்று, கோட்டையின் கதவை தனது தலையால் முட்டிக் கொண்டிருந்தது. கதவு தட்டப்படும் ஓசையைச் செவி மடுத்த அவனது மனைவி, நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உங்களது வேட்டைப் பிராணி இப்பொழுது உங்களது கதவுக்கருகில் வந்து விட்டது, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள், அவசரம் என்றாள். மது அருந்திக் கொண்டிருந்த அவன், மதுக்கிண்ணத்தை தரையில் வைத்து விட்டு, அம்பை எடுத்து வில்லில் பூட்டிக் கொண்டு, தனது சகோதரன் ஹஸனையும் இன்னும் தனது பணியாட்களையும் துணைக்கழைத்தான். தனது குதிரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, தனது வேட்டைப் பிராணியைத் தேடிப் புறப்பட்டான். அவன் ஓரடி எடுத்து வைப்பதற்குள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் அவர்களது தோழர்களும் அவனை முற்றுகையிட்டு விட்டார்கள். அவனோ தனது இரையைத் தேடி வெளியே வந்தான், ஆனால் விதியோ இங்கே அவனை இரையாக்கி வைத்து விட்டது. அவனது சகோதரன் ஹஸன் முஸ்லிம்களை எதிர்த்து சற்று எதிர்ப்புக் காண்பித்தான், அவனால் அவனது எதிர்ப்பு பயனளிக்கவில்லை, கொல்லப்பட்டு விட்டான். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாத அகீதர் கைது செய்யப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்காமல், ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியைக் கட்டும்படி உத்தரவிட்டு, அவனை விடுதலை செய்ததோடு அவனது பிரதேசத்தை அவனுக்கே விட்டுக் கொடுத்தார்கள்.
தாத்துஜன்தல் தலைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அவன் விலையுயர்ந்த ஆடைகளையும், அதில் விலையுயர்ந்த தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் அணிந்திருந்தான். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, இது என்ன பெருமையும், அகங்காரமும் என்று வியந்து போனார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்ன ஆச்சரியமாய் இருக்கின்றதா?
சுவனத்தில் சஅத் பின் முஆத் அவர்களின் கைக்குட்டையானது, இதனை விட மிகச் சிறந்தது, விலை உயர்ந்தது என்று கூறினார்கள்.
காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகச் சிறந்த, வெற்றி வீரர் மற்றும் தளபதியாக மட்டும் அவர் பரிணமிக்கவில்லை. இன்னும் அவர் மிகச் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளரும் கூட. இவரது அழைப்பின் மூலமாக பலர் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சிகளும் நடந்தேறி உள்ளன. ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு, 400 படைவீரர்களுடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நஜ்ரான் என்ற பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பகுதியில் வாழக் கூடிய பனூ ஹாரிஸ் குலத்தவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அங்கிருந்து கொண்டு அவர்களுக்கு இஸ்லாத்தையும், குர்ஆனையும், சுன்னாவையும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது போர்ப்பிரகடனம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
நஜ்ரான் பிரதேசத்தை அடைந்தவுடன், அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து இஸ்லாத்தின் மேன்மைகளைப் பற்றியும், அதன் கொள்கைகளையும் பற்றியும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகவும் மென்மையான முறையில் அந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இன்னும் உறுதியான குரலில் கூறினார், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அது தான் உங்களைப் பாதுகாக்கும், அதுவன்றி இந்த உலகத்திலும் மறுமையிலும் உங்களைப் பாதுகாக்கக் கூடிய சக்தி எதுவுமில்லை. இன்னும் இழிவிலிருந்தும், அவமானத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார். நீங்கள் எனது உரையை செவிமடுத்தால் அது உங்களுக்கு சுபிட்சத்தைக் கொண்டு வரும், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் உறுதியான குரலில்.., இல்லையெனில், இந்தப் பகுதியே குப்பைக் கிடங்காக மாற்றப்படும். இதனைக் கேட்ட நஜ்ரான் மக்கள், இனி நம்முடைய எதிர்காலம் என்பது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது என்று முடிவெடுத்தவர்களாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும், இடைவிடாது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகள் மூலமாக மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டும், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராக கிளந்தெழுவோர்களுக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டும், இஸ்லாமியப் பணிக்காகத் தன்னை அற்பணித்த வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அந்த கால கட்டங்களில் எந்த தொய்வோ அல்லது நயவஞ்சக எண்ணங்களோ, பலவீனங்களோ அவரிடம் ஏற்பட்டது கிடையாது. அவர் என்றைக்கு இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியும், அவர்களின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தும் போர்களில் கலந்து கொண்டார். இன்னும் போர்களில் முன்னணிப் படைத்தளபதியாக இவரை நியமித்ததன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தளவு நன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்பது நமக்குப் புலனாகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை தழுவிய பொழுது, இவரைப் போன்ற வீரத்தியாகிகளின் கைகளில் இஸ்லாத்தை ஒப்படைத்து விட்டுப் போவது குறித்து, மிகவும் சந்தோஷமடைந்தார்கள். இந்த உலகத்தில் பல நாடுகள் தங்களுக்கு கீழ் பணியாற்றக் கூடிய படைவீரர்களுக்குக் கொடுக்கக் கூடிய பதக்கங்கள், பட்டங்கள், கேடயங்கள் ஆகிய அனைத்தையும் விடவும், இறைவனது திருப்தியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது திருப்தியும் எவ்வளவு மேன்மையானது..! அந்தத் திருப்தியைத் தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டார்கள்.
அகில உலமெல்லாம் அருள் செய்யப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது முழு வாழ்க்கையையும் இஸ்லாமியப் பணிக்காக அற்பணித்தவர்களாக தனது 63 வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது பிரிவு நபித்தோழர்களை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது, வானமே இடிந்து தலையில் வீழ்ந்து விட்டது போல நபித்தோழர்கள் உணர்ந்தார்கள்.
உமர் (ரழி) அவர்களோ..., இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அதனை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என பிடிவாதம் பிடித்தார்கள். இன்னும் எவராவது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்;டார்கள் என்று சொன்னீர்கள் என்றால், எனது வாளுக்கு இறையாக நேரிடும் என்று, தனது வாளை உருவிக் கொண்டு எதிர்ப்படுபவர்களை அச்சமூட்டிக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான நிலையில், அபுபக்கர் (ரழி) அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரையை நிகழ்த்தி, அந்த அமளி துமளிகளை அடக்கிப் போட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்ட சிலர், இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். இவர்கள் இஸ்லாம் விதிக்கக் கூடிய வரம்புகளையும் சட்ட திட்டங்களையும் பேண முடியாது, பலவீனமானவர்களாக இருந்த காரணத்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். உண்மையிலேயே இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை, இறைவனையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களையும் நேசிக்கவில்லை. அவர்களிடம் இயற்கையிலேயே அசுத்தங்களும், கடப எண்ணங்களும் மிச்சமிருந்தன. அவர்களிடம் இஸ்லாமியப் போதனைகளின் தாக்கம் இருக்கவில்லை மாறாக, இணைவைக்கும் கொடிய பழக்கம் குடிகொண்டிருந்தது. இதுவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்தது. இன்னும் சிலர் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று மறுத்தனர்.
இன்னும் அஸ்வத் அன்ஸி, முஸைலமா கத்தாப், பின்பு தலீஹா மற்றும் சஜ்ஜா ஆகிய குலத்தலைவர்கள், குழப்பக்காரர்களாக இவர்கள் தங்களை இறைத்தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். உண்மை முஸ்லிம்கள் இதனால் கலவரமடைந்தார்கள், கலங்கினார்கள். ஒரு பக்கம் தங்களது வழிகாட்டியும், தலைவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்களை இழந்து துக்கத்தில், அவர்களை அடுத்து யாரை தங்களது தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, யாரை கலீஃபாவாக ஆட்சித் தலைவராக நியமிப்பது என்ற கவலையில் இருந்தார்கள். இந்த பிரச்னைகளுக்கிடையில், இஸ்லாத்தினை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் போலித் தூதர்களது பிரகடனங்கள் ஆகிய அனைத்தும், முஸ்லிம்களைக் கவலையில் ஆழ்த்தியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அபுபக்கர் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றார்கள், அவர்கள் பொறுப்பேற்றபின்பு, நிலைகுலையாது உறுதியான திடமான பல நடவடிக்கைகள் எடுத்தார்கள், தீமைகள் பலவற்றைக் களைந்ததோடு, குழப்பக்காரர்களையும் ஒழித்தார்கள்.
குழப்பக்காரர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த அபுபக்கர் (ரழி) அவர்கள், தலீஹா பின் கவாலித் மற்றும் மாலிக் பின் நவீரா என்ற போலித் இறைத்தூதர்களை எதிர்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்களை படையுடன் அனுப்பி வைத்தார்கள். இன்னும் முஸைலமா பின் கத்தாப் - க்கு எதிராக இக்ரிமா (ரழி) அவர்களையும், அஸ்வத் அன்ஸி - க்கு எதிராக முஹாஜிர் பின் அபீ உமைய்யா (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.
இன்னும் திஹாமா பகுதியை வெற்றி கொள்வதற்காக சுவைத் பின் மக்ரான் (ரழி) அவர்களையும், இன்னும் கததா வை வெற்றி கொள்வதற்காக அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட படைத்தளபதிகளில் தலீஹா பின் கவாலித் என்பவனை, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன் முதலாக வெற்றி கொண்டார்கள். கவாலித் என்பவன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடனேயே தன்னைத் தானே இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டான். இவனது இடத்தை அடைந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவனைக் கொன்றதோடு, இவனது ஆதரவாளர்களையும் வெற்றி கொண்டார். இதனை அடுத்து, மாலிக் பின் நவீரா என்பவனை வெற்றி கொள்வதற்காகப் புறப்பட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.
அஸத், கதஃபான், தாய், ஆபஸ் மற்றும் பனூ தீபான் போன்ற குலத்தவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையினால், இவர்கள் அனைவரும் அவர்களது கோத்திரத்தைச் சேர்ந்த மாலிக் பின் நவீராவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அவனை ஆதரிக்கவும், பின்பற்றவும் செய்தனர். எனவே, ஒருங்கிணைந்த இந்த கோத்திரத்தவர்களை வெற்றி கொள்வதென்பது சாதாரண விஷயமல்ல, ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதனைச் செய்து காட்டினார்கள். அவரது இராணுவப் பயிற்சி, அனுபவம், வீரம், தந்திரங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டிப் போரடி வெற்றி பெற்றார். எதிரியைப் பூண்டோடு அழித்தார். போர் தொடங்குவதற்கு முன்பாக அதீ பனி ஹாதிம் அவர்கள், தாய் குலத்தவர்களுடன் பேசி தாய் குலத்தவர்களை போரிலிருந்து விலகி இருக்கச் செய்ததோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தார்.
இந்தப் போருக்குப் பின்னர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாமிய தலைமையகமான மதீனாவிற்குச் சென்றார். பின்னர் அபுபக்கர் (ரழி) அவர்களது ஆணைப்படி, அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் கொண்டதொரு படையை, நானும் ஒரு இறைத்தூதர் தான் என வாதாடிக் கொண்டிருந்த முஸைலமா பின் கத்தாப்பை சந்திக்க காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பி வைத்தார்கள். இதற்கு முன்பாக சர்ஜீல் பின் ஹஸனா (ரழி) மற்றும் இக்ரிமா (ரழி) ஆகியோர்களின் தலைமையில் சென்ற படையை முஸைலமா வெற்றி கொண்டிருந்தான். முஸ்லிம்களை வெற்றி கொண்டபின், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் மீண்டும் ஒரு படை வருகின்றது என்ற கேள்விப்பட்ட முஸைலமா மீண்டும் 40 ஆயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டினான். இரண்டு படைகளும் மிகவும் உக்கிரமாக போரிட்டன. இரண்டு படைகளும் கடுமையாகப் போரிட்டதில் முஸைலமாவின் படைகள் முஸ்லிம்களுக்கு ஒரு இன்ஞ் நிலத்தைக் கூட விட்டுத் தராத அளவுக்கு போரிட்டனர்.
நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதனை மதிப்பீடு செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம்களின் படைகளை அவரவர் குலத்தின் அடிப்படையில் பிரித்தெடுத்தார்கள். ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவரை நியமித்தார்கள். பின் அவர்களிடம் பந்தயம் கட்டி, யார் உங்களில் முன்னேறுகின்றார்கள் என்பதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன், எங்கே பார்க்கலாம் யார் எதிரிகளை ஊடறுத்து முன்னேறிச் செல்கின்றார்கள் என்பதை.., என்று உசுப்பேற்றி அவர்களது வீரத்தைத் தட்டி விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களது திட்டம்.., நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது. ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலப் பெருமையைக் காட்டிட இது தான் சந்தர்ப்பம் என்று தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து போரிட்டார்கள்.
முஸ்லிம்களின் வேகத்தை எதிர்க்கத் திராணியற்ற முஸைலமா படைகளின் எதிர்ப்பு வலுவிழக்க ஆரம்பித்தது. அவர்கள் இப்பொழுது பின்வாங்கி ஓட ஆரம்பித்தார்கள். இறுதியில் தங்களது கோட்டைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார்கள். அந்தக் கோட்டையின் சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அதன் கதவுகள் மிகவும் உறுதியாக இருந்தன. எனவே, கோட்டை மீது ஏறிக் குதிக்கவோ அல்லது கதவை உடைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லவோ இயலாத நிலையில் முஸ்லிம்கள் கோட்டையை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.
நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள் தனது தோழர்களை அழைத்து என்னை கோட்டையின் உள்ளே சென்று விழும்படியாகத் தூக்கி எறியும்படி கூறினார். இறைவழியில் உயிரைத் தியாகம் செய்ய வந்த அந்தத் தோழர்கள், தங்களது தோழரின் திட்டத்தைச் செயல்படுத்த முன் வந்தனர். வலுவான நபர்கள் இணைந்து பரா பின் மாலிக் (ரழி) அவர்களைக் கோட்டையின் உள்ளே இருந்த தோட்டத்திற்குள் தூக்கி எறிந்தனர். அச்சமற்ற நிலையில் உயரே வானிலிருந்து விழுந்த மனிதரைக் கண்ட முஸைலமா வின் ஆட்கள், அச்சத்தால் நடுங்கினர். மேலும், தங்களுக்கு எதிரான படைகள் இப்பொழுது நிலத்தை விட்டு விட்டு, வானிலிருந்து இறங்கி வருவதாக நினைத்து கதிகலங்கினர். இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள், எதிரிகளைச் சாய்த்த வண்ணமே, கோட்டையின் கதவுப் பகுதிக்கு வந்து, கதவைத் திறந்து விட்டார். கோட்டைக் கதவு திறக்கப்பட்டதும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகள் இப்பொழுது கோட்டைக்குள் நுழைய ஆரம்பித்தனர். சற்று நேரத்திற்குள் கோட்டை முஸ்லிம்களின் வசமாகியது. முஸைலமாவும் அவனது ஆட்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அந்தக் கோட்டைக்குள் இருந்த தோட்டம் இப்பொழுது தண்ணீருக்குப் பதிலாக இரத்தத்தால் குளித்துக் கொண்டிருந்தது. இதனால் இந்தப் பூங்காவுக்கு மரணப் பூங்கா என்ற பெயரும் வந்தது. முஸைலமாவை வெற்றி கொண்டபின், கோட்டையின் வனப்பு மிகுந்த பகுதிகளில் இஸ்லாமியப் படைகள் சற்று ஓய்வெடுத்தனர்.
படைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது, அபுபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த ஆணை ஒன்று காலித் பின் வலீத் (ரழி) அவர்களை ஈரான் மற்றும் ஈராக் நோக்கிச் செல்ல வைத்தது. கலீஃபாவின் ஆணையைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், 12 ஆயிரம் வீரர்களுடன் ஈராக் நோக்கிப் பயணப்பட்டார்கள். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 12 ம் நாளன்று ஈராக்கின் பள்ளத்தாக்குப் பகுதியான அப்லா வைத் தாக்கும்படி உத்தரவு வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், அந்தப் பகுதியின் ஆட்சியாளராக ஹர்மஸ் க்கு ஒரு அழைப்பு மடல் ஒன்றை அனுப்பி வைத்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மடலில் கீழ்க்காணும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
ஓ ஹர்மஸ்! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்..! அல்லது இஸ்லாமிய ஆட்சியை ஏற்றுக் கொள்..! இன்னும் வரியையும் செலுத்தி விடு. இல்லையென்றால், நீ எவ்வாறு இந்த உலக வாழ்வை நேசிக்கின்றாயோ அதனை விட மரணத்தை நேசிக்கக் கூடிய கூட்டத்தை நீ சந்திப்பது என்பது தவிர்க்க இயலததாகி விடும் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தைப் பார்த்த ஹர்மஸ் செய்த வேலை என்னவென்றால், உடனே ஈரானுடைய பேரரசனுக்கு தகவல் அனுப்பி, மிகப் பெரிய படை ஒன்றை தனக்கு உதவியாக அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தான். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஈரான் மன்னர், ஒரு மிகப் பெரும் படையை அனுப்பி வைத்தார்.
ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் இப்பொழுது இருக்கக் கூடிய படைவீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரமே இருந்தது. இரண்டு படைகளும் மோதவிருக்கும் வேலையில், ஹர்மஸ் பெருமையின் காரணமாக, தன்னை முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் பார்க்கலாம் என்று மார் தட்டிக் கொண்டு நின்றான்.
அவனது பெருமையை அதிக நேரம் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் நீடிக்கவிடவில்லை. எடுத்த எடுப்பிலேயே அவன் மீது தனது வாளைப் பாய்ச்சி, இறுதி மூச்சை விடும்படி செய்தார். போர் இன்னும் ஆரம்பிக்கவில்லை, ஆனால் தனது படைத் தளபதியையே இழந்து நின்ற ஹர்மஸின் படைகள் அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தன. அவர்களது அச்சம் நியாயமாக்கப்பட்டது. அவர்கள் வேரறுந்த மரம் போலச் சாய்ந்தனர். முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். இன்னும் கனீமத் - போர்ப் பொருட்களாக ஏராளமானவற்றை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டார்கள், இன்னும் ஹர்மஸ் அணிந்திருந்த விலை மதிக்க முடியாத பூ வேலைப் பாடுகளுடன் கூடிய தலைக் கவசத்தையும் முஸ்லிம்கள் போர்ப் பொருளாகப் பெற்றார்கள். ஒரு லட்சம் திர்ஹம் விலைமதிப்புள்ள அந்த தலைக் கவசததை அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்குப் பரிசாக வழங்கி கௌரவித்தார்கள். எப்பொழுது இந்தப் படைத்தளபதி ஈராக்கில் நுழைந்தாரோ, அப்பொழுதே வெற்றியும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.
இன்னும் எல்லாப் போர்களிலும் அதாவது தாத்துஸ் ஸலாசில், வலீஜாப் போர், அலீஸ் போர், அம்கீஸிய்யா, ஹைரா, அன்பர், ஐனுல் தமர், ஹஸீர், ஃகனாஃபஸ், மஸீஃக், ஸமீல் மற்றும் ஃபரஸ் ஆகிய போர்களிலும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் போரிட்ட இஸ்லாமியப் படை வெற்றிகளைக் குவித்தது. ஈராக்கில் மட்டும் இரண்டு வருடங்கள் தங்கியிருந்து 15 போர்களில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். எதிரிகளை விட ஆள் பலத்திலும், ஆயுத பலத்திலும் குறைவாக இருந்த போதிலும், எதிரிகளைச் சந்தித்த அத்தனை போர்களிலும் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர். குறைந்த வளங்களோடு, குறைந்த கால அளவில் இந்தளவு வெற்றிகளை இன்றும் கூட எந்த படைத்தளபதியும் பெற்றதில்லை என்பதே வரலாறு.
பகுதி - 7 / பகுதி - 09
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment