காலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07
தபூக் யுத்தம்
தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ரி 9 ஆம் வருடம் கடுமையான கோடையின் பொழுது, மிகச் சிரரமமானதொரு சூழ்நிலையில் வெயிலின் கொடுமை ஒரு புறம், தொடர்ந்தாற் போல பல போர்கள், இன்னும் கரடுமுரடான பாதை ஆகிய அனைத்தையும் கடந்து, தபூக் என்ற இந்த இடத்திற்கு 30 ஆயிரம் முஸ்லிம் படைவீரர்களைக் கொண்ட படையுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருகின்றார்கள். இந்தப் பகுதியில் குடிப்பதற்குக் கூட அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காததொரு சூழ்நிலை. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் சிறிது கசிந்து கொண்டிருந்தது. ஒளுச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அதிலிருந்து சிறிது தண்ணீரைத் பிடித்துக் கொண்டு வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை வேண்டிக் கொள்கின்றார்கள். கசிந்து வந்து கொண்டிருந்த அந்தத் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் தோழர்கள். அதிலிருந்து தனது கை, கால்கள், முகத்தையும் கழுவிக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதித் தண்ணீரை, எங்கே தண்ணீர் கசிந்து கொண்டிருந்ததோ அதன் மீதே திருப்பி ஊற்றி விட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். எங்கே தண்ணீரை ஊற்றினார்களோ, அங்கிருந்தே இடி போன்ற சப்தத்துடன் தண்ணீர்ச் சுனை ஒன்று பொங்கிக் கொண்டு வந்தது.
அந்தக் கோடையின் வெப்பத்தால் எங்கே தங்களது தோல்கள் வெடித்து விடுமோ என்று இறைத்தோழர்கள் நினைக்கும் அளவுக்கு அப்பொழுது வெயிலின் கொடுமை இருந்தது. இந்த நேரத்தில் அங்கே தண்ணீர் ஊற்றுப் பொங்கி வந்தது, அவர்களது வேதனைகளையும் தீர்த்தது, இன்னும் அது அருட்கொடையாகவும் அமைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வந்திருந்த அனைத்து முஸ்லிம் படைவீரர்களும் அந்தத் தண்ணீரைப் பருகினார்கள், குளித்தார்கள். இன்னும் தங்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்தும் வைத்துக் கொண்டார்கள், இன்னும் அதனை விட இழந்த சக்தியை அதன் மூலம் மீட்டுக் கொண்டார்கள். இந்த அருட்கொடைக்காக அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள், புகழ்ந்தார்கள். இப்பொழுது, முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீண்ட நாட்கள் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்று சொன்னால், இந்த இடத்தில் பச்சைப் பசேலென்று தோட்டங்களைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு, வார்த்தைக்கு வார்த்தை உண்மையானது. அற்புதமாக வெளிவந்த அந்த நீரூற்றிலிருந்து வெளிக்கிளம்பிய நீரானது அந்தப் பகுதியையே பச்சைப் பசேலென்ற தோட்டமாக, உயிர்த் துடிப்புள்ள பூமியாக மாற்றியது. இன்றளவும் அந்தப் பூமி பசுமையாகவே காணப்படுகின்றது. காண்போர் கண்களை குளிர்வித்து வருகின்றது. இன்னும் அன்று வெளிக்கிளம்பிய அந்த நீரூற்று இன்றளவும் தொடர்ந்து தனது அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டு வருவதோடு, அந்தப் பகுதியானது இன்றளவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தளமாகத் திகழ்ந்து வருகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பகுதியை மக்கள் காண்பதோடு, இஸ்லாத்தின் மகத்துவத்தையும் கண்டு வருகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கை நோக்கி படை நோக்கிப் படை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, சிரியாவில் இருந்து வந்து கொண்டிருந்த வணிகக் கூட்டம் மூலம், ரோமச் சக்கரவர்த்தி முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக மிகப் பெரும் படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு மதீனாவிற்குள் நுழைவதற்காக தயார்படுத்தி வருகின்றார் என்ற செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். இன்னும் அவர்களோடு பல அரபுக் குலத்தவர்களும் கை கோர்க்கக் காத்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களை இந்தப் பூமிப் பந்திலிருந்து துடைத்தெறிவதற்குக் கங்கணம் கட்டி, தங்களது படைகளைத் திரட்டி வருவதாகவும் அறிந்தார்கள். இன்னும் ரோமச் சக்கரவர்த்தியின் படைகள் ஏற்கனவே மதீனாவை நோக்கிப் புறப்பட்டு விட்டதாகவும், அந்தப் படை இப்பொழுது சிரியாவின் எல்லைப் பகுதியாகிய பல்கா என்ற இடத்தை அடைந்திருப்பதாகவும் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ரோமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போர் புரிவதற்கு தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தத்தம் செய்தவற்கு தாயராகும்படி தனது தோழர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.
பயணம் மிக தூரமானதாக இருப்பதின் காரணமாக, மிக நீண்ட தொலைவுக்கு ஏற்றாற் போல உணவு மற்றும் படைத் தளவாடங்களைத் தயாரிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதோடு, எதிரிகள் நமது எல்லைக்குள் நுழைவதற்குள், நாம் அவர்களை முந்திக் கொண்டு அவர்களை எதிர்நோக்க வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அதற்கேற்றாற் போல உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.
30 ஆயிரம் படை வீரர்களில் 10 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் அடங்குவர். ரோமப் படை முஸ்லிம்களின் பிரதேசங்களுக்குள் நுழைவதற்குள் முஸ்லிம்களின் படை அணி, தபூக் போய்ச் சேர்ந்து விட்டது. முன்னணிப் படைக்கு காலித் பின் வலித் (ரழி) அவர்களும், வலது புற அணிக்கு தல்ஹா பின் அபய்துல்லா (ரழி) அவர்களும், இடது புற அணிக்கு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் தலைமை தாங்கி படைகளை நடத்திச் சென்றார்கள்.
20 நாட்கள் ரோமப் படைகளை தபூக்கில் எதிர்பார்த்து முஸ்லிம்களின் படை காத்துக் கொண்டிருந்தது. ஆனால் முஸ்லிம்களை எதிர்கொள்ளத் துணிவற்ற ரோமப் படை களத்திற்கு வரவே இல்லை. முஸ்லிம்களின் படைத்தயாரிப்புகளைப் பற்றி ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட ரோமப் பேரரசன் சீஸர், இது போர் செய்வதற்குத் தகுந்த தருணமல்ல என்று போரைக் கைவிட்டு விட்டான்.
போர் கைவிடப்பட்ட நிலையில், இறைத்தூதர் (ஸல்) தபூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது தோழர்களை அனுப்பி, அங்குள்ள குலத்தவர்களுக்கு இஸ்லாத்தின் போதனை எடுத்து வைத்தார்கள். இஸ்லாத்தின் அழைப்பில் கவரப்பட்ட பல குலங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டன. இன்னும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் இஸ்லாத்தின் உன்னதத்தை அறிந்து கொண்டு, முஸ்லிம்களிடம் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள்.
இன்னும் முஸ்லிம்களின் வீரம் மற்றும் துணிவு கண்டு சிரியாவின் மன்னர் மிகவும் பிரமித்துப் போனார். முஸ்லிம்களைப் பற்றிய தாக்கம் அவரிடம் அதிகமாகியது.
பகுதி - 6 / பகுதி - 08
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment