Jan 27, 2016

கருத்து வேறுபாடு!


****************
ஒரு முஸ்லிமை பொறுத்தவரை வஹியின் திட்டவட்டமான (கதயி) அறிவிப்புகள் அல்லாத ஆய்வின் மூலமான தீர்வுகளை செய்ய இறைவன் அனுமதித்த பகுதிகளில் கருத்து வேறுபாடு கொள்ள முடியும். ஆனால் அந்த கருத்துவேறுபாடு முஸ்லீம்கள் என்ற உள்ளார்ந்த பொது உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது. அந்த வகையில் பனூகுரைலா சம்பவம் எமக்கு சிறந்த உதாரணமாக தெரிகிறது.

மதீனாவை அண்டிவாழ்ந்த யூதக் கோத்திரமான இந்த பனூ குரைலாக்கள் மதீனா தவ்லா அல் இஸ்லாமியாவுடன் நட்புறவு ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டு நயவஞ்சகமாக மக்கா குறைஷிகளுடன் கூட்டுச் சேர்ந்து சதிவேலைகளை செய்தபோது குறித்த கோத்திரத்தை முற்றுகையிட்டு தகுந்த பாடம் கற்பிக்க அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஒரு படைப்பிரிவை அப்பகுதிக்கு அனுப்பினார்கள். அப்போது "நீங்கள் பனூகுரைலாக்களின் பூமியை அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்! " என்ற கட்டளையை கூறியே வழியனுப்பினார்கள்.

குறித்த படைப்பிரிவு செல்லும் நேரம் அஸருடைய நேரம் ஆகிவிட அந்த சஹாபாக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு தோன்றியது! #ஒருபிரிவு "வேகமாக செல்ல வேண்டும் என்றே தூதர்(ஸல்) அவ்வாறு கூறினார்! " என்ற முடிவோடு அஸர் தொழுகையை நிறைவேற்ற #அடுத்த பிரிவோ "பனூ குரைலாவின் பூமியை அடைந்தே நாம் அஸர் தொழுவோம்! " என கூறினாலும் முன்னைய பிரிவோடு எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடவில்லை. பின்னர் அவர்கள் பனூ குரைலாவின் பூமியை அடைந்து மஹ்ரிப் நேரம் ஆகிய நிலையில் முதலில் அஸரை தொழுதுவிட்டு பின்னர் (இரு தரப்பும் இணைந்து) மஹ்ரிப் தொழுகையை நிறைவேற்றினர்!

பின்னர் பனூகுரைலாக்களின் பூமி வெற்றி கொள்ளப்பட்டு மதீனா திரும்பியதும் சம்பவம் அல்லாஹ்வின் தூதரிடம்(ஸல்) முன்வைக்கப் பட்டது! இரு தரப்பின் நியாயங்களையும் கேட்ட அண்ணலார்(ஸல்) இந்த இரண்டு செயல்களையும் அங்கீகரித்தார்கள்.

எனவே திட்டவட்டமற்ற (லன்னி) விவகாரங்களில் முஸ்லீம் உம்மா கருத்து வேறுபாடு கொண்டாலும் அது உள்ளார்ந்த சர்ச்சைகளை, மோதல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்பதையும், தமது சர்ச்சைகளின் தீர்விடமாக (அல்லாஹ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ற)வஹியின் பாலும் அதனடி உம்மத்தை வழிநடாத்தக் கூடிய பொதுத் தலமையின் கீழ் தீர்வுக்காக முன்வர வேண்டும் எனவும் இஸ்லாம் எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் மதீனா தவ்லாவில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) நபியாகவும், ஆட்சித் தலைவராகவும் ஒரே நேரத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment