சிரியப் புரட்சி ஐந்து ஆண்டுகள் நிறைவையும் தாண்டி தொடரும் நிலையில் இன்றைய களநிலையும், நாட்டை உரிமை கோரும் சண்டைகளும் எதை நோக்கிச் செல்கின்றன என்பதை சுருக்கமாக விபரிக்கிறது இந்தக் கட்டுரை!
சிரியப் புரட்சி ஐந்து ஆண்டுகளையும் தாண்டித் தொடரும் என மிகச் சிலரே கருதினர். மிகக் கொடூரமான டமஸ்கஸ் அரசின் கொலைவெறித் தாண்டவத்தில் அரபு வசந்தத்தில் தொலைந்து போனவர்களாக சிரிய மக்கள் அடையாளப்படுத்தப்படுவர் என்றே பலரும் எதிர்பார்த்தனர். சிரிய மக்களின் புரட்சிக்கு குருதித் துளிதான் முற்றுப்புள்ளி என அனேகர் வாதாடினர். ஆனால் இன்று கதை மாற்றி எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. பஸார் அல் அஸதின் அரசும், அவனது அழிவுப்படையும் இரத்தப்பெருக்கால் அழிந்து கொண்டிருக்கிறது. பிரமாண்டமாகக் காட்டப்படும் அவனது அரியணையும், கூலிப்படையும் அவனது முன்னைய நிலையின் நிழல்கள் மாத்திரமே என்றாகி விட்டன. அரைத் தசாப்தங்களாகத் தொடர்ந்த நெடிய யுத்தம் சிரிய அரசின் சக்தியை மிகைத்து விட்டது. எதிர்காலம் அரசின் திசையில் நிச்சயமாய் இல்லை என்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. இந்நிலை அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும், புரட்சிப்படையும் பெற்ற தொடர் வெற்றிகளில் அரசின் குருதி வற்றி விட்டதன் விளைவு. இதை பல கோணங்களில் காணலாம்.
நாட்டின் நெட்டாங்கு, அகலாங்கு எங்கிலும் கிளர்ச்சிப் படைகளை ஐந்து முழு ஆண்டுகளாக எதிர்கொண்ட பஸாரின் அரசு சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. நாட்டை ஒட்டு மொத்தமாக மீளப்பெறுவதற்கு பஸாரிடம் வளம் கிடையாது. நாட்டின் சனச்செறிவு குறைந்த வடக்கு பிராந்தியத்தையும், கிழக்குப் பிராந்தியத்தையும் மீளப் பெரும் நோக்கத்தை அவன் என்றோ கைவிட்டு விட்டான். இன்று அவனின் துருப்புக்களால் பாரிய அளவிலான தரைத் படை நகர்வை மேற்கொள்ள முடியாத நிலை. வெற்றி கொண்ட பெரிய பிராந்தியங்களை தக்க வைக்க முடியாத நிலை. இன்று பஸார் தலைநகர் டமஸ்கஸ்ஸையும், மத்தியதரை கடற்கரையை அண்டிய ஓர் ஒடுங்கிய பிராந்தியத்தையும் மாத்திரம் பாதுகாத்தால் தலை தப்பியது என்று சிந்திக்கும் நிலை.
இந்த மூலாபாயமும் அலவிகளின் முக்கிய பகுதிகளை பாதுகாப்பதை மையப்படுத்தியது. அதற்கு மேலால் நாட்டின் ஏனைய பகுதிகளில் கால் வைப்பதை அகலக்காலாக அரசு நோக்குகிறது. அதற்கான பலமோ, வளமோ அதற்கு கிடையாது. 2016, மார்ச் மாதத்தில் நடந்த “battle of Palmyra – பல்மீறா பகுதியை மீட்பதற்கான சமர்” இதற்கு ஓர் நல்ல எடுத்துக் காட்டு. இந்தச் சமர் முழுக்க முழுக்க சிரியத்துருப்புக்கள் அல்லாத அந்நிய உதவிப்படைகளால் தான் நடாத்தப்பட்டது. நாடெங்கும் போராடத்தேவையான சொந்தப்படை சிரிய அரசிடம் இல்லை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பஸாருக்கு உதவி வரும் பல்தேசிய படைகளின் உதவியால் தான் பல்மீறா பகுதி மீளப்பெறப்பட்டது. யு.கே இன்டிபென்டண்ட் பத்திரிகை இது குறித்து குறிப்பிடும்போது, “ புகைப்படங்களின் ஆய்வு, சமூக வளைத்தளங்களின் இடுகைகள், ஈரானிய, ரஸ்ய ஊடகங்கள், ஏன்; சிரிய ஊடகங்கள் கூட நகர்வு ரஸ்யப்படைகளால் வழிநடாத்தப்பட்டதை, கூடுதலான எடுபிடி வேலைகள் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படை ஜெனரலுக்கு கீழ் இயங்கிய ஆப்கானிய, ஈராக்கிய ஷிஆ இராணுவச் சிப்பாய்களால் மேற்கொள்ளப்பட்டதை தெரிவிக்கின்றன.” [1]
பஸாரின் துருப்புக்களின் எண்ணிக்கை இந்த ஐந்து வருடங்களில் மிக அதிகளவில் குறைந்துள்ளது. நாட்டை உரிமை கொண்டாட பஸாரின் இராணுவம்தான் அவனது துரும்புச் சீட்டு. அதுதான் முற்றுகைகளைத் தொடரவும், மனிதப்படுகொலைகளை புரியவும், வான்வெளித்தாக்குதல்களை நிகழ்த்தவும் அவனுக்கு உதவி வந்தது. சிரிய அரசின் குண்டுகளும், ஏவுகணைகளும் பல இலட்சம் மக்களை காவு கொண்டது மாத்திரமல்லாது முற்றாக அழிந்து சுடுகாடாய்போன ஹீம்ஸ்(Homs) போன்ற நகர்களை தரைப்படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியது. எனினும் போரின் ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க, துருப்புக்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், படுகாயங்களால் ஏற்பட்ட அங்கவீனங்கள், இராணுவத்திலிருந்து சிப்பாய்களின் விலகி ஓடுதல்கள், தொடர்ந்தேர்ச்சையான இராணுவத் தோல்விகள் போன்றன அதிகரித்து சிரிய இராணுவத்தின் ஆளுமை வெகுவாக சரிந்துள்ளது. சில கணிப்புக்கள் ஆரம்பத்திலிருந்த 300,000 இராணுவத்திலிருந்து தற்போது 150,000 இராணுவத்தினர்தான் மிஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. தனது இராணுவக் களநிலை மிகவும் பலகீனமாக உள்ளதை உணர்ந்த பஸார் வேறு வழியில்லாமல் தனது அலவி ஆதரவாளர்களிடம் இதுபற்றி தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டான். தனது அரசு மிக அதிகளவான இராணுவத் தோல்விகளைச் சந்தித்தது என்பதை அவன் ஒப்புக்கொண்டான். மே, 2015 இல் ஆற்றிய ஒரு உரையில் முதல்முறையாக தனது “வெற்றி வெற்றி” என்ற பாட்டை நிறுத்தி மயக்கம் தெளிந்த சில வார்த்தைகளை உதிர்த்தான் “ இன்று நாங்கள் ஓர் போரில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். ஒரு சமரிலல்ல. போர் என்பது ஒரு சமர் அல்ல. மாறாக அது பல சமர்களின் கோர்ப்பு. சமர்களைப் பொருத்தமட்டில் முன்னேற்றங்களும், பின்வாங்குதல்களும், வெற்றிகளும், தோல்விகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் யாதார்த்தமானதாகும்.” [2]
பஸாருக்கு தானே தொடுத்த யுத்தத்தை தொடர முடியாது போய் முற்று முழுதாக பிற சக்திகளிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை. கடந்த ஒக்டோபர் 2015 இல் ரஸ்யா, சிரிய போருக்குள் நேரடியாக மூக்கை நுழைத்தது சடுதியாக சரிய இருந்த பஸாரின் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் தருணத்திலேதான். அலவிகளின் பலப்பிராந்தியமான லடாக்கியாவை நோக்கி கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் நடாத்த முன்னேறியிருந்த வேளைகள் இனிமேல் முழுமையாக பிறரின் தயவில் தான் பஸாரின் வண்டி ஓடும் என்ற நிலையை நிரூபித்தன. முதல் தடவையாக, ரஸ்ய விசேட படைகள் மாத்திரமல்லாது விலாதிமிர் புட்டினுடன் தொடர்புடைய கூலிப்படைகளும் சிரிய போர் முன்னரங்குகளில் போராடி வருவது வெளிச்சத்துக்கு வந்தது.[3] ஈரானிலுள்ள ஆப்கானிய ஷிஆப் போராளிகள், குறிப்பாக ஈரானிலுள்ள ஆப்கானிய ஹஸாரா அகதி மக்களைச் சேர்ந்த பல போராளிகள் மடிந்து வரும் செய்திகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கின.[4] பாக்கிஸ்தானிய ஷிஆ போராளிகளின் பங்களிப்புக்கள் பற்றிய தகவல்களும் இடைக்கிடையே வந்து மறைந்தன. இந்தத்தகவல் ஈரானில் அந்தப் போராளிகளின் மரணச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊர்ஜிதம் செய்யபப்பட்டது. ஈரானியப்படைகளும், ஆப்கானிய, பாக்கிஸ்தானிய ஷிஆ போராளிகளும், ரஸ்ய விசேட மற்றும் கூலிப்படைகளும் தான் தற்போது அல் அஸாத் தொடரும் ஈனப்போருக்கு முதுகெழும்பாக இருக்கின்றன.[5]
பஸார் அல் அஸதின் ஆதரவுத்தளம் முழுச் சனத்தொகையில் வெறும் 12 சதவீதத்தையும் தாண்டாது. எனவே இராணுவத்தை விட்டு தப்பி ஓடிய, கொல்லப்பட்ட, அங்கங்களை இழந்த துருப்புக்களை மீண்டும் ஈடுசெய்வதற்கு இந்த ஆதரவுத்தளத்தில்தான் அஸாத் தஞ்சம் புக வேண்டும். போர் நீழ நீழ இந்த ஆதரவுத்தளமும் அதி வேகத்தில் சுருங்கிக்கொண்டே செல்லும். இடம்பெற்ற முழுப்போரையும் உற்று நோக்கினால் இராணுவத் தட்டுப்பாடு பஸாருக்கு தொடர்ந்து இருந்துகொண்டெ இருக்கிறது. ஆரம்பத்தில் தேசிய பாதுகாப்புப் படை (NDF) என்ற ஒரு அணியை உருவாக்கி இந்நிலை எதிர்கொள்ளப்பட்டது. பின்னர் பஸாருக்கு ஹிஸ்புல்லாஹ்வின் கை தேவைப்பட்டது. அதன் பின்னர் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப்பாதுகாப்புப் படை (IRGC) நேரடியாக தனது ஆதரவை வழங்கியது. பின்னர் இராணுவத்தினரின் உயிரிழப்புக்கள் அதிகரிக்கத் தொடங்க இராணுவம் ஈராக்கிய ஷிஆ போராளிகளையும், ஆப்கானிய ஷிஆ கூலிப்படைகளையும் துணைக்கு அழைத்தது.
உள்நாட்டுக்குள்ளும் அரசுக்கு ஆதரவு வட்டம் சுருங்கிக்கொண்டே வருகிறது. சிரியாவில் வாழும் துருஸ்(Druze) சமூகத்தினர் கூட அரசிலிருந்து சற்று ஒதுங்கியே நிற்கிறார்கள். அவர்கள் செறிந்து வாழும் சுவைதா பிராந்தியத்திலிருந்து தமது இளைஞர்கள் வெளியேறி அரசுக்காக நாடு தழுவிய ரீதியில் போராடுவதை அவர்கள் விரும்பவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலால் அலவி சமூகமும் மிகவும் களைப்படைந்து போயிருக்கிறது. பஸாருக்காக போராடக்கூடிய மிகக் குறைந்த ஆண்மக்களே அவர்களிடமும் உள்ளது. பஸாரின் இந்த கையறு நிலை மாறப்போவதில்லை. எனவே வெளிநாட்டுப் போராளிகளின் காலைப் பிடிக்க வேண்டியது அவனது தலைவிதியாகி விட்டது. சுருங்கக்கூறின், பஸார் அல் அஸதின் அரசு இன்று வரை மூச்சுத்திணறித் திணறி நிலைத்து நிற்பது வெளிநாட்டு ஆதரவினால் மாத்திரமே. மேற்குலக நலனை பாதுகாக்க டமஸ்கஸ்ஸிலுள்ள அவனது அரசின் இருப்பு எதுவரை தேவைப்படுகிறதோ அதுவரை இந்த ஆதரவும் தொடரும் என்பதே இன்றைய யதார்த்தம்.
No comments:
Post a Comment