அர்துகானை உள்ளதில் நல்லதாக ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அதேவேளை, இன்னொரு கூட்டமோ அர்துகானிற்கு அப்பால் ஒரு நல்லது இல்லவே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றது. இந்த இரண்டாம் நிலைப்பாடு ஆரோக்கியம் இல்லாத ஒரு நிலைப்பாடு; அது அர்துகான் என்ற மனிதனின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் நியாயமான விமர்சனங்களைக்கூட பரிசீலனை செய்யவும் ஏற்கவும் மறுக்கின்ற ஒரு நிலைப்பாடு.
பொதுவாக இஸ்லாமிய அரசியல் குழுக்களுக்கு மத்தியில் தங்கள் இலக்குகள் தொடர்பாக கருத்துவேறுபாடுகள் எதுவுமில்லை. (இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவதே அனைவரதும் இலக்கு.) இலக்குகளை அடைவது தொடர்பான வழிமுறைகள் தொடர்பாகவே அநேக முரண்பாடுகள் காணப்படுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், பாராளுமன்ற ஜனாநாயக முறையினூடாக ஒரு இஸ்லாமிய ஆட்சியினை நிறுவுவது சாத்தியம் என்று நம்புகின்றார் அர்துகான். எனவே இவ்வாறன வழிமுறையில் நம்பிக்கை கொண்டோர் பொதுமக்களின் அமோக ஆதரவைத் தம் பக்கம் வைத்திருப்பதிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றார்கள்.
இந்த வழிமுறையை (எனவே அர்துகான் போன்றோரை) விமர்சிப்போரின் நிலைப்பாடு பின்வருமாறு காணப்படுகின்றது:
உண்மையான ஆட்சிமாற்றம் இராணுவத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே தங்கியுள்ளது; அது வெறுமனே மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் அல்ல.
இதற்கு உதாரணமாக தென்னமெரிக்காவில் இடம்பெற்ற அத்தனை இராணுவப்புரட்சிகளையும் பட்டியல் இடுகின்றார்கள் இவர்கள். அதுமட்டுமல்லாது, அல்ஜீரியா, பாலஸ்தீன், அண்மையில் எகிப்து போன்ற முஸ்லிம் நாடுகளிலும் கூட இராணுவத்தின் ஆதரவு தங்கள் பக்கம் இல்லாததால் தேர்தல்களில் அமோக வெற்றியீட்டிய இஸ்லாமியக் கட்சிகள் எவ்வாறு அதிகாரத்தைப் பிடிக்கமுடியாமல் போயின என்பதையும், பின்னர் எவ்வாறு இராணுவங்களால் துவம்சம் செய்யப்பட்டன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இந்தக் கருத்துமுரண்பாட்டின் தொடர்ச்சியையே “அர்துகான் எவ்வாறு இராணுவப் புரட்சியிலிருந்து தப்பித்துக்கொண்டார்?” என்ற கேள்விக்கான விடையிலும் அவதானிக்க முடிகின்றது.
பொதுமக்களே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அர்துகானிய சிந்தனையாளர்கள். இல்லை! இராணுவத்தில் ஒரு பகுதியே இந்தப் புரட்சியைத் தோற்கடித்தனர் என்கின்றனர் அவரின் அரசியல் போராட்ட வழிமுறையை விமர்சிப்போர்.
இதில் எந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது? பொதுவாக இராணுவங்கள் “ரோபோக்கள்” போன்றவவை. அவற்றிடம் மனிதாபிமானச் சிந்தனைகள் இருப்பதில்லை. சுடுவது, கொல்லுவது, எரிப்பது அவர்களின் தொழில். சீனாவின் தினமன் சதுக்கத்திலும் எகிப்தின் அந்-நஹ்தா சதுக்கத்திலும் இதை நம்மால் காணமுடிந்தது.
துருக்கியில் முயற்சிக்கப்பட்ட இராணுவப் புரட்சியை எதிர்த்து மக்கள் வெள்ளமாக வீதிக்கு இறங்கியது உண்மை. ஆனால், புரட்சிசெய்த இராணுவத்தினரின் யுத்ததாங்கிகளை நிறுத்தியது மக்கள் அல்ல! அது துருக்கிய இராணுவத்தினரின் மற்றொரு பகுதியினரே! புரட்சிக்காரர்களுக்கு இராணுவத்திற்குள் பரவலான ஆதரவு இருக்கவில்லை. எனவே அர்துகானிற்கு ஆதரவான இராணுவப் பகுதியினர் தங்களின் F16 க்கொண்டு பயமுறுத்தியும், தாக்கியும் புரட்சிக்காரர்களைப் பணியவைத்தார்கள்.
இந்த இராணுவப் புரட்சியின் போது துருக்கிய இராணுவத்தின் பெரும் பகுதியினர் அர்துகானுக்கு ஆதரவாக செயற்பட்டது உண்மை. ஆனால், இஸ்ரேலுடனான ஒரு யுத்தமோ அல்லது சிரியாவில் ஒரு மனிதாபிமானத் தலையீடோ என்று வருகின்றபோது இந்த இராணுவம் அர்துகானுக்கு எந்த அளவிற்கு ஆதரவு வழங்கும் என்பதில் பெரும் சந்தேகம் இருக்கின்றது. அர்துகான் ஏற்கனவே இஸ்ரேலுடனான சுமுக நிலையைப் பேணிவருவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம்.
From Mohamed Faizal
No comments:
Post a Comment